வ.ரமணி
சமூகச் செயல்பாட்டாளர்
தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஜாதி ஆணவப் படுகொலை குற்றத்தைத் தடுத்திட தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கை பற்றி வலுவாகப் பேசப்படுகிறது. இதுதொடர்பான விவாதங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. ஜாதியும் குடும்பமும் ஆணாதிக்கமும் சொத்து உடைமையும் குற்றச்செயல்களின் பின்னணியில் இருப்பதை அண்மையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் மரணம் உணர்த்துகிறது. இந்நிலையில், ஆணவப் படுகொலைகளில் குடும்பங்கள், பெற்றோர்களின் பங்கு குறித்து நாம் பேச வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது.
ஆதிக்கம் செய்யும் ஜாதி
“அவங்க கீழ் ஜாதி.. நமக்கும் அவங்களுக்கும் ஒத்துவராது. அவங்க வேற, நாம வேற எப்படி ஒத்துப்போகும்?” என்கிற ஜாதியத் தீண்டாமைப் பாகுபாடுகள்தான் மனித உறவுகளுக்கு முதன்மை அளவுகோலாக ஆக்கப்படுகின்றன. ஜாதி, உயிர் வாழும் இடம் என்றால், அது குடும்ப அமைப்பே. குடும்பம் வழியாகவே ஜாதிச் சமூகப் படிநிலை நடைமுறைப்படுத்தப்படுகிறது. உறவுகளைப் பேணுவதில், பிள்ளைகளை வளர்ப்பதில் ஜாதியின் வேரை நிலைநிறுத்தக் குடும்பம் முயன்றுகொண்டே வருகிறது. காதல் திருமணத்தில் பெண்ணின் விருப்பம், ஆணின் விருப்பம் என்கிற நிலை வரும்போது குடும்பமும் ஜாதியும் முக்கியப் பங்காற்றுகின்றன. இது பெண்ணை மட்டுப்படுத்துவதோடு நிற்காமல், ஆணையும் கட்டுப்படுத்தியே இயங்க வைக்கிறது. அவற்றை மீறுகின்ற குடும்பங்களை, நபர்களைத் தண்டனைக்கு உட்படுத்துகிறது ஜாதி. ஜாதியச் சமூகம் கொடுக்கக்கூடிய தண்டனையைவிடச் சொந்தப் பிள்ளைகளுக்குத் தாம் கொடுக்கும் தண்டனை எளிதானது; ஜாதியச் சமூகத்தில் தாம் குற்றவாளியாக நிற்பதைவிட, ஜாதியச் சமூகத்தோடு இணைந்து தாமும் தண்டனை விதிப்பவர்களாக மாறலாம் என்றே குடும்பங்களும் உறவினர்களும் பெற்றோர்களும் முடிவெடுக்கிறார்கள்.
குடும்ப கவுரவம், ஜாதி கவுரவம், சொத்துப் பாதுகாப்பு என்கிற அச்ச உணர்வோடும், தங்கள் மகள் தாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்ற ஆணாதிக்க உணர்வோடும் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே, ஜாதியினரின், உறவினர்களின் ஏச்சுப் பேச்சால், கூலிப்படைகள் மூலமாகக் கொலைசெய்யும் எண்ணத்துக்கு ஆட்படுகின்றன குடும்பங்கள். ‘ஜாதி சனம் என்ன சொல்லும் ? ஜாதி கவுரவம்தான் முக்கியம்’ என்கிற எண்ணம்தான் இதற்கெல்லாம் அடிப்படை.
முன்மாதிரியான பெற்றோர்
‘நவீன நாகரிக சமூகத்தின் வளர்ச்சியை, வாழ்க்கை மேம்பாட்டை ஏற்றுக்கொள்கிற நாம், நம் பிள்ளைகளின் காதலை, திருமணங்களை ஏற்றுக்கொள்வதில் இன்னும் பழமைவாதிகளாகவே நீடிக்கின்றோமே ஏன்?’ என்கிற கேள்வியை ஒவ்வொரு பெற்றோரும் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. பிள்ளைகளின் எதிர் காலம்தான் முக்கியம் என்று வாழக்கூடிய பெற்றோர் களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், அவை எண்ணிக்கையில் குறைவுதான். சகோதரத்துவ, ஜனநாயகப் பண்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே வளர்ச்சி அடையக்கூடிய சமூகத்தின் தேவையாக இருக்கிறது.
ஜாதிக்கொரு சங்கம் என்கிற நடைமுறை, சமூகத்திலும் குடும்பத்திலும் ஏற்படுகிற மாற்றத்துக்குத் தடையாக இருப்பதோடு, பெற்றோரை நிர்ப்பந்தித்துக் குற்றவாளியாக்குகிறது.
கொஞ்சம் பெருந்தன்மையான பெற்றோர்கூட, “நாங்க விட்டுடுவோம். ஆனா, எங்க ஜாதி சங்கம் எங்களை விடாது. அழைத்து அபராதம் விதிப்பார்கள். எல்லோர் முன்பும் கைகட்டிப் பதில் சொல்லவைத்து அவமானப்படுத்துவார்கள். சங்கத்தைவிட்டு எங்களை ஒதுக்கிவைப்பார்கள். அதுதான் எங்களுக்குப் பயமாக இருக்கிறது” என்று பேசுவதைப் பார்த்திருக்கிறோம்.
ஜாதி உணர்வை எல்லாம் தாண்டி, பெண்ணின் காதல் திருமணத்துக்குச் சம்மதம் இருந்தாலும், அதைக் கடந்து பெண்ணின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தடையாக இருப்பது, அவர்கள் சார்ந்த ஜாதிச் சங்கமும் அச்ஜாதிச் சங்கம் விதிக்கும் கட்டுப் பாடுகளும்தான். ஆனால், அதையெல்லாம் கடந்து சுயசிந்தனையோடு இயங்கும் பெற்றோர், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் குடும்பத்துடன் சுமுகமான உறவைப் பேணிவருவதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற எண்ணற்ற பெற்றோர் ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களை ஏற்றுக் கொண்டு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.
சில வேளைகளில், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரில்கூட – வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந் தவர்கள் திருமணம் செய்துகொண்டால், அவர்களை ஊரைவிட்டு விலக்கிவைக்கும் பழக்கம் சில இடங்களில் இருக்கிறது. இதுபோன்ற தருணங்களில், ஜாதியப் பஞ்சாயத்தார் இனி வேறு எவரும் ஜாதி மீறிக் காதலிக்கக் கூடாது என்ற அச்சத்தை விதைப்பதன் மூலம் காதலை, அன்பைக் குற்றமாக்குகிறார்கள். இது போன்ற தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கின்றனர். ஆனால், அது வெளியே தெரிவதில்லை.
மாற்றத்துக்கான தேவை
இதற்கு நேர்மாறாக, இன்னொரு வாழ்க்கை முறை இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பல ஜாதிகளும் கலந்து திருமணம் செய்துகொண்டு வாழும் குடும்பங்கள் நிறைய உருவாகி வருகின்றன. அமைதியாக அந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது சமூகத்தின் பொது அம்சமாக மாற வேண்டியதை நோக்கித்தான் இன்றைய காதல், ஜாதி மீறிய, மதம் மீறிய திருமணங்கள் சென்று கொண்டிருக்கின்றன. சமூகத்தில் ஏற்படுகிற பொருளாதார மாற்றங்களும் நகர வளர்ச்சியும் அதை நோக்கித்தான் நகர்கின்றன. இதன் தொடர்ச்சியாக, பெற்றோரும் குடும்பங்களும் ஜாதியைக் கடந்து குடும்ப, திருமண உறவுகளை அமைத்துக்கொள்வது தவிர்க்க முடியாததாக ஆகிறது.
பிள்ளைகளின் விருப்பத்தை ஏற்று ஜாதி கடந்த சமத்துவ வாழ்வை மலரச் செய்வது நம் அனைவரின் கடமை. இதைப் புரிந்துகொண்டு, சமத்துவ வாழ்வைப் பேணும் பெற்றோரின் எண்ணிக்கை இச்சமூகத்தில் அதிகரிப்பது அறிவியல்பூர்வமான மாற்றத்துக்கு வழிவகுக்கும்.ஜாதி வெறி ஆதிக்கத்தோடு வெட்டுக் குத்து, கொலை என்று தங்கள் வாழ்க்கையையும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிதைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாத ஒரு பண்பாட்டு மாற்றத்தைக் குடும்பங்களிலும் பெற்றோர் மனங்களிலும் உருவாக்க வேண்டும். அதற்குரிய விழிப்புணர்வைக் கிராமங்கள், நகரங்கள்தோறும் பள்ளிகள், கல்லூரிகள் தோறும் அரசு முன்னெடுப்பது அவசியமாகிறது. இதற்குத் தடையாக இருப்பவர்களிடமும் உரையாடல் நிகழ்த்தி மனமாற்றம் ஏற்பட வைக்க வேண்டும்.
நன்றி: ‘இந்து தமிழ் திசை’ 19.8.2025