இயற்கை எழில் கொஞ்சும் நீலமலை. குளு, குளு தென்றல், சலசலத்து ஓடும் அருவிகள். கடுமை காட்டாத கதிரவனின் ஒளி, சிறகடித்துப் பறக்கும் சிங்காரச் சிட்டுக்களின் இனிய ஒலி, தன்னிச்சையாக அலைந்து திரியும் காட்டின் சொந்தங்களான மிருகங்கள் என்ற சூழலில் வாழும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. வாட்டும் கடும் கோடை, வறண்ட பாலை, பாலைவனச் சோலையைத் தேடித் தவிக்கின்ற நிலை, குடிதண்ணீருக்குக் கூட அலையும் நிலை, புல், பூண்டு, செடி, கொடி, என்று பசுமையைப் பார்க்க முடியாத பாலை போலும் வாழ்க்கை அமைந்து விடுவதாக சிலர் நினைக்கின்றனர். “எதற்காக வாழ வேண்டும்?” என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படும் விளைவு “தற்கொலை”தான் தீர்வு என்ற முடிவுக்கு அவர்களைத் தள்ளுகிறது. குடும்பச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல் என்று சவால்களைச் சந்திக்க முடியாதவர்கள், மனம் தளர்ந்து எடுக்கும் முடிவுதான் “தற்கொலை”. என் மருத்துவப் பணியின்போது மனம் உடைந்து, தற்கொலைக்கு முயன்ற ஒருவருக்கு நான் மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டது.
அவர் பெயர் நேசமணி. அய்ம்பத்து அய்ந்து வயதான அவர் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு ஆண், ஒரு பெண். இருவரும் கல்லூரியில் படிக்கும் வயதில் உள்ளனர். ஆனால், அவர்கள் அம்மாவுடன் இருக்கிறார்கள். நேசமணி அவர்களோடு இணைந்து வாழ பல முயற்சிகள் செய்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த அவரது இணையர் பல வகைகளில் முயன்றுள்ளார். இந்தக் குடிப்பழக்கம் குடும்பத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவு பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இணையர்களுக்குள் எப்போதும் சண்டை. குடும்பத்தில் தீர்க்க முடியாத அளவு சிக்கல்கள் எழுந்து, கடைசியில் மணவிலக்கில் வாழ்க்கை முடிந்துள்ளது.
குழந்தைகள் அம்மாவிடம் இருந்துவிட, நேசமணி தனியாக வாழும் நிலை ஏற்பட்டு விட்டது. தனிமை குடிப்பழக்கத்தை மேலும் அதிகமாக்கியது. உடல் நிலையும் கெட்டுவிட்டது. இவ்வளவு குழப்பத்திற்கும் காரணமான அந்தக் கெட்டப் பழக்கத்தை விட்டு நல்வழிக்குத் திரும்புவதுதான் சரியான வழி என்று சிந்திக்க முடியாத அவர், “இனி யாருக்காக வாழ வேண்டும்? செத்து விடலாம்” என்று தற்கொலை முடிவுக்கு வந்து விட்டார். அவரிடம் அனுமதி பெற்ற ஓர் இரட்டைக் குழாய் துப்பாக்கி இருந்தது. சாவது என்ற முடிவுடன், தன் துப்பாக்கி, சிறிது பணம், துணிமணிகள் என்று எடுத்துக் கொண்டு அவர் வந்த இடம் குன்னூர். குன்னூர் வந்த அவர் ஒரு விருந்தினர் விடுதியில் அறை எடுத்துக் கொண்டு தாங்கினார்.அன்றிரவு நன்றாக மது அருந்திவிட்டு, வயிராற இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கினார். காலை தாமதமாகத்தான் எழுந்துள்ளார். காலைக் கடன்களை முடித்து விட்டு, தற்கொலை செய்து கொள்ள ஆயத்தமானார். மனதில் கலக்கம். அதற்கு முன் இரவு வரை முடிவில் உறுதியாக இருந்தவருக்கு மரணத்தை நெருங்கும் நேரத்தில் மனதில் பயம் தோன்றி விட்டது. பயத்தைப் போக்க மீண்டும் மதுவின் துணை தேவைப்பட்டது. மீண்டும் மது அருந்தினார். மது போதையில் பயம் பறந்து விட்டது. விடுதி அறையின் வெளிக்கதவைத் தாழிடாமல் மூடினார். எல்லா ஆயத்தங்களும் முடிந்து விட்டன. சற்று தடுமாறியவாறு, இரட்டைக் குழாய் துப்பாக்கியை எடுத்து, இரவையை (Catridge) போட்டார்.
சற்று பயத்துடன், நடுங்கும் கரங்களுடன், நின்று கொண்டு துப்பாக்கியின் குழாய்களை வாயில் வைத்துக்கொண்டார். துப்பாக்கியின் தலைப்பகுதி மரப்பட்டையைத் தரையில் வைத்து, விசையில் கால் பெருவிரலில் வைத்து அழுத்தினார். பெருத்த ஓசையுடன் துப்பாக்கி வெடித்தது. மது அருந்தி இருந்ததால் கை லேசாக நடுங்கிவிட்டது. துப்பாக்கியிலிருந்து கிளம்பிய காரீய இரவைகள் நேராக மண்டை ஓட்டைத் துளைத்துக் கொண்டு, மூளையை சிதைப்பதற்குப் பதில் – கை நடுக்கத்தால், துப்பாக்கிக் குழாய்கள் லேசாக இடப்புறம் நகர்ந்து விட்டன. மூளைச் சிதறுவதற்குப் பதில் துப்பாக்கியின் இரவைகள் முகத்தைக் கிழித்துக் கொண்டு வெளியேறின. “அய்யோ” என்று கத்தியவாறு தரையில் சாய்ந்து விட்டார். முகம் முழுவதுமாக இடது புறம் கிழிந்து இரத்தம் சொட்ட, மயங்கி விட்டார்.
அறையில் வெடிச் சத்தமும், நேசமணி கத்தும் சத்தமும் கேட்டதும், விடுதியில் இருந்த மற்றவர்கள் அறைக்கு ஓடி வந்துள்ளனர். வந்தவர்களுக்குப் பேரதிர்ச்சி! துப்பாக்கி ஒருபுறம் கீழே கிடந்துள்ளது. மறுபுறம் இரத்த வெள்ளத்தில் நேசமணி. அறையின் கூரைகளில் துப்பாக்கியின் இரவைகள் ஒட்டிக் கொண்டு இருந்துள்ளன. உடனே அவசர ஊர்தியை அழைத்து, அது வந்தவுடன் அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு, மயங்கிய நிலையில் இருந்த நேசமணியை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவசரப் பகுதியில் சேர்க்கப்பட்டு, முதலுதவிகள் துவக்கப்பட்டுள்ளன. முதலில் மருத்துவப் பயனாளியின் நாடித்துடிப்பு, இதயச் செயல்பாடு சீராக இருப்பதை ஒரு மருத்துவர் பரிசோதிக்கத் தொடங்கினார்.அதே நேரம் முகத்தில் கொட்டும் இரத்தம் நிறுத்தும் முயற்சியை செவிலியர்கள் செய்யத் துவங்கினர். மற்றொரு மருத்துவர் “உயிர் மூச்சுக் காற்றை (Oxygen) செலுத்துவதிலும், மருத்துவப் பயனாளிக்கு மயக்கம் தெளிவிப்பதிலும் ஈடுபட்டார். நாடி, மூச்சுக் காற்று அளவி (Pulse-oxy meter) மருத்துவப் பயனாளிக்குப் பொருத்தப்பட்டது. முதலுதவிகள் முடிந்ததும், எனக்கு அழைப்பு வந்தது. நானும் என் மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு, வேகமாகச் சென்றேன்.
அம்மருத்துவமனை ஓரளவு வசதியுள்ள தனியார் மருத்துவமனை. பெரிய முக அறுவை மருத்துவங்களை நான் அங்குதான் செய்வது வழக்கம். நான் அங்கு சென்றடையும்போதே மருத்துவப் பயனாளிக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. மருத்துவப் பயனாளியின் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகள் இயல்பு நிலையில் இருந்தன. இதய மின்னலைப் பதிவு (ECG), இரத்த ஆய்வுகள், ஊடுகதிர் படம் எடுக்கக் கோரினேன். மயக்குநரை வரச் சொல்லி அழைப்பு (‘Memo’) அனுப்பினேன். அவரும் வேகமாக வந்தார். மருத்துவப் பயனாளியின் இரத்த வகையை ஆய்ந்து, கொடையாளிகளை அழைத்தோம். அவர்களும் உடனே வந்து, இரண்டு அலகு (Unit) இரத்தம் கொடுத்தனர். என் மகன் மரு. இனியன், ஒரு முக அறுவை மருத்துவர். அவரையும் அழைத்தேன். ஊடு கதிர் படம் வந்தது. அதில் முகத்தின் இடது பகுதி (கிழிந்த பகுதி) முழுவதும் துப்பாக்கி இரவையின் துகள்கள் பதிந்திருந்தன. கீழ்த்தாடை எலும்பின் ஒரு பகுதி, துப்பாக்கி இரவை துளைத்து, நொறுங்கியிருந்தது. அறுவை மருத்துவத்திற்கு முன் செய்ய வேண்டிய அனைத்து ஆய்வுகளும் முடிந்தன. நல்வாய்ப்பாக மருத்துவப் பயனாளியின் மற்ற ஆய்வுகள் இயல்பு நிலையில் இருந்தன. மயக்குநர் அவைகளை ஆய்வு செய்து, அறுவை மருத்துவத்திற்கு அனுமதி அளித்தார். இந்த ஆயத்தங்கள் எல்லாம் முடிய இரவு 9 மணியாகி விட்டது.
அனைத்து ஆயத்தங்கள் முடிந்த நிலையில் மருத்துவப் பயனாளிக்கு மயக்கம் முழுமையாகத் தெளிந்து விட்டது. முகத்தில் கிழிந்த பகுதியிலிருந்து இரத்தம் கொட்டுவதும் நின்று போனது. முகத் தசைகள் எல்லாம் கிழிந்த நிலையில் இருந்ததால் மருத்துவப் பயனாளியால் பேச முடியவில்லை. அவருக்கு அறுவை மருத்துவம் செய்யப் போவதைக் கூறி அனுமதி கேட்டோம். அவரும் தலையாட்டி இசைந்து, கையொப்பமிட்டு, இசைவைத் தந்தார். அவரது உறவினர்களும் மகிழுந்தின் மூலம் குன்னூர் வந்து சேர்ந்து விட்டனர். அவர்கள் இசைவையும் பெற்றேன்.
மருத்துவப் பயனாளி அறுவை அரங்கிற்கு மாற்றப் பட்டார். மூக்கின் வழியே மயக்க மருந்து மூச்சுக் குழாய் செலுத்தப்பட்டது. இடது மூக்கின் தசைப் பகுதிகள் சிதைந்து போயிருந்ததால், வலது மூக்கின் வழியே மூச்சுக் குழாய்க்குள் மயக்க மருந்துக் குழாய் செலுத்தப்பட்டது. மருத்துவப் பயனாளி முழுமையாக மயங்கியதும், அறுவை மருத்துவம் துவக்கப்பட்டது. மரு. இனியன் உதவியாளராக (Assist) நிற்க அறுவை மருத்துவத்தைத் துவக்கினேன். முழுவதும் சிதைந்த முகத்தில் எந்தப் பகுதியில், என்ன தசைகள் இருக்கின்றன என்றே கண்டுபிடிக்க முடியாத நிலை. முதலில் தசையில் பதிந்துள்ள காரீயத் துண்டுகளை ஒவ்வொன்றாக அகற்றினோம். 32 துண்டுகள் முகத் தசைகளிலிருந்து அகற்றப்பட்டன. உடைந்த எலும்புத் துண்டுகளை ஸ்டெயின்லெஸ் கம்பிகள் மூலம் கட்டி சீராக்கினோம். பின் கிழிந்த தசைகளை ஒவ்வொன்றாய் கண்டுபிடித்தோம். முகத்தில் தோலுக்குக் கீழ், ஏறத்தாழ பத்து தசைகள் இருக்கின்றன. மிகவும் கடினமான சிரத்தையுடன் அவைகளைத் தேடிக் கண்டுபிடித்து இணைத்தோம். வாயின் உள்புறம் சவ்வுகள் கிழிந்துத் தொங்கிக் கொண்டிருந்ததையும் தையலிட்டு மூடினோம். இப்படி அனைத்துப் பகுதிகளையும் இணைத்துப் பின் முகம் ஒரளவுக்கு அதன் இயல்பு நிலைக்கு வந்தது. பின் தோல் பகுதிக்கு வந்தோம். தோலின் ஒரு பகுதி முழுவதுமாக சிதைந்திருந்தது. அதை அகற்றி விட்டு, மீதி இருந்த பகுதியை தையல் போட்டு மூடினோம். ஓரளவுக்கு முகம் பார்க்கும் வகையில் மாறியது. பின் கட்டுப் போட்டு காயங்களை மூடினோம். மருத்துவப் பயனாளியின் அனைத்து இயக்கங்களும் இயல்பான அளவில் இருந்ததால் மயக்க மருந்துக் குழாய் மூச்சுக் குழாயிலிருந்து அகற்றப்பட்டது. ஏறத்தாழ 6 மணி நேரம் இந்த அறுவை மருத்துவம் நடந்தது.
மணி காலை 4 மணி. நாடித் துடிப்பு, மூச்சு, உயிர் மூச்சுக் காற்றின் அழுத்தம், இரத்த அழுத்தம் ஆகியவை இயல்பு நிலையில் இருந்ததால் மருத்துவப் பயனாளி அறுவை அரங்கிலிருந்து, படுக்கைப் பகுதிக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரத்தில் தையல்கள் அகற்றப்பட்டன. மன நலமருத்துவரின் அறிவுரை (Psychiatric counselling) நேசமணிக்குக் கொடுக்கப்பட்டது. மனமும், உடலும் தேறிய பின் நேசமணி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
“இன இழிவு” நோய்க்கு ஆளாகி உருக்குலைந்து, சிதைந்து போன மருத்துவப் பயனாளியான இச்சமூகத்தை மருத்துவம் செய்து காப்பாற்றிய சமூக மருத்துவர் தந்தை பெரியாரை நினைத்துப் பாருங்கள்!