லண்டன், ஆக. 19- இங்கிலாந்தில் இந்த ஆண்டு சிக்கன்குனியா நோய் பாதிப்பு கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 2024 ஆம் ஆண்டில் 27 பேருக்கு மட்டுமே இந்நோய் ஏற்பட்டிருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 73 ஆக உயர்ந்திருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நோய் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், இந்தியா, இலங்கை, மொரீஷியஸ் போன்ற வெப்பமண்டல நாடுகளுக்குச் சென்று திரும்பும் பயணிகளே என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கொசுக்களால் பரவும் இந்த நோய், இங்கிலாந்தில் இந்த ஆண்டின் உள்ளூர் பாதிப்புகளையும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நோய் பாதிப்புடன் வந்தவர்களால் உள்ளூரில் 31 பேருக்கு இந்த ஆண்டு சிக்கன்குனியா பரவியுள்ளது. இங்கிலாந்தில் சிக்கன்குனியாவைப் பரப்பும் வகைக் கொசுக்கள் இல்லை என்றாலும், பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது.
சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான மூட்டு வலி, காய்ச்சல், மூட்டு வீக்கம், தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தோல் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் ஏற்படும். முதன்முதலில் 1950களில் தான்சானியாவில் இந்த நோய் கண்டறியப்பட்டது. “சிக்கன்குனியா” என்ற பெயர், பாதிக்கப்பட்டவர்கள் நிமிர்ந்து நடக்க முடியாமல் வளைந்து நடப்பதைக் குறிக்கிறது.
உலகளவில், சிக்கன்குனியா நோய் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. பிரேசிலில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 1,85,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் 16 நாடுகளில் 2,40,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அபாயகரமான சூழலைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து திரும்புபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.