சேலம், ஆக. 16- சேலம் நேரு கலையரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது மாநில மாநாடு நேற்று (15.8.2025) தொடங்கியது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் அரசியல் விளக்கவுரை கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் ‘தில்லு முல்லு’ வேலைகளை முறியடிக்க இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் கூறியதாவது:
“தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி ஸநாதனத்தை எதிர்க்கும் வலுவான கூட்டணி. பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரங்களை தமிழ்நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுக்கும் கூட்டணி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், அவர்கள் ‘தில்லுமுல்லு’ வேலைகளைச் செய்து நம்மை வீழ்த்த முயற்சி செய்யலாம். அவற்றை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம், எப்படி முறியடிக்கப் போகிறோம், மக்களிடம் எப்படி அம்பலப்படுத்தப் போகிறோம் என்பதே நமக்கு முன் இருக்கும் சவால்.”
பொறுப்பு உள்ளது
“வலதுசாரிகளை எதிர் கொள்வதற்கு இடதுசாரிகளின் வலிமை பெருக வேண்டிய தேவை உள்ளது. இந்த வலிமை என்பது, சட்டமன்றம் அல்லது நாடாளு மன்றத்தில் பெறும் வெற்றி பற்றியது அல்ல. தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமையும், ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
அனைத்து ஜனநாயக கட்சி களையும் அணி திரட்ட வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கிறது. உங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற புரிதலோடு இதை நான் பதிவு செய்கிறேன்.”
பா.ஜ.க.வின் அரசியல் ‘திருட்டு’
பீகாரில் தேர்தல் ஆணையமும் பா.ஜ.க.வும் இணைந்து ‘திருட்டு’ வேலைகள் செய்கிறது. இதுபோல தமிழ்நாட்டிலும் செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
“அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போது, 2026ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். இத்தகுத் தில்லுமுல்லு வேலைகளை தமிழ்நாட்டிலும் அவர்கள் செய்ய முயலலாம் என்பதை இது காட்டுகிறது.
“கருநாடகா, மகாராட்டிரா தேர்தல்களிலும் இதுபோல தில்லுமுல்லு வேலைகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் பேசுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சட்டத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அதிகாரத்தைத் திருடுகிற முயற்சியை பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரங்கள் மேற்கொண்டுள்ளன. அதை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது.
ஆனால் பீகார் போன்று தில்லுமுல்லு வேலைகளை செய்து நம்மை வீழ்த்த அவர்கள் முயற்சிக்கலாம்.
பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும்
“காங்கிரஸ், இடதுசாரிகள் இல்லாத பாரதம்; திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு என பா.ஜ.க. வெளிப்படையாகப் பேசுகிறது. இது வெறும் தேர்தல் முழக்கம் அல்ல, அது அவர்களுடைய பாரம்பரிய கோட்பாடு. பாசிசம் முற்றிப்போய்விட்டது.
அந்த பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதை நேரடியாகச் சொல்லாமல் ஜனநாயகம் வெல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. இப்படிப்பட்ட களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.