அறிவியல் மனப்பாங்குக்குப் பாதுகாப்பு அளித்து –
”மனிதம்” தழைக்க உதவிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப் பாராட்டு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுக்கு முரணாக அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் – நீதியை மட்டும் காப்பாற்றிடவில்லை; கூடுதலாக அறி வியல் மனப்பாங்குக்கும் பாதுகாப்பு அளித்து ‘‘மனிதம்” தழைக்க உதவியுள்ளார்கள் – பாராட்டுகள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பழைமையுடன் கூடிய முக்கியம் வாய்ந்தது அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆகும். அதில் ஒரு வழக்கு:
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி, ஒரு பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார். ஆனால், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதைத் தவிர்த்து, தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் புகார் அளித்ததை அடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பிணை கோரி, அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினார்.
அப்போது அந்த இளைஞரின் சார்பில் ஆஜரான வழக் குரைஞர், ‘‘அந்தப் பெண்ணுக்கு ‘செவ்வாய் தோஷம்’ உள்ளது; இந்தத் தோஷம் இருப்பவர்களைத் திருமணம் செய்தால், குடும்பத்துக்கு அழிவு ஏற்படும்; அதனால்தான், அந்தப் பெண்ணை என் கட்சிக்காரர் திருமணம் செய்யவில்லை” என வாதிட்டார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின்
வினோத உத்தரவு!
இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா?
‘‘இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணும் – அந்த இளைஞரும் தங்கள் ஜாதகத்தை லக்னோ பல்கலைக் கழக ஜோதிடத் தலைவரிடம் 10 நாள்களுக்குள் அளிக்கவேண்டும்.
இதை ஆய்வு செய்து, அந்தப் பெண்ணுக்கு செவ்வாய்த் தோஷம் உள்ளதா இல்லையா? என பல்கலைக் கழக ஜோதிடத் துறை மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று ஆணை பிறப்பித்தார் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி.
இந்த விவகாரம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.
உச்சநீதிமன்றத்தின் சரியான நடவடிக்கையும் – நமது பாராட்டும்!
அப்போது உச்சநீதிமன்றம், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா? என அறிக்கை அளிக்கும்படி, லக்னோ பல்கலைக்கழகத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனவே, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அந்த ஆணைக்கு (ஜோதிடம் பார்த்து முடிவு செய்யும் ஆணையை) தடை விதிக்கின்றோம்” என்று ஆணையிட்டுள்ளது!
உரிய நேரத்தில், ஏடுகளில் பார்த்தே தாமே முன்வந்து (Suo Moto) நடவடிக்கை மேற்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சரியான நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் எல்லா நீதிபதிகளும் பதவிப் பிரமாணம் எடுக்கின்றனர்.
அதில் ‘‘அடிப்படைக் கடமைகள்”(Fundamental Duties) என்ற தலைப்பில் 51-ஏ (எச்) பிரிவு 1976 முதலே இணைக்கப் பட்டுள்ளது!
ஒரு பிரிவு மிகத் தெளிவாக,
‘‘It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்” என்பது அதன் தமிழாக்கம் ஆகும்.
வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் பல்கலைக் கழகங்களில் மூடத்தனத்தைப் படிப்பாக்கினர்!
ஜோதிடம் என்பது அறிவியல் அடிப்படையைக் கொண்ட தல்ல; மாறாக, ‘‘போலி அறிவியல் (விஞ்ஞானம்)” ( Not Science but Pseudo Science) என்றாலும், பா.ஜ.க. ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறை அமைச்சராக வாஜ்பேயி தலைமை யிலான ஒன்றிய அரசில் இருந்தபோது, பல்கலைக் கழகங்களில் இப்படி ஒரு மூடத்தனத்தைப் படிப்பாக ஆக்கி, விருப்பத்தைத் தூண்ட, அப்பல்கலைக் கழகங்களுக்கு நிதி உதவி உண்டு என்றும் நாக்கில் தேனைத் தடவினர்.
அதன் தீய விளைவு நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் இந்தப் போலி அறிவியல் துறையும் ஏற்படுத்தப்பட்டு இயங்குகிறது!
எவ்வகையில் சரியானது?
அது ஒருபுறமிருந்தால், உயர்நீதிமன்ற நீதிபதி இப்படி அறிவியல் மனப்பாங்குக்கு முரணான வகையில், அடிப்படைக் கடமையைச் செய்யாது இப்படி அந்த மூடத்தனத்திற்கு – போலி விஞ்ஞானத்திற்குப் புத்தாக்கம் தருவதுபோல் நடந்து கொள்ளுவது எவ்வகையில் சரியானது?
எடுத்த அரசமைப்புச் சட்ட உறுதிமொழிக்கு முற்றிலும் முரண் அல்லவா?
உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழக்கில் 3 இல் 2 என்று தீர்ப்பு வந்த அமர்வில், தீர்ப்பு எழுதிய ஒரு நீதிபதி (உச்சநீதிமன்றத்தில்) ‘‘டாக்டர் அம்பேத்கர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் இருந்தால் போதும் என்று கூறியிருந்தார்” என்று எழுதியுள்ளார்!
அரசியல் ரிசர்வேஷன் வேறு; கல்வி, உத்தியோக இட ஒதுக்கீடு வேறு என்ற வேறுபாடுகூட அறியாமல் இப்படி தீர்ப்பில் எழுதியது, ஏனோ புரியவில்லை!
நீதி இப்படி திரிபுவாதத்திற்கு இரையாகக் கூடாது என்பதே பகுத்தறிவாளர்களின் கவலை!
மனிதம் தழைக்கச் செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
மனிதர்கள், செவ்வாயக் கிரகத்திற்குச் சென்று ஆய்வு (விண்வெளி ஆய்வு) நடத்திடும் இந்த அறிவியல் யுகத்தில், இப்படி ஒரு விசித்திர ஆணை அலகாபாத் உயர்நீதிமன்றத்தி லிருந்து கிளம்பியது குறித்து வேதனைப்பட்டாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதனை உணர்ந்து, உடனே தடையாணை வழங்கியது, நீதியை மட்டும் காப்பாற்றிடவில்லை; கூடுதலாக அறிவியல் மனப்பாங்குக்கும் பாதுகாப்பு அளித்து ‘‘மனிதம்” தழைக்க உதவியுள்ளார்கள் – பாராட்டுகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.6.2023