பெய்ஜிங், ஆக. 17- சீனாவைச் சேர்ந்த 31 வயதுடைய மா என்ற இளைஞர், கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பியதையடுத்து, தமது காதலியுடன் உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, மா ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலைத் தடுப்பில் மோதியது. நல்வாய்ப்பாக, காரில் இருந்த மா மற்றும் அவரது காதலிக்குச் சிராய்ப்புக் காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. இருக்கை வாரை அணிந்திருந்ததே அவர்கள் உயிர் பிழைக்கக் காரணம் என மா தெரிவித்தார்.
இந்த விபத்து, ஏற்கெனவே திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த இந்த இணையரை உடனடியாக முடிவெடுக்கத் தூண்டி யுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்ட அவர்களது பெற்றோர், “வாழ்விலும் தாழ்விலும் இணைபிரியாதவர்கள்” என்று வாழ்த்துத் தெரிவித்தனர். இணைய வாசிகளும் இந்த இணைக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.