சுதந்திர நாள் ஒத்திகை என்ற பெயரால் வன்முறைப் பயிற்சியா?

2 Min Read

சுதந்திர நாள் விழா ஒத்திகையின்போது, பள்ளி மாணவர்களின் கைகளில் வாளைக் கொடுத்து பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்ப கற்றுக் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரியானா மாநிலம் பதேஹாபாத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில்தான் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

வழக்கமாக சுதந்திர நாள் விழா ஒத்திகையின்போது மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல வேடமிட்டு, தேசியக்கொடியை ஏந்தி அணிவகுப்பார்கள். ஆனால், இங்குள்ள பள்ளி நிர்வாகம், உள்ளூர் இந்து அமைப்பினருக்கு அனுமதி அளித்ததன் பேரில், மாணவர்களுக்கு வாள் சுழற்றப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பயிற்சியின்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களையும் மாணவர்கள் எழுப்ப வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு பள்ளியில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாகவும், எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படிக்க வரத் தயங்குவார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கல்வியைப் போதிக்க வேண்டிய இடத்தில், மாணவர்களுக்கு வன்முறையையும், மதப் பிரிவினையையும் கற்றுக்கொடுப்பது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கொத்துக் கொத்தாகக் கொலை நிகழ்வு என்பது 2014க்குப் பிறகு 97 விழுக்காடு நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

இதன் பொருள் என்ன? 2014க்குப் பிறகு என்றால் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகுதான் என்பது வெளிப்படை.

சுதந்திர நாள் விழாவிற்குப் பயிற்சி என்ற பெயரில் காவிக் கொடி ஏந்தி கத்தி, திரிசூலம் கொடுப்பது எதற்காக?

மாணவப் பருவத்திலேயே இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்படுவதன் மூலம், பிற்காலத்தில் சங்பரிவாரத்தின் வன்முறைச் சிப்பாய்களாக மாற்றுவதற்குத்தானே!

தேசிய கல்விக் கொள்கை என்று சொல்லப்படுவது எல்லாம் ஊரை ஏமாற்றத்தான் என்பது இதன் மூலம் விளங்கவி்லலையா?

பொதுவாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

உத்தரப்பிரதேசத்தி்ல கடந்த 4 ஆண்டுக் காலத்தில் மட்டும் 25,000க்கும்   அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது எதைக் காட்டுகிறது?

இரவு நேரங்களில் பள்ளிகளைச் சுற்றி  ‘கோமாதாக்கள்’ அதாவது பசுக்கள் படுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்றால் அங்குப் படிக்க வரும் மாணவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் பதைபதைக்கிறது. அப்படியே படிக்க வந்தாலும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதும், இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கங்களைக் கற்றுக் கொடு்ப்பதும் எதிர் காலத்தை நாசப்படுத்தும் கொடூரம் தானே!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *