உடுமலை, ஆக. 16 திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள ஜக்கம்மாள் கோவிலில் கடவுளர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமூர்த்தி அணைக்கு அருகில் உள்ள கரட்டு பெருமாள் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜக்கம்மாள் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று (15.8.2025) சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக அந்தக் கடவுளர் சிலைக்கு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.
நள்ளிரவு, கோவில் வளாகத்திற்குள் நுழைந்த சில நபர்கள், அங்கிருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையின் முகத்தை உடைத்து, அலங்காரங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். அதிகாலை கோவிலுக்குச் சென்ற பொதுமக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனராம்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள், உடுமலை – திருமூர்த்திமலை சாலை, ஜல்லிபட்டி நான்கு சாலை சந்திப்பில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்பே, மறியல் கைவிடப்பட்டது.
கடவுள் சிலை உடைக்கப்பட்டு, அலங்கார அமைப்புகளும் சேதப்பட்டதைக் கண்டு கொள்ளாமல், ‘கல்’லாகக் கடவுளர்கள் இருந்ததைப்பற்றி சிந்திப்பதற்கு அம்மக்களுக்கு ஏனோ மனம் இல்லை.