டேராடூன், ஆக. 20- மதரசா வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத மதரசா பள்ளிகள், அடுத்தாண்டு ஜூலை 1க்குள் மாநில கல்வி வாரியத்தில் இணைய வேண்டும். இல்லையெனில், அவை மூடப்படும் என, உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது.
உத்தராகண்டில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ‘மதரசா’ எனப்படும் இஸ்லாமிய கல்வியை கற்றுத் தரும் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகள், மதரசா வாரியத்தின் கீழ் இயங்குகின்றன.
இந்நிலையில், உத்தராகண்ட் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மசோதா – 2025அய் அறிமுகப்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து, இனி சீக்கியர், ஜெயின், பவுத்த, கிறிஸ்துவ, பார்சி ஆகிய சமூகங்களுக்கும் வழங்கப்படும்.
முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், உத்தராகண்ட் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மசோதா – 2025க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, உத்தராகண்டில் தற்போது நடக்கும் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளித்தால், 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். இந்த புதிய மசோதாவின்படி, உத்தராகண்டில் மதரசா வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத மதரசா பள்ளிகள், மாநில கல்வி வாரியத்தில் இணைந்து, சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை பெற வேண்டும். இல்லை எனில், அவை நிரந்தரமாக மூடப்பட வேண்டிய சூழல் உருவாகும்.
அன்புமணிக்கு ராமதாஸ் நோட்டீஸ்; பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை
சென்னை, ஆக. 20- அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சார்பில், தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில், அன்புமணி தலைமையில் கடந்த 9ஆம் தேதி நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், அவரது தலைவர் பதவியை, ஓராண்டுக்கு நீட்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் 17.8.2025 அன்று நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழுவில், ராமதாசே, கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருப்பார் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த கூட்டத்தில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், 2024 டிசம்பர் 28இல் நடந்த பொதுக்குழுவில் மைக்கை துாக்கி போட்டு, ராமதாசை எதிர்த்து பேசியது; பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது; ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு மாவட்டச் செயலர்களை வரவிடாமல் தடுத்தது உட்பட, அன்புமணி மீது, 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, ராமதாஸ் சார்பில் அன்புமணிக்கு, தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘குற்றச்சாட்டுகளுக்கு ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்; இல்லையேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.