சென்னை, ஆக. 16- தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மேனாள் தலைவர் கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் ஜே.எம்.ஆரூண், ராம சுப்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “கடந்த 11 ஆண்டுகளாக எழுத்தறிவு, பேச்சுரிமை உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பணத்தைப் பறித்தார்கள், கருத்துரிமையைப் பறித்தார்கள். தற்போது வாக்குரிமையையும் பறிக்க முயற்சி செய்து வருகிறார்கள். ராகுல் காந்தி இதை மக்களின் குரலாக ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்” என்றார்.
தூய்மைப் பணியாளர்களுக்கான அரசின் ஏழு திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அவர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
கொள்ளை அடிக்க எதுவும் இல்லை
ஒன்றிய பா.ஜ.க. அரசை விமர்சித்த செல்வப்பெருந்தகை, “பா.ஜ.க. அரசு எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிட்டது. இனி கொள்ளையடிக்க எதுவும் இல்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் அய்சியூ சென்றால் அங்கும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். மக்களிடம் இனி சக்தி இல்லை. கடைசியாக இருந்த வாக்குரிமையையும் திருடி விட்டார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
பயங்கரவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பயங்கரவாதம் பயங்கரவாதம் தான். அது எந்த முகத்தில் வந்தாலும் அதை எதிர்க்கும் ஒரே பேரியக்கம் காங்கிரஸ் தான். பயங்கரவாதத்தால் எங்கள் தலைவர்களை நாங்கள் இழந்துள்ளோம். காந்தியைக் கொன்றது எந்தப் பயங்கரவாதி என்று சொல்லச் சொல்லுங்கள்” என்று ஆவேசமாகப் பேசினார்.
தமிழ்நாட்டில் 6 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, ஆக. 16- தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (16.8.2025) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசவும் வாய்ப்புள்ளது. (ஆகஸ்ட் 17 முதல் 21 வரை) அடுத்த அய்ந்து நாள்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் தென் தமிழ்நாடு மற்றும் வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில சமயம் 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள
மீனவர்களை விடுவிக்கக் கோரி
பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம்!
ராமேசுவரம், ஆக.16- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சீனி என்பவரின் விசைப்படகில் கடலுக்குச் சென்ற தோபி யாஸ் (37), குரு சாமி (39), பரத் (31), ரவி (47), ஜோஸ் பாரதி (22), மரிய பிரவீன் (31), மனோ சந்தியா (32), பிலிப்பியர் (43), மேத்யூ கினலடன் (24), டேனியல் ராஜ் (33) ஆகிய 10 மீனவர்களை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் 13.8.2025 அன்று காலையில் சிறைப்பிடித்தனர்.
10 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 10 வரை நீதிமன்ற காவலில் வெளிச்சாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வலியுறுத்தியும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று (15.8.2025) இரண்டாவது நாளாக அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பாம்பனில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டிருந்தன. மேலும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கும் செல்லவில்லை.