சட்டமன்ற விடுதிக்குள் அத்துமீறி நுழைவதா? அமலாக்கத் துறையினர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை, ஆக.17- சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அய்.பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (16.8.2025) சோதனை நடத்தினர். சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது பூட்டிக் கிடந்த ஒரு அறையை உடைத்து சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அமைச்சர் அய்.பெரிய சாமியின் மகனான சட்டமன்ற உறுப்பினர் அய்.பி.செந்தில் குமாருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், செந்தில்குமாருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு சென்றனர். அங்கு, அவரது அறை பூட்டப்பட்டிருந்ததால், நீண்ட நேரமாக வெளி்யே காத்திருந்தனர்.

சுமார் 4 மணி நேரமாக காத்திருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்த சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசனுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, அய்.பி.செந்தில்குமாரின் அறையை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அய்.பெரியசாமி அறையிலும் சோதனையிட வருவதாக தகவல் வெளியான நிலையில், அமைச்சரின் அறை யாரும் நுழைய முடியாதபடி பூட்டப்பட்டது.

இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட் மெட்டாவுக்கு எதிராக விசாரணை

வாசிங்டன், ஆக.17- சிறுவா்களுடன் தீங்கு விளைவிக்கக் கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியைச் சோ்ந்த செனட் சபை உறுப்பினா் ஜோஷ் ஹவ்லி அறிவித்துள்ளாா்.

இது குறித்து மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மாா்க் ஸுக்கா்பா்குக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், சிறுவா்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ‘உணா்ச்சி மயமான’ உரையாடல்களில் அவா்களுடன் ஈடுபட நிறுவனத்தின் சாட்பாட்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தகவல்தொடா்புகளையும் கோரியுள்ளாா்.

இது குறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘எங்கள் ஏஅய் சாட்பாட் செயலிகளில் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பது குறித்த தெளிவான கொள்கைகள் உள்ளன. சிறுவா்களை பாலியல் ரீதியாகக் குறிப்பிடுவதையும், வயது வந்தவா்களுக்கும் சிறுவா்களுக்கும் இடையேயான பாலியல்ரீதியிலான உரையாடல்களையும் அந்தக் கொள்கைகள் உறுதியாகத் தடை செய்கின்றன’ என்று விளக்கமளித்தாா்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவிருக்கும் ஹவ்லி தலைமையிலான நீதித் துறை செனட் குழுவின் குற்றவியல் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு துணைக் குழு, மெட்டாவால் உருவாக்கப்பட்ட ஏஅய் தயாரிப்புகள் சிறுவா்களுக்கு எதிரான குற்றவியல் தீங்குகளை விளைவிக்கின்றனவா என விசாரிக்க உள்ளது.

இந்த விசாரணைக்காக, செப். 19-ஆம் தேதிக்குள் இது தொடா்பான அனைத்துப் பதிவுகளையும் பாதுகாத்து நாடாளுமன்றத்திடம் சமா்ப்பிக்க மெட்டா நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிதாக 20 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உதயம்!

200 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றம்

சென்னை, ஆக. 17- தமிழ்நாட்டில் உள்ள 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தலா 10 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 200 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில், இந்த கல்வியாண்டில் (2025-2026) 20 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பத்தூர், சென்னை, விழுப்புரம், ராமநாதபுரம், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பள்ளிகள் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், இந்தப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய பணியிடங்களுக்கு ஈடாக, காலியாக உள்ள 470 பணியாளர் பணியிடங்கள் அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *