சென்னை, ஆக.19 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027 ஆகஸ்ட் வரை உள்ள நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் தனது பதவியிலிருந்த கடந்த ஜூலை 21-ம் தேதி திடீரென பேசினார். அவரது பதவிவிலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, மத்திய அரசிதழிலும் அதுகுறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய் வதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கியது. போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சி.பி. ராதாகிருஷ்ணன்
இந்த சூழலில்தான், டில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தற்போது மகாராட்டிரா ஆளுநராக உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று (18.8.2025) சந்தித்து வாழ்த்து பெற்றார். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவராக ஒருமித்த கருத்துடன் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் பாஜக தலைமை முனைப்புடன் உள்ளது. இதற்காக, இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் அழைத்து ஆதரவு கோரியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இண்டியா கூட்டணியில் உள்ள பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களையும் தொலைபேசியில் அழைத்து அவர் ஆதரவு கோரி வருகிறார்.
மு.க. ஸ்டாலினுடன் ராஜ்நாத்சிங் பேச்சு
அந்த வகையில், இண்டியா கூட்டணியின் முன்னணி தலைவர் களில் ஒருவரான தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலினை ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. திமுகவுடன் கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் அவர் தொலைபேசியில் உரையாடி, ஆதரவு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முக்கிய தலைவர் களுடனும் ராஜ்நாத் சிங் பேசி, ஆதரவு திரட்டி வருகிறார்.