வாக்குகள் திருட்டுப் பிரச்சினையைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து   செல்வப்பெருந்தகை தகவல்

2 Min Read

சென்னை, ஆக.18- ‘வாக்குகள் திருட்டு’ விவகாரத்தைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறப்படும் என்று செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.

மாவட்டத்தலைவர்கள் கூட்டம்  

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர்கள் கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று (17.8.2025) நடந்தது. கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமை வகித்தார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.வாக்குச்சீட்டு முறைகேடுகள் குறித்து பிரவீன் சக்கரவர்த்தி படங்கள் மூலம் விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில், ‘கருநாடகா, பீகார், மராட்டிய மாநில வாக்காளர் பட்டியலில் உள்ள மோசடியை ஆதாரங்களுடன் நிரூபித்த ராகுல் காந்திக்கு பாராட்டுகளை தெரிவிப்பதுடன், முறைகேடுகளுக்கு துணைபோன தேர்தல் ஆணையத்துக்கு கண்டனங்களை தெரிவிப்பது. தூய்மைப்பணியாளர்களையும், ஆதரவாகப் போராடிய ஜனநாயக சக்திகளையும் கைது செய்தது வருத்தத்திற்குரியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்பன உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரு கோடி பேரிடம் கையெழுத்து

பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

‘வாக்குகள் திருட்டு’ விவகா ரத்தை கண்டித்து மாவட்ட அளவில் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்க கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்.

தேர்தல் ஆணையம் நியாயமாக தேர்தலை நடத்த மாட்டார்கள், மக்கள் சக்திதான் செயல்படுத்த வேண்டும். தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அது ரத்தக் கம்பளம் என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் சொன்னதும். உடனடியாக கம்யூனிஸ்டு கட்சி அடிமைக்கட்சி, தேய்ந்து விட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அவர் அழைத்து நாங்கள் சென்றால் நல்ல கட்சி, சுயமரியாதை யோடு கூட்டணியில் இருந்தால் அது தேய்ந்து போன கட்சி என்கிறார்.

தி.மு.க., காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்கள் பா.ஜனதாவில் சேர இருப்பதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பகல் கனவு காண்கிறார், அவர் கனவு பலிக்காது. பா.ஜனதா தலைவர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மேனாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், செய்தித் தொடர் பாளர் கோபண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *