சென்னை, ஆக.19 ஜப்பானியப் பழங்குறுநூறு நூல் அறிமுகவிழா 17.08.2025 அன்று சென்னை, கவிக்கோ அரங்கில் நடைபெற்றது.
‘‘பெரியார் வாழ்க்கை வரலாறு’’, ‘‘வைக்கம் வீரர்’’ ஆகிய தமிழ் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர் ச.கமலக்கண்ணன். இவர் ஜப்பானில் பணிபுரிந்து வருகிறார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்களை ஜப்பானில் கொண்டாடி, அதற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஜப்பானிற்கு அழைத்த குழுவில் இவர் முக்கியப் பங்காற்றியவர்.
ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் இடையான இணைப்புகள் குறித்துப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். அதனைத் தொடர்ந்து ஜப்பானிய மொழியின் இலக்கியங்கள் குறித்து விரிவான நூல் ஒன்றை இவர் எழுதியுள்ளார்.
அதன் அறிமுகவிழா 17.8.2025 அன்று கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. மக்கள் சிந்தனைப் பேரவை ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்குச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்மொழித் துறைத் தலைவர் முனைவர்
ய. மணிகண்டன் தலைமை வகித்தார். ந.அன்பரசு வரவேற்றுப் பேசினார். முனைவர் பாரதி கிருஷ்ண குமார் நூலை அறி முகப்படுத்தி உரையாற்றினார்.
ஏற்புரை வழங்கிய தோழர் ச.கமலக்கண்ணன், மூன்றரை ஆண்டுகால உழைப்பில் விளைந்த இந்நூலுக்கு வித்திட்ட மருத்துவர் இரா. கலைக்கோவன், நூலைப் பதிப்பிக்க உதவிய தோழர் த.ஸ்டாலின் குணசேகரனுக்கு நன்றி கூறினார். நூலின் உள்ளடக்கத்தை விளக்கியும், ஜப்பான் பழங்குறுநூறு இலக்கியத்தை அறி முகப்படுத்தியும் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்வில் முனைவர் ஜெ. ஜெய ரஞ்சன், நீதியரசர் ஜியாவுதீன், வழக்கு ரைஞர் காந்தி பாலசுப்ரமணியம், எழுத்தாளர் கோவி.லெனின், முனைவர் நெல்லை சுப்பையா, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், இலக்கிய ஆர்வலர் ரேகா (நாயர்), இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சிவமுத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். நிகழ்வைத் தோழர் பவித்ரா தொகுத்து வழங்கினார்.