சென்னை, ஆக.18- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான அய்.பெரியசாமி கடந்த 2006-2011 காலக்கட்டத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது 2 கோடியே 1 லட்சத்துக்கு 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
அய்.பெரியசாமி மற்றும் அவரது மனைவி, மகன்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் கடந்த 2012இல் இந்த வழக்கிலிருந்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
அதேபோல கடந்த 2006-2011 காலகட்டத்தில் உளவுத்துறை அய்.ஜியாக இருந்த மேனாள் காவல்துறை தலைமை இயக்குநருக்கு தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. அங்கு வர்த்தக நோக்கில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி அதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக அந்த அதிகாரி மீது 2011இல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை கடந்த 2020இல் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக 2022இல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர்
அய்.பெரியசாமிக்கு அழைப்பாணை அளித்து வரவழைத்து 9 மணி நேரம் விசாரித்தனர்.
இந்நிலையில், அமைச்சர் அய்.பெரியசாமி, அவரது மகன் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மகள் தொடர்புடைய 6க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (17.8.2025) சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னையில் அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அய்.பெரியசாமியின் ரோஜா இல்லத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள், சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அவரது அறையில் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்போடு சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் அய்.பெரியசாமி இல்லத்திற்கு அதிகாரிகள் சென்று சோதனை நடத்த முற்பட்டபோது திமுகவினர் உள்ளே விடவில்லை. 40 நிமிடங்கள் கழித்து சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில், விவரங்கள் குறித்த தகவலை பிரிண்ட் எடுத்து கையெழுத்து வாங்குவதற்காக அய்.பெரியசாமி வீட்டிற்குள் பிரிண்டர் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல, அய்.பெரியசாமியின் வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது. அங்கும் நேற்று காலை 7.30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் வள்ளலார் நகரில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும் சோதனை நடத்தினர்.
ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை
அமைச்சர் அய்.பெரியசாமியின் மகன்
அய்.பி.செந்தில்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், பழநி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது வீடு சீலப்பாடியில் உள்ளது. இங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பட்டிவீரன்பட்டி அருகே வத்தலக்குண்டு – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சேவுகம்பட்டி பிரிவில், அமைச்சர் அய்.பெரியசாமியின் இளைய மகன் பிரபுவிற்கு சொந்தமான மில்லிலும் சோதனை நடந்தது. அங்கு துப்பாக்கி ஏந்திய சிபிஆர்எப் காவல் துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு திமுகவினர் குவிந்தனர்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் காலை 7.30 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 11 மணி நேரம் சோதனை நடந்தது.ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அய்.பெரியசாமி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
புதுடில்லி, ஆக. 18- சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் அய்.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) காவல் துறையினர் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம், இந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்குமா என்பது குறித்த முடிவு, லஞ்ச ஒழிப்புத் துறையின் பதிலுக்குப் பிறகு எடுக்கப்படும்.