சென்னை, ஆக. 16- உலகளவில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (Autism Spectrum Disorder ASD) பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்ட புறவுலக சிந்தனையற்ற நபர் களுக்கான ஒப்புயர்வு மய்யம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந் துள்ளது. முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கும் இந்த மய்யத்தால் இதுவரை 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
ஆட்டிசம் பாதிப்பு
ஆட்டிசம் என்பது சமூக தொடர்பு, தகவல் தொடர்பு மற்றும் நடத்தை ஆகியவற்றில் மாறுபாடுகளை ஏற்படுத்தும் ஒரு நரம்பு வளர்ச்சி கோளாறு ஆகும். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யத்தின் (CDC) அறிக்கையின்படி, 2000ஆம் ஆண்டில் 150 குழந்தைகளில் ஒருவருக்கு இருந்த ஆட்டிசம் பாதிப்பு, தற்போது 36 குழந்தைகளில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும், இது 80 முதல் 100 குழந்தைகளில் ஒருவருக்கு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆட்டிசத்திற்கான சிகிச்சை மிகவும் செலவு மிக்கது. ஒரு மாதத்திற்கு சராசரியாக ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை செலவு ஆகலாம். இந்த அதிக செலவு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.15 கோடி செலவில் சென்னை, கலைஞர் நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தில் புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மய்யம் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைத் தொடங்கி வைத்தார்.
இந்த மய்யத்தில், ஆட்டிசம் கண்டறிதல், மதிப்பீடு செய்தல், சிறப்பு கல்வி, கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி/செயல்முறை சேவைகள், பகல்நேர பராமரிப்பு, தொழில் சார்ந்த பயிற்சி, மற்றும் உளவியல் ஆலோசனை போன்ற பல்துறை சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. அனைத்து சிகிச்சைகளும் முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவைகள் மற்றும் பயன்கள்
இந்த மய்யம் குறித்து துணை தலைமை நிர்வாக அதிகாரி ரெமா சந்திரமோகன் கூறுகையில், “ஆட்டிசம் உள்ள குழந்தைகள் தனியாக ஒரு சொந்த உலகத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்வார்கள். அவர்களுக்கு ஒன்றரை வயதிலேயே இந்த அறிகுறிகள் தெரியும். குழந்தைகள் சரியாகப் பேசாமல் இருந்தால், அதை தாமதம் என்று நினைக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்,” என்றார்.
மய்யத்திற்கு வரும் குழந்தைகளை குழந்தை மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் உளவியலாளர் ஆகியோர் பரிசோதித்து, ஆட்டிசம் பாதிப்பை உறுதி செய்த பிறகு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குழந்தைகளின் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு, அடுத்தகட்ட சிகிச்சை தொடரப்படுகிறது.
வெளியில் ஒருமுறை சிகிச்சை (section) எடுத்துக்கொள்ள ரூ.500 முதல் ரூ.1000 வரை செலவாகும் நிலையில், இந்த மய்யத்தில் அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுவரை 320 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற குழந்தைகளில் 10 சதவிகிதம் பேர் பொதுவான வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளதாக ரெமா சந்திரமோகன் தெரிவித்தார்.
இந்த மய்யத்தில் விரைவில் உணர்திறன் மற்றும் செயல் திறன் மேம்பாட்டு பூங்கா தொடங்கப்பட உள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முதலுதவி செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
பகல்நேர பராமரிப்பு மய்யம்
இந்த மய்யத்தில் பகல்நேர பராமரிப்பு வசதியும் உள்ளது. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு கல்வியாளர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மனநல மருத்துவர், குழந்தை மருத்துவம், உளவியலாளர், உடற்பயிற்சி நிபுணர், பேச்சு சிகிச்சையாளர், சிறப்பு கல்வியாளர் போன்ற நிபுணர்கள் குழு இங்கு பணிபுரிகிறது.