தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் விந்தன் மறைந்து அய்ம்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 1916ஆம் ஆண்டில் பிறந்து 1975இல் மறைந்த விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். விந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில், செப்டம்பர் 22, 1916ஆம் ஆண்டு வேதாசலம்-ஜானகி இணையருக்குப் பிறந்தார். “தமிழரசு” மாத இதழிலும், “ஆனந்த விகடன்” அச்சுக் கூடத்திலும், பின் “கல்கி” வார இதழிலும் அச்சுக் கோர்ப்பவராக பணியைத் தொடர்ந்த விந்தன் எழுத்துலகிலும் தனி முத்திரையைப் பதித்தார். விந்தன் என்ற பெயரில் எழுதத் தொடங்கிய அவரது எழுத்தின் வீச்சு இன்றளவும் பேசுபொருளாய் இருக்கிறது. ‘பெரியார் அரிச்சுவடி’, ‘நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்’ சிறுகதை தொகுப்புகள், நாவல்கள் உள்பட இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகில் தனி இடத்தை பிடித்தவர் விந்தன்.
‘பசி கோவிந்தம்’
இராஜாஜி முதலமைச்சராக இருந்த நேரத்தில் பள்ளிகளில் பகுதி நேரப் படிப்பு; பகுதி நேரத் தொழில்! என ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதைக் ‘குலக்கல்வித் திட்டம்’ என விமர்சித்த பெரியார் மேற்படி திட்டத்தை திரும்பப் பெற அரசுக்கு வாய்தா கொடுத்தார். “தோழர்களே! பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும். குலக்கல்வித் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அக்ரகாரங்களுக்குத் தீ மூட்டத் தயாராகுங்கள்!” என அறிக்கை விடுத்தார். இராஜாஜி பதவியைத் துறந்து ஓட்டமெடுத்தார். அப்படிப்பட்ட அசாதாரணமான சூழலில் இராஜாஜியால் எழுதப்பட்ட நூல் ‘பஜகோவிந்தம்’. இராஜாஜியின் பஜகோவிந்தம் நூலிற்கு எதிர்விணையாற்றி ‘பசி கோவிந்தம்’ என்ற புத்தகத்தை எழுதியவர் விந்தன்.
“ஏ! மதி கெட்ட மனமே! மட மதியே! “படிக்க வேண்டும்!; பண்டிதனாக வேண்டும்!” என்று ஏன் சதா துடித்துக் கொண்டே இருக்கிறாய்? “படிப்பவர்கள் படிக்கட்டும். பண்டிதர்களாய் இருப்பவர்கள் இருக்கட்டும்.” என்று நீ சும்மா இருக்கக் கூடாதா? கோவிந்தனும் அவன் குழைத்துப் போடும் நாமமும் இருக்கும் வரை உனக்கு என்ன குறை? பாடு! பாடிக்கொண்டே ஆடு. ஆமாம்! சொல்லிவிட்டேன்.
இந்த காலத்தில் குடியாட்சியில் இதற்கு மேல் சொல்வதற்கு இல்லை. அந்த காலத்து முடியாட்சியாய் இருந்தால் அது வேறு விஷயம். மன்னனை வசப்படுத்திக் கொண்டு வருணாசிரம ‘தர்ம’த்தை ‘தர்மம்’ என்று சொல்லிக்கொண்டு, “படித்தால் நாக்கை அறுத்து விடுவேன்! மூக்கை நறுக்கி விடுவேன்!” என்று உன்னை பயமுறுத்தலாம். இப்போது அப்படி பயமுறுத்த முடியாது. அதனால் தான் சொல்வதை கொஞ்சம் நாசூக்காக சொல்லி இருக்கிறார் ஆசான்!
என்னை ஆக்கும் பகவான் என்னை அழிக்கும் பகவான் உங்களைக் காப்பது போல் என்னையும் ஏன் காக்கவில்லை? என்று நீ கேட்டால் அதற்கு அவரால் பதில் சொல்ல முடியுமா?
பரந்தாமனையும், பரலோகத்தையும், பாவத்தையும், புண்ணியத்தையும் நம்பி நீ படிக்காமல், பாண்டித்தியமடையாமல் இருந்தால்தானே அவரைப் போன்றவர்கள் வம்பில்லாமல் வாழ முடியும்!
கை அசைக்காமல் காலசைக்காமல் நாவொன்றை அசைத்தே நவநிதியும் தேட முடியும்! படிக்காதிரு பயலே! படித்தால் எங்களை எதிர்க்க உனக்குத் தைரியம் வந்துவிடும். அந்த தைரியத்துக்கு எங்கள் தனித்தமிழ் அகராதியில் என்ன அர்த்தம் தெரியுமா? கர்வமடா! கர்வம்!! அந்த கர்வத்துக்கு நீ உள்ளானால் கடவுள் கோபித்துக் கொள்வார். என்ன சொன்னேன்? கடவுளை கோபித்துக் கொள்வார் என்றா சொன்னேன்? ஆமாம். கடவுள் கருணாமூர்த்தி; அவருக்குக் கோபமே வராது என்று நாங்கள் சில சமயம் சொல்வதுண்டு. அதை இப்போது நினைவுபடுத்திக் கொள்ளாதே. சொல்வதைக் கேள்! படிக்காதீர்! படித்தால் எமன் வரும்போது பகவான் உன்னைக் கைவிட்டு விடுவார் ஜாக்கிரதை!
படிக்காதே! பஜகோவிந்தம் பாடு! பகவானின் பாதார விந்தங்களை நாடு! பட்டை நாமம் போடு! எமன் உன்னை கண்டதும் எடுப்பான் ஓட்டம்!” என்று சொல்லி
“பசி கோவிந்தம் பசி கோவிந்தம்
பசி கோவிந்தம் பாடு!
பரலோகத்தில் இடம் தேடலாம்
பசி கோவிந்தம் பாடு!
படிக்காதிரு! படிக்காதிரு!
படிக்காதிரு பயலே!
படித்தால் எமன் வரும்போதுனைப்
பகவான் கைவிடுவார்!”
என்ற பாடல் வரிகளோடு அந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை தொடங்கியிருப்பார் விந்தன்.
“வேண்டுகின்றேன் வேண்டுகின்றேன்
வேண்டுகின்றேன் கடவுளே!
பிறவிக் கடல் தாண்ட உன்னை
வேண்டுகின்றேன் கடவுளே!”
“பிறவிக்கடல் தாண்ட விஷம்
இருக்கும்போது பக்தனே!
என்னை எதற்கு வேண்ட வேண்டும்?
எடுத்துக் குடிப்பாய் பக்தனே!”
“எச்சில் இலையைக் கண்டதும்
எடுத்து நக்கித் தின்பவன்,
கந்தைத் துணியைக் கண்டதும்
கட்டி மனங் கழிப்பவன்,
இச்சை கொண்ட போதெல்லாம்
இழித்துப் பெண்ணை பார்ப்பவன்
எவனோ அவன் ஞானிடா
எடுத்துச் சொன்னேன் பாரடா!”
“நாலுங் கண்ட மூடா
நம்பி என்னை வாடா!
கோலும் குடியும் வேண்டாம்
கோவணத்தைக் கட்டு!
ஷேமம் உனக்குச் சொல்வேன்
சிரம் வணங்கிக் கேளு!
நாமம் போட்டுக் கொள்வாய்
நாலும் பறந்தோட!”
என எள்ளல் நடையில் பகுத்தறிவு மனம் கமழ பல பாடல்களை யாத்திருப்பார் அந்த நூலில்.
‘பெரியார் அரிச்சுவடி’
“பழமையாளர்களுக்கு இது கலியுகம்! பகுத்தறிவாளர்களுக்கு இது புதுயுகம்! தன்னிகரற்ற தன்மானத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் அடிச்சுவட்டை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்ற நோக்கத்துடன் வெளியிடுவதாகச் சொல்லி ‘பெரியார் அரிச்சுவடி’ எனும் நூலை எழுதியவர் விந்தன்
‘கடவுள் என்பது கயவர்கள் கற்பனை!’
‘காசிக்குப் போவது காசுக்கு நட்டமே!’
‘கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்!’
‘சரித்திரம் அறிந்தவன் சாத்திரம் பேசான்!’
‘சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை!’
‘மனிதனை கெடுத்தது மதமெனும் மாயை!’
‘மோட்சத்தை போலொரு மோசடி இல்லை!’
‘சாதியென்றும் சமயமென்றும் சொல்ல வேண்டாம்!’
‘சாத்திரத்தை ஒரு நாளும் நம்ப வேண்டாம்!’
‘விதி என்றும் வினையென்றும் சொல்ல வேண்டாம்!’
‘வீணாகக் காலத்தைக் கழிக்க வேண்டாம்!’
‘கோயில் என்றும் குளமென்றும் போக வேண்டாம்!’
‘குழவிக் கல்லை லிங்கமென்று சொல்ல வேண்டாம்!’
‘குடங்குடமாய் பாலதனைக் கொட்ட வேண்டாம்!’
‘கொட்டியபின் அதை நக்கிக் குடிக்க வேண்டாம்!’
“அறிவு தான் மனிதருக்கு அழகு என்ற
அருந் தலைவர் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!”
என அருமையான கருத்துச் செறிவூட்டக்கூடிய தனது எழுத்தின் மூலம் அந்த நூலில் வளரும் குழந்தைகளுக்கு பகுத்தறிவுப் பாலூட்டியவர் விந்தன். அறிவு மனம் கமழும் அவரது எழுத்தை வாசிப்போம்! சுவாசிப்போம்!!