சென்னை, ஆக. 16– தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளி யிட்டமைக்காக தூய்மைப் பணி யாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அதன் விவரம் வருமாறு:–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (15.8.2025) முகாம் அலுவலகத்தில், தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்க அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக அனைத்து சங்க கூட்டமைப்பின் நிர்வாகி பியூலா ஜான் செல்வராஜ், சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதார தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பி. ஜெயசங்கர், பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து துறை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ். புருசோத்தமன், தொழிலாளர் காங்கிரஸ் டிரேட் யூனியன் நிர்வாகி அய். ஜெயகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி செங்குட்டுவன், உள்ளாட்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி ஆர். சரவணன், பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் நிர்வாகி ஜி. ராமு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.அன்புதாசன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி ஜி. சத்தியகுமார், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேஸ்திரி சங்கத்தின் நிர்வாகி முத்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் ஊழியர் தொழிற்சங்கங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சந்தித்து, முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
‘‘என்றைக்கும் நாம் – உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்!’’
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு!
சென்னை, ஆக. 16 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (15.8.2025) தம்மை இல்லத்தில், தூய்மைப் பணியாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் வலைதளப் பதிவிட்ட முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் அவர்களின் வலைதளப் பதிவு வருமாறு :–
தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகி களைச் சந்தித்தேன். நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்!
இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட் டுள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற்றிட, தாயுள்ளதோடு தங்களுடைய நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் அவர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு மகிழ்வுக் கடிதத்தினை அளித்தனர்.
இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.