கேள்வி 1: வாக்காளர் முறைகேட்டைக் கண்டித்து பெங்களூருவில் நடந்த போராட்டத்தில், எதிர்க்கட்சிகளை தேர்தல் கமிஷன் அச்சுறுத்துவதா? என ராகுல்காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி இருப்பது சம்பந்தப்பட்டவர்களின் செவிகளுக்கு எட்டுமா?
– மு.கவுதமன், பெங்களூரு.
பதில் 1: அவர்களின் காதுகளுக்கு அது எட்டுகிறதோ இல்லையோ – பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை வரும் 19ஆம் தேதிக்குள் டிஜிட்டல் முறையில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையாகக் கொடுத்த அறை, சம்பந்தப்பட்டவர்களின் செவிள்களில் பட்டுத்தானே ஆகவேண்டும்!
என்னே ஆணவ பதில்! “சட்டப்படி நாங்கள் காரணம் சொல்ல வேண்டியதில்லை” என்று ஜனநாயக நாட்டில் கூறுவதற்கு யாருடைய பின்னணி காரணம் – புரிகிறதல்லவா? காலம் அவர்கள் கண்களைத் திறக்க வைக்கும்.
– – – – –
கேள்வி 2: மத்தியில் இருப்பது திருட்டு அரசு என்றும், பிரதமர் மோடி ஆட்சியில் நீடிக்கும் உரிமையை இழந்துவிட்டதாகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டமாகப் பேசியிருப்பதை உரியவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்களா?
– அ.அப்துல்அகத், அய்தராபாத்.
பதில் 2: மக்களும், நீதிமன்றங்களும் நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம்” என்பதே நியதி!
– – – – –
கேள்வி 3: 100 பெண்கள், திருநங்கைகளுக்கு ரூ. 1 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோவை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இருப்பது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என கருதலாமா?
– இ.தேன்மொழி, தெள்ளார்.
பதில் 3: நிச்சயமாக, தெருக்களில் நடமாடும் எஞ்சிய சிலரைக்கூட, இப்படித் தொழில் முனையும் வாழ்வாதாரர்களாக மாற்ற வேண்டியதும் அவசர அவசியம்.
– – – – –
கேள்வி 4: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு ஒரு பவுன் ரூ.75,760 என்று விற்கப்படும் நிலையில், ஏழை எளிய கிராமப்புற மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ‘தங்கம்’ என்றும், ‘வைரம்’ என்றும் பெயரிட்டு தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அவலம் அல்லவா?
– ஆர்.அலமேலு, செங்குன்றம்.
பதில் 4: மயிலாப்பூர் ஹிந்து சாசுவத நிதி தலைவர் தேவநாதன் என்ற காரைக்குடி பா.ஜ.க. நாடாளுமன்ற வேட்பாளர் – மக்கள் பணத்தை சூறையாடிய வழக்கினால் சிறையில் உள்ள நிலையில், பணம் போட்டு ஏமாந்தவர்கள் பணம் திரும்பி அவர்களது கைகளில் வருவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும். இவரிடம் 2,000 கிலோ தங்கம் உள்ளது என்று கூறப்பட்டது, ஏடுகளில் – ஊடகங்களில் அச்செய்தி வருவது – இது ஒரு வகை. நீங்கள் கூறும் அவலம் – அது ஒரு வகை.
– – – – –
கேள்வி 5: பீகாரில் சீதாதேவி கோவில் ரூ.880 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளதால், அதற்கான பணியை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்திருப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரான விரோதமான விபரீதப்போக்கு அல்லவா?
– சு.சின்னப்பொண்ணு, வாலாஜாபாத்.
பதில் 5: இந்தியாவின் மதச்சார்பின்மை – Secularism பீடிகையில் உள்ளது – அரசியல் சட்டம் சொல்கிறது. அதனை அன்றாடம் மதிக்காமலே மிதிப்பதுதான் மோடி, ஆர்.எஸ்.எஸ். அரசின் பணி!
இந்த அரசின் சார்பில் மசூதியோ, சர்ச்சோ கட்டுவார்களா? ஹிந்து பண்டிகை, தீபாவளியில் ஜிஎஸ்டி குறைப்பு! தீபாவளிப் பரிசு என்று பிரதமர் தனது சுதந்திர தின உரை – ஆகஸ்ட் 15இல் கூறுவது – கும்பமேளா எல்லாம் எதைக் காட்டுகிறது? Undeclared – அறிவிக்கப்படாத ஹிந்து ராஷ்டிரமாகிவிட்டது இந்தியா என்பதைத்தானே?
– – – – –
கேள்வி 6: இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதால் தமிழ்நாடு தொழில் துறையில் ரூ. 1.75 லட்சம் கோடிக்கு ஏறறுமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஜவுளி, நகை, மோட்டார் எந்திர உற்பத்தியாளர்கள் பெரிதும் கவலை அடைந்திருப்பதை ஒன்றிய அரசு உணர்ந்து அவர்களது துயர் துடைக்க முன்வருமா?
– த.சுமதி, கோவை.
பதில் 6: இந்தியாவின் இறையாண்மைக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் அடாவடி அரசியல் ‘விஸ்வகுரு’வாக உள்ளதாகக் கூறும் நமது நாட்டு பிரதமர் அதுபற்றி தனது முகம் சுளிப்பைக் கூட காட்டத் தயங்குவது என்ன ராஜதந்திரமோ தெரியவில்லை! “இந்தியா வல்லரசாக – டிரில்லியன் பொருளாதார பலம் வளர்ச்சி அடைகிறது” என்று வாய்வீச்சு கூறுவதற்கு யோசிக்க வேண்டாமா?
– – – – –
கேள்வி 7: தேர்தல் ஆணையம் பா. ஜனதாவுடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருப்பதற்கு மற்ற மற்ற எதிர்கட்சிகளும் அவருடன் இணைந்து அவருக்கு உறுதுணையாக இருக்குமா?
– பா.ஆனந்தன், திருவொற்றியூர்.
பதில் 7: நியாயம் கேட்கும் நேர்மையான கட்சிகள். பொதுநிலையாளர்கள் அனைவரும் நிச்சயம் இணைந்துள்ளார்கள் – இணையவும் செய்வார்கள். ஜனநாயகம் பிழைக்க வேண்டாமா?
– – – – –
கேள்வி 8: 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் தி்ட்டம்’ எனும் புதிய திட்டம் மூத்த குடிமக்களுக்கு பெரும்பயன் அளிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கலாமா?
– க.தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில் 8: அவர்கள் இல்லங்களில் வழிந்தோடும் மகிழ்ச்சியே சான்று கூறுகிறதே – நிம்மதிப் பெருமூச்சு – உளப்பூர்வ மகிழ்ச்சியை அடைகிறார்களே அவர்கள்.
– – – – –
கேள்வி 9: தலைவர்கள், நடிகர்களின் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதா? என்று வினா எழுப்பியதோடு, அதற்கான விதிகளை உருவாக்க மதுரை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பது முறையாக பின்பற்றப்படுமா?
-ந.அருண்பிரசாத், பாலக்கோடு.
பதில் 9: பகுத்தறிவுள்ளவர்கள் எவரும் கல்லுக்கோ, சிலைகளுக்கோ, சினிமா கட்டவுட்களுக்கோ பாலாபிஷேகம் முதலியன செய்ய மாட்டார்கள். எதிலும் பக்தி வந்தால் புத்தி போய்விடுகிறது.
– – – – –
கேள்வி 10: என்னதான் பிற்போக்கு மதவாதம் பேசினாலும், எல்லா மதக்காரர்களும் அறிவியலைத்தானே (கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்பட) பலமாக வரவேற்கின்றனர். அப்படியென்றால் முற்போக்குப் பகுத்தறிவுதானே வெல்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
– கல.சங்கத்தமிழன், காஞ்சி
பதில் 10: சரியான நெற்றியடி கேள்வி. இதில் பதிலும் அதிலேயே உள்ளதே! நன்றி!