தென்னக ரயில்வேயில் இளநிலை பொறி யாளர் பதவி உயர்வுக்கான தேர்வில் தமிழ் மொழி வினாத்தாள் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது.
விதிமுறைகளுக்கு முரணாக, தமிழ் புறக்கணிக்கப்பட்ட இந்தச் செயல், ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஹிந்தி திணிக்கப்படுவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் விதிகளின்படி, ரயில்வேயில் நடைபெறும் அனைத்துப் பதவி உயர்வுத் தேர்வுகளிலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகியவற்றுடன், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியில் வினாத்தாள் அச்சிடப்பட வேண்டும். இதன் மூலம், அம்மாநில மொழித் தேர்வர்களும் எளிதாகப் பங்கேற்க முடியும்.
சமீபத்தில் தென்னக ரயில்வேயின் இளநிலை பொறியாளர் பதவி உயர்வுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு வந்திருந்த தமிழ்நாட்டுப் பணியாளர்கள், வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தமிழ் மொழியில் வினாத்தாள் இல்லாததால், பல தேர்வர்கள் கேள்விகளைப் புரிந்துகொள்வதில் சிரமப்பட்டனர். இது அவர்களின் தேர்வை வெகுவாகப் பாதித்தது.
ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு நிறுவனங்கள் தொடர்ந்து மாநில மொழிகளைப் புறக்கணித்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் தமிழை ஒழித்து, ஹிந்தியைத் திணிக்க மும்முரம் காட்டுகின்றன. ரயில்வேயின் “ஹிந்தித் திணிப்பும், தமிழ் ஒழிப்புமே’’ இதன் நோக்கமாக உள்ளது.
தேர்வில் பாதிக்கப்பட்ட பணியாளர்கள், ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகஸ்டு 16 முதல் செப்டம்பர் 15 வரை, அலுவலக நடவடிக்கைகளில் ஹிந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, அஞ்சல் தொடர்புகள், ரயில்வே ஆணைகள், பரிந்துரைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகப் பணிகளிலும் ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தெற்கு ரயில்வேயில் ஹிந்தி பேசாத ஊழியர்கள் அதிகம் இருக்கும் நிலையில், இது எப்படி நடைமுறை சாத்தியம்? என ரயில்வே ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் ஹிந்தி பயன்பாட்டை ஊக்குவிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், தென்னிந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்களில் ஹிந்தி பயன்பாட்டை அதிகரிப்பது, மொழிச் சிக்கல்களையும், ஊழியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமையையும் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை!
மொழி என்பது ஓர் இனத்தின் பண்பாட்டு அடையாளம்! உணர்ச்சிப் பூர்வமான இந்தப் பிரச்சினையில் கை வைப்பது கடுமையான எதிர்ப்பை விலை கொடுத்து வாங்குவதாகும்!
ஒன்றிய பிஜேபி அரசு வீண் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் – எச்சரிக்கை!