ஜெயங்கொண்டம், ஆக. 16- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 14.8.2025 அன்று 19ஆம் ஆண்டு விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விளையாட்டு விழா காலை 10.00 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பள்ளியின் தாளாளர் அறிவுரையின்படி பள்ளி முதல்வர் இரா.கீதா அவர்களின் வழிகாட்டுதலுடன், மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகிக்க இவ்விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கவிதா (காவல்துறை ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், ஜெயங்கொண்டம்) கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மேலும் சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) கலந்து கொண்டு விழாவினை சிறப் பித்தார், சிறப்பு விருந்தினருக்கு டி.கிருஷ்ணகுமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சியின் முதலாவதாக ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு அணி வகுப்பு தொடங்கியது.
பள்ளி மாணவத் தலைவன் முன்வர அவரைத் தொடர்ந்து தேசிய மாணவர் படை, சாரண சாரணியர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம்,மற்றும் சிவப்பு, மஞ்சள், நீலம் பச்சை நான்கு வண்ண அணிகளின் மரியாதையை சிறப்பு விருந்தினர் அவர்கள் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி விழாவினை இனிதே தொடங்கி வைத்தார்.
மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பலவண்ண நாடாக்களால்வானவில்லை கண் முன் கொண்டு வந்துபார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர்
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை வரை பயிலும் மாணவர்கள் உருள் கட்டையை கையில் வைத்துக் கொண்டு இசைக்கு ஏற்ப அழகாக உடற்பயிற்சி செய்தனர்.
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் நேரம், ஒழுங்கு, கவனம் ஆகியவற்றை கடைபிடித்து சிறப்பாக குழுப் பயிற்சி செய்தனர்
தற்காப்பு கலைகள்
மேலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் உடலும் உள்ளமும் சிறப்புடன் செயல்படஉதவும் மருந்தில்லா மருத்துவமான யோகக் கலையைச் செய்து காட்டினர்.மேலும் தற்காப்பு கலைகளானகராத்தே, சிலம்பம் ஆகியவற்றின் மூலம் பஞ்சுகள் அல்ல நம் கைகள் பாராட்டும் பலம் கொண்ட ஆயுதங்கள் என்பதை நிரூபித்து காட்டினர் .
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாண வர்கள் குடை வடிவம்,ஈபில் டவர், நாற்காலி மற்றும் படிக்கட்டு வடிவம், ரங்கராட்டினம் போன்ற பல அமைப்புகளில் பிரமிடுகளை செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்
12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் இயற்கை வளமான மூங்கிலை பயன்படுத்தி இசையின் இடைவெளிகளில் கால்களை முன்னேற்றி பின்னேற்றி ஒற்றுமையுடன் ஆடிய மூங்கில் நடனத்தை கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்
பெற்றோர்களுக்கு போட்டிகள்
மேலும் பெற்றோர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களை ஒரு குழந்தை யாக நினைத்துக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன்பங்கேற்றனர் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன
சிறப்பு விருந்தினர் தன்னுடைய சிறப்பு உரையில் மாணவர்கள் கல்வியில்மட்டுமல்லாமல் விளை யாட்டிலும் சிறந்த விளங்க வேண்டும் என்று கூறினார். மாணவர்கள் நிகழ்த்தி காட்டிய அனைத்து குழு பயிற்சிகளும் மிக மிக அருமையாக உள்ளது என்று கூறி அனைத்து மாணவர்களுக்கும் தன்னுடைய உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாண்டு நடைபெற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் அதிக புள்ளிகளை பெற்ற நீல வண்ண அணிக்கு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மாணவிகள் நன்றியுரை வழங்க விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறை வடைந்தது.