மன நலன் பேணுவோம்!

5 Min Read

மகளிர் அரங்கம்

உடல் நலனைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில் தயக்கமோ கூச்சமோ இல்லாத நாம், மனநலன் என்று வந்துவிட்டால் மட்டும் அதை மறைக்க என்னென்னவோ முயற்சி செய்கிறோம். அலுவலக இடைவேளைகளில் உணவு நேரம் போது கொஞ்சம்கூடத் தயக்கமே இல்லாமல் சக ஊழியர்கள் யாருக்காவது ரத்த அழுத்தம் அல்லது மைக்ரெயின் வந்துவிட்டால், உடனே தங்கள் அனுபவங்களைத் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

நண்பர்கள்கூட மருத்துவராக மாறி, ஆலோசனையும் சொல்வார்கள். ஆனால் அதுவே மனநலன், மனச் சோர்வு என்று வந்துவிட்டால்,  அதைச்  சொல்ல , மருத்துவரிடம் பேசத் தயக்கம்.

அலுவலகத்தில் இலவசமாக மனநல ஆலோசகரிடம் பேச வசதிகள் இருந்தாலும், பேசியது எல்லாம் அந்தரங்கமாகவே இருக்கும் என்றாலும் ஒரு தயக்கம் இன்னும் இருப்பதன் காரணம் என்ன?

மனநலம் சாதாரணமான மனச்சோர்வு முதல் மனச்சிதைவு,  ஸிகிஸோஃபிரினியா, சைக்கோசிஸிஸ் போன்ற பலவகை படிமானங்களைக் கொண்டு உடல்நலத்தில் எத்தனை பிரிவுகளும் நோய்களும் உள்ளனவோ அதேபோல பலவகைப் பிரிவுகளும்  நோய்க்கூறுகளும் கொண்டது. ஆனால், பலரும் சின்ன சின்ன சாதாரணப் பிரச்சினை சொல்ல வந்தால்கூட அதை ஏதோ குணமாக்க முடியாத பெரிய தொற்று போல ஒதுக்கிவிடுவதைக் காணலாம். அதிலும் திருமணமாகாத பெண் என்றால் கல்யாணச் சந்தையில் விலைபோக மாட்டாளோ என்று ஒதுக்கும் காலம்கூட இருந்தது!

வீட்டு வன்முறை முதல், பாலியல் சீண்டல்கள், சொல்ல முடியாத துயரங்கள் மனதுக்குப் பிடிக்காத செயலைச் செய்யும் போது உண்டாகும் மன அழுத்தங்கள் நாளடைவில் மனச் சோர்வையும் மனச்சிதைவையும் உருவாக்கும்.

முன்பெல்லாம் மாணவியரிடையே நடக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், அப்போதைக்குச் சின்ன அடிதடிகளாக மாறினாலும், ஆசிரியர்கள் தலையிட்டுப் பின் பெற்றோர் கண்டித்து உடனே கைகுலுக்கி நண்பர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது அவை காணொலிகளாக  மாறுகின்றன. வேறொரு மாணவரோ மாணவியோ அதிகப் பரபரப்புக்கு அதை வலையேற்றம் செய்ய அது தீயாகப் பரவுகிறது. குழந்தைகளின் உறவு, அக்கம் பக்கம், சமூக நண்பர்கள் சில சமயம்  ஊடகங்களில்  பேசுமளவுக்குக்கூட செய்தியாக மாறுகிறது.

ஒருவழியாக அடங்கிப் போனாலும், ஓர் ஆண்டு கழித்து மீண்டும் நினைவலைகளில் ஊடகம் அதைப் பகிரச் சொல்லி மீண்டும் நினைவு படுத்துகிறது! இது எந்த வகை மன அழுத்தத்தை அந்த இளம் மாணவர்களிடையே ஏற்படுத்தும், அழுத்தத்தைப் பெற்றோரிடம் ஏற்படுத்தும் அல்லது சில எதிர்பாராத முடிவுகளில் கொண்டு போகக் கூடும் என யாராவது ஒரு நிமிடம் சிந்திப்பார்களா?

மேலே சொன்ன சூழ்நிலையில் அந்தக் குழந்தைகளின் தாய் வேலைக்குச்  செல்பவளாக இருந்துவிட்டால், பணத்துக்காக இருவரும்  வேலைக்குப் போய்விட்டு  குழந்தைகளைக் கவனித்து வளர்க்காவிட்டால்,  இப்படித்தான் ஆகும் என்று இன்னொரு தீர்ப்பும் எழுதப்பட்டுவிடும். ஏற்கெனவே குற்ற உணர்வில் இருக்கும் தாய், இன்னொரு சமூகத் தீர்ப்பால் அவமானத்திற்குள்ளாகி அது என்ன  முடிவிற்குக் கொண்டுவிடும்? சோறு ஊட்டும் போது கைதவறிக் குழந்தை விழுந்துவிட, என்ன நடந்தது என்பதை ஊடகங்களில் பார்த்தோம்தானே?

இப்படித்தான் காலநிலை தொழில் நுட்ப மாறுதல்கள் எனப் பல காரணிகள் மன நலன்களைப் பாதிக்கும் காரணிகளாக இருக்கின்றன. ’எங்கள் காலத்தில் எங்களுக்கு இப்படி எல்லாம் மனநலக் கோளாறுகள் இருந்ததே இல்லை, அப்போதெல்லாம் நாங்கள் எட்டுப் பிள்ளைகள் பெறவில்லையா? எங்களுக்கென்ன போஸ்ட் பார்ட்டம்  மனச்சோர்வு வந்ததா’ எனக் கேட்காமல் இந்தக் காலம் வேறு சூழல் வேறு எனப் பேசிப் பேசி, குழந்தையுடன் தானும் ஆற்றில் விழுந்து இளம் தாய் இறந்தபின் புரிந்து கொண்டு பலன் இல்லை.  மனநலனும் உடல் நலன் போலவே புரிந்து கொள்ளக்கூடியதும் பேண வேண்டுவதும் ஒன்றாகும் என்பதை இந்த நாளில் புரிந்து கொள்வது முதல் படி!

மனநலன் பேண என்ன செய்ய வேண்டும்?

முதலாவதாகத் தூக்கம் முக்கியம். ஒரு நாளைக்கு 5 முதல் 7 மணி வரை நல்ல தூக்கம் அவசியம். நல்ல சத்தான உணவும் உடற்பயிற்சியும் இருந்தால் நல்ல தூக்கம் வரும். தூங்கச் செல்லும் முன் சிறிது நேரம் நடப்பது நல்ல புத்தகங்களைப் படிப்பது, மனதுக்குப் பிடித்த இசை கேட்பது  எனப் பழக்கங்களை மேற்கொள்ளலாம்

நல்ல சரிவிகித உணவை உண்ணப் பழகுதல்

நல்ல காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவை உண்ணப்  பழகுதல், தானியங்கள், கொழுப்பு நிறைந்த உணவு, மாவுச்சத்து குறைவான உணவு, அதிகப் புரதம் எனப் பழக்கிக் கொள்ளலாம். சிலர் மிகக் குறைந்த எரிபொருள் தரும் உணவை உண்ணுவார்கள். அது அதிகச் சக்தியைத் தராது. அதனால் களைப்பை உணரலாம்.

சமூகத்தோடு தொடர்பு கொண்டிருத்தல்

நல்ல நண்பர்கள் கொண்டிருப்பதும், சமூகத்தோடு தொடர்பு கொண்டிருப்பதும் நல்ல மனநலன் பேண அவசியம். ஏதேனும் உடற்பயிற்சி வகுப்பில் சேர்ந்து நட்பை வளர்த்துக் கொள்ளலாம். மனிதன் ஒரு சமூக விலங்கு. மனம் விட்டுச் சிரித்துப் பேசினாலே மன அழுத்தங்கள் குறையும். தனிமை தவிர்க்கப்பட வேண்டும். உதவி வேண்டுவோருக்கு நம்மாலான சின்ன சின்ன உதவிகள் செய்யலாம், அது பொருளாதாரம் சார்ந்து இருக்க வேண்டியதில்லை. இது மனநிறைவையும் தரும்.

மனதை ஒருமுகப்படுத்தும் செயல்கள்

தியானம் போன்ற வழிமுறைகளைப் பழக்கிக் கொள்ளுதல். உடலுக்கு எப்படிப் பயிற்சி அவசியமோ அதே போல இவை மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள். இது சிந்தனையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும். தியானமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. செஸ் விளையாடலாம், கோலம் போடலாம், அல்லது நூல்வேலைகள் செய்யலாம். கூர்மையான கவனிப்புத்திறன் கொண்ட வேலைகள் செய்யலாம்.

சமூகவலைத்தளங்களில் அதிகம் ஈடுபடாமல் இருத்தல்கூட ஒருவகையில் நல்லதே.

உடற்பயிற்சி செய்தல்

உடற்பயிற்சி செய்வது எப்படி மனநலனுக்கு உதவும் என்கிறீர்களா? உடற்பயிற்சி செய்யும் போது உண்டாகும் நிறைவு ஒருவகை ஹார்மோன்களை (எண்டார்பின்) சுரக்கச் செய்யும். அவை மகிழ்ச்சியை உருவாக்கும். தன்னம்பிக்கை வளர்க்க உதவும். உங்கள் மீதான உங்களுக்கு இருக்கும் கட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.

இவை அனைத்தையும் மீறி சின்ன சின்ன காரணங்களுக்காக அழுவது போல் தோன்றினால், மன ஆலோசகரை நாடி உதவி பெற வேண்டும்.

படைப்பாளர்: பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

நன்றி: ‘ஹெர் ஸ்டோரிஸ்’ இணையதளம்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *