திருச்செந்தூர், ஆக.16 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் புனித நீராடியவர்கள், பெரிய அலைகள் காரணமாக பாறையில் மோதியதில், 10-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்ட பிறகு, பக்தர்கள் பலர் கடலில் ‘புனித’ நீராடினர். அப்போது, திடீரென பெரிய அலைகள் சீற்றத்தோடு எழுந்தன. எதிர்பாராதவிதமாக வந்த இந்த அலைகளால், புனித நீராடிக் கொண்டிருந்த பக்தர்கள் நிலைதடுமாறி, அருகில் இருந்த பாறைகளின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டனர்.
இதில், 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தைக் கண்ட மற்ற பக்தர்கள் உடனடியாக அவர்களை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம்
5 மடங்கு அதிகரிப்பு
வெளிநாட்டுப் பயணிகளின் வருகையிலும் பெரும் வளர்ச்சி
சென்னை, ஆக 16 தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் கடந்த மூன்று ஆண்டுகளில் அய்ந்து மடங்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-2021 நிதியாண்டில், தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் ரூ.49.11 கோடியாக இருந்தது. இந்த வருமானம், 2023-2024 நிதியாண்டில் சுமார் அய்ந்து மடங்கு உயர்ந்து, ரூ.243.31 கோடியாக அதிகரித்துள்ளது. வருவாயில் ஏற்பட்ட இந்த அபார வளர்ச்சிக்கு, வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரித்ததே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 2022-ஆம் ஆண்டில் 1.4 லட்சமாக இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டில் 11.7 லட்சமாகப் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த பெரும் வளர்ச்சி சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.