“தம்பி, அந்தக் கார்னர் சீட்டை அனுமாருக்கு போட்ருக்கோம்… நீங்க உக்கார்ந்துருதீக!” என்று கார்னர் சீட் தேடும் இளம் ரசிகப் பெருமக்களைக் கலக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது ஆதிபுருஷ் படத்தை வெளியிடவுள்ள நிறுவனம்.
“கார்னர் சீட் என்றில்லை சார்… ஒவ்வொரு தியேட்டர்லயும், ஒவ்வொரு ஷோ-வை அனுமாருக்கு ஒதுக்கலாம்னு இருக்கோம். உலகம் முழுக்க இருக்க எல்லா தியேட்டர்லயும் இதைக் கடைப்பிடிப்போம். ராம பக்தர்களுக்கு எங்களாலான ஒரு சின்ன மரியாத!” என்ற ரேஞ்சில் ஆதி புருஷ் படத்தை வெளியிடவிருக்கும் பட நிறுவனம் டுவிட்டரில் அறிவித்தது தான் தாமதம் – அனுமாரு சீட்டைக் கிழி கிழியென்று கிழித்துவிட்டார்கள் இணைஞர்கள். (இணைய இளை ஞர்களைத் தான் சொல்றேன்)
“அவரு தான் வாலைச் சுருட்டி தனக்குன்னு ஒரு சீட்டைப் போட்டுக்குவாரே… அவருக்கு எதுக்கு தனி சீட்?” என்று கேட்டுக் கலங்கடித்தார்கள். “ஒரு சீட் என்ன சார்… தியேட்டர் முழுக்க ஓடியாடிக் குதிக்கட்டும்… நீங்க எடுத்து வைச்சிருக்கிற படத்துக்கு தியேட்டர் நிச்சயம் காலியாகத் தான் போகுது! எங்க வேணாலும் அனுமாருக்கு சீட் போட்டுக்கலாம்” என்றும் கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள்.
ஆதி புருஷ் என்பது 16-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கும் ஒரு திரைப்படம். இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கிறதாம். கண்றாவியான அதன் கிராபிக்ஸ் காட்சிகளை, டிரைலரில் பார்த்துவிட்டு கழுவி ஊற்றினார்கள் திரை ரசிகர்கள். இப்போது கூடுதல் செலவு செய்து படத்தை வெளியிடுகிறார்களாம்.
அண்மைக்காலத்தில் ஏராளமான திரைப்படங்களில் இந்துத்துவாவினர் முதலீடு செய்துள்ளார்கள் என்கிறது ஓர் இணையத் தகவல்.
சரி, நமக்குத் தெரிஞ்ச ஒரு தியேட்டர் ஆப்பரேட்டர் கிட்ட கேட்டேன்.
”தி காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி, ஸ்வதந்திர வீர் சவர்க்கார் என்று நேரடி சங்கிப் படங்களையும், ஆதி புருஷ், பிரம்மாஸ்திரா போன்ற புராண, இதிகாசக் கதைப்படங்களையும், ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர், பி.எம். நரேந்திர மோடி, தி டாஸ்கண்ட் ஃபைல்ஸ் போன்ற இந்துத்துவ அரசியல் சார்புப் படங்களையும் தொடர்ந்து வெளியிட்டுக்கிட்டே இருக்காங்க.. தமிழ்ல கூட ’பொடுகு’ன்னு ஒரு படம் வந்திருக்குன்னு வௌம்பரம் பார்த்தேன்.”
“சார்… அது பொடுகு இல்ல…”
“சரி விடுங்க… ஏதோ ஒரு சருகு! அது கிடக்கட்டும். ஆனா எந்தப் படமும் தியேட்டர்ல ஓடல… பிரதமர்ல யிருந்து லோக்கல் சங்கி வரைக்கும் முக்கி முக்கிப் பார்க்கிறாங்க… ஒரு படமும் ஓட மாட்டேங்குது… ஆனால் படம் எடுத்து விட்டுக்கிட்டே இருக்காங்க! காசுக்கா பஞ்சம்? பணம் கிடைக்குதுன்னதும் பல்லுப் போனது… ஃபீல்டு போனது எல்லாம் இன்னொரு ரவுண்டு, தயாரிப்பாளர், இயக்குநர்னு சுத்திட்ருக்குதுக! எனக்கென்ன பயம்னா… அனுமாருக்கு சீட்டுன்னு சொல்லிட்டு, இவங்க அனுப்பிவிட்டு, நாங்க குஷன் சீட்டெல்லாம் போட்டு வச்சிருக்கோம்… அதுவந்து பிராண்டிவிட்டுப் போயிடுமோன்னு தான்!” என்றார் அந்த தியேட்டர் ஆப்பரேட்டர்.
“உங்க தியேட்டர்ல இந்தப் படம்-லாம் ஓடுமா?”
”ஓடுறதாவது.. படத்தோட டிரைலர் போட்டாலே நான் ஓடிடுவேன்னு சொல்லிட்டேன்!” என்று சிரித்தார் அந்த ஆப்பரேட்டர்.
படம் படுத்துக்கிட்டாலும், அதில இருக்கிற சில காட்சிகளையாவது சமூக ஊடகங்கள்ல சுத்தவிட்டு, வெறுப்புப் பிரச்சாரம் பண்ணலாம், பொய்களைப் பரப்பலாம்ங்கிறது சங்கிகளோட யோசனை! அப்படி சில காட்சிகள் இப்பவும் வாட்ஸ் அப்பில சுத்திட்ருக்கு!
ராமாயணம், மகாபாரதம்னு பழைய குப்பைகளை எடுத்து இவர்கள் கிளறக் கிளற… தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கத்துக்கிட்டு வில்லைத் தொட்ட தற்கு ஏகலைவன் கட்டை விரலை வெட்டி வாங்கின மாதிரி, ‘கிரிக்கெட் பந்தைத் தொட்டதற்காக ஒடுக்கப் பட்டவர் ஒருவரின் கட்டை விரலை வெட்டி எடுத் திருக்கிறார்கள் ஜாதி வெறியர்கள்’ங்கிற மாதிரியான செய்திதான் வந்துக்கிட்டிருக்கும்.
இந்தக் குப்பைகளைக் கிளறுறதுக்கு பதில், குப்பை மாதிரி பிணங்களைக் கொண்டு போய் கொட்டியிருக்கிற ஒடிசா ரயில்விபத்துல இறந்தவங்களோட சடலங்களைப் போய் கிளறுங்க… அஞ்சாவது படிக்கும் மாணவன் தேபஷிஷ் பத்ரா, காராவைச் சேர்ந்த இளைஞன் பிஸ்வஜித் மாலிக் மாதிரி இன்னும் சில உயிர்களாவது கிடைக்கும்.
– குப்பைக் கோழியார்