இஸ்லாமாபாத், ஆக.17- பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட வற்றால் கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.
ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பாகிஸ்தானில் பல இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகா ணத்தின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள இந்த மகாணம் மலையையொட்டி அமைந்துள்ளது. இதன் தலைநகர் பெஷாவர் ஆகும்.
இந்த மாகாணத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழை யால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள புனர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டா கிராம் உள்ளிட்ட இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட் டுள்ளது.
பேரிடர் பாதிக்கப் பட்ட இடங்களாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்ல பட்டுள்ளன. 320 பேர் வரை பலியாகி உள்ளனர்.
வெள்ளம் இன்னும் குறையாததால் மீட்பு;g பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற் கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
9 மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 2000க்கும் அதிக மானவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி கைபர் பக்துன்வா மீட்புப் பிரிவின் செய்தி தொடரபாளர் பிலால் அகமது ஃபைசி கூறுகையில், ‛‛கனமழை, பல பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்கள் மற்றும் மருத்துவ அவசர ஊர்திகளை கொண்டு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்புப் படையினர் நடந்தே செல்லும் நிலை உள்ளது. உயிருடன் இருக்கும் மக்களை முதலில் பத்திரமாக வெளியேற்ற முயற்சித்து வருகிறோம்” என்றார்.
மேலும் பாகிஸ்தானின் சில இடங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வ மய்யம் கணித்துள்ளது. இதில் கைபர் பக்துன்க்வாவின் சில இடங்கள் உள்ளதால் மக்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படும் நிலை உருவாக்கி உள்ளது. இதுதவிர பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வடக்கு கில்கிட் பால்டிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். அங்கும் மக்கள் இறந்துள்ளனர்.