ஈரான்–இஸ்ரேல் இடையே மீண்டும் போர் தொடங்கலாம்

தெஹ்ரான், ஆக. 19- ஈரான் மற்றும் இஸ்ரேலுக் கிடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. “எந்நேரமும் போர் தொடங்கலாம்; அதற்குத் தயாராக இருக்க வேண்டும்” என ஈரான் துணை அதிபர் முகமது ரிலா ஆரிப் எச்சரித்துள்ளார்.

போர் நிலை

இஸ்ரேலுடன் கடந்த ஜூன் மாதத்தில் 12 நாட்கள் நீடித்த தாக்குதலுக்குப் பிறகு, தற்போது இரு நாடுகளும் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தியுள்ளன. ஆனால், இதைச் சண்டை நிறுத்தமாகக் கருத முடியாது என்றும், எந்தவொரு அதிகாரப்பூர்வ ஒப்பந்தமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஈரானின் அதிபர் மற்றும் தலைமை மதகுரு ஆயத்துல்லா அலி கமேனியின் ஆலோசகர் யஹ்யா ரஹீம் சஃபவி, “நாங்கள் மிக மோசமான சூழ்நிலைக்கு தயாராக திட்டமிடுகிறோம்” என தெரிவித்தார். “இது சண்டை நிறுத்தம் அல்ல; போர் நிலைதான். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கலாம்” என்றார்.

மேலும், ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை மீண்டும் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. அய்க்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் அளவுகள் 2015 ஒப்பந்த வரம்புகளை மீறுவதாக எச்சரித்துள்ளது.

காஸாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்

காஸா. ஆக. 19- காஸாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு ஹமாஸ் இயக்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தமது வசம் உள்ள பிணையாளிகளில் பாதிப் பேரை விடுவிக்கவும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் சிலரை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் இந்த சண்டைநிறுத்த ஒப்பந்தத்துக்கு இணங்கியதை சமூகவலைதளத்தில் உறுதிப்படுத்தியதாகவும், இது குறித்து பாலஸ்தீனக் குழுக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை அதிக உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ஹமாஸின் பரிந்துரையைப் பெற்றதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் ஆதரவோடு, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இந்த சண்டைநிறுத்த ஒப்பந்தத்துக்கு மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இந்த ஒப்பந்தம் காஸாவில் 15 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் மோதலுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *