டொரண்டோ, ஆக. 18- ஊதிய உயர்வு மற்றும் ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக, சுமார் 10 ஆயிரம் விமான ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளதால் ஏர் கனடா விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கனடா அரசு விமான நிறுவனமான ஏர் கனடா நிர்வாகம் ஊழியர்களோடு நடத்திய பேச்சுவார்த்தை எந்த ஒரு முடிவு எட்டாத நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க கனடா வர்த்தக உறவுக் கழகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் காரணமாக, விமானச் சேவைகள் தடைப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 19 மாலைக்குள் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று ஏர் கனடா தெரிவித்திருந்தாலும், ஊழியர்களின் போராட்டம் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஏர் கனடா விமானப் பயணச் சீட்டுகளை வைத் திருக்கும் பயணிகள், விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஏர் கனடா நிறுவனம் உலகெங்கும் 180 நகரங்களுக்கு விமானச் சேவைகளை வழங்குகிறது. நாள்தோறும் சுமார் 130,000 பயணிகள் இந்த விமானங்களில் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.