‘வாக்குத் திருட்டு’: அரசியலமைப்பின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் ஜனநாயக எல்லை மீறல்!

13 Min Read

கட்டுரை, ஞாயிறு மலர்

கட்டுரை, ஞாயிறு மலர்

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற கொள்கையை கேலிக்குள்ளாக்கும் வகையில், வாக்காளர் பட்டியலில் தொடர்பில்லாத நபர்களைச் சேர்ப்பது, ஒரே முகவரியில் பல போலி வாக்காளர்கள், முதல்முதலாக வாக்களிப் பவர்களுக்கு அதாவது 18 வயதைப் பூர்த்தி செய்த நபர்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு வாக்குரிமையை 50 வயதுக்கும் மேற்பட்டோருக்குக் கொடுக்கப்பட்டது போன்றவைகள் பெரும் சூறாவளியைக் கிளப்பி உள்ளன. இது இந்திய மக்களாட்சியின் அடிப்படை ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் மிகவும் ஆபத்தான செயலாகும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த ‘வாக்குத் திருட்டு’ (வோட் சோரி) குறித்து தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது 2024 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, 2025 ஆகஸ்ட் வரை தொடரும் ஒரு முக்கிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிசாராத பொதுநல சமூக சேவகர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, போலி வாக்காளர்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

2025 ஆகஸ்ட் 7 அன்று, கருநாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 போலி வாக்குகள் இருப்பதாக ராகுல் காந்தி அறிவித்தார். இம்மோசடி பல வழிகளில் நடந்ததாக அவர் விளக்கினார்:

போலி வாக்காளர்கள்: ஒரே பெயர் பல முகவரிகளில் பல வாக்காளர் அடையாள அட்டைகள். போலி அல்லது இல்லாத முகவரிகளில் வாக்காளர்கள் பதிவு.  ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள்.

தவறான ஒளிப்படங்கள்: ஒளிப்படம் இல்லாத அல்லது போலி ஒளிப்படங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை.  Form 6 மற்றும் Form 8 போன்றவற்றை தவறாகப் பயன்படுத்தி போலி வாக்காளர் அட்டை.

மேலும், மகாராட்டிரா முதலமைச்சரின் தொகுதியில் 5 மாதங்களில் வாக்காளர் எண்ணிக்கை 8% அதிகரித்ததாகவும், சில வாக்குச் சாவடிகளில் 20 முதல் 50% அதிகரிப்பு இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

ஊடகவியலாளர்கள் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுகள் முக்கியமாக கருநாடகா, மகாராட்டிரா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களை மய்யமாகக் கொண்டவை.

கருநாடகாவில் போலி வாக்காளர்கள்: பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் ஒரு கட்டடத்தில் 80 போலி வாக்காளர்கள் இருப்பதாக ஊடகங்கள் கண்டுபிடித்தன. ராகுல் காந்தியின் அறிவிப்புக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலை அனைவரும் சரிபார்க்க இயலாத வகையில் தேர்தல் ஆணையம் இணையதளத்தை முடக்கிவிட்டது. இதை ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது. மேலும், போலி பெயர்கள் மற்றும் போலி முகவரிகளை  பாஜக ஆதரவு ஊடகங்களே ஆய்வு செய்து வெளியிட்டன.

‘ரிபோர்டர்ஸ் கலெக்டிவ்’ ஆய்வில், உத்தரப் பிரதேசத் திலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மற்றும் சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பல வாக்காளர்கள் ஆதாரமில்லாத போலி முகவரிகளில் பதிவாகியுள்ளனர். மகாராட்டிராவில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு முகவரி இல்லை  முகவரி இடத்தில் வெறும் ஊர் அதாவது மும்பை, ஜால்னா, நாசிக், புனே, சதாரா என்று மட்டுமே உள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன. ‘இந்தியா டுடே’யின் ஆய்வில் பீகார் மாநிலத்தின் உள்ள ஒரு தொகுதியில், ஒரே  முகவரியில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பது உறுதியானது. ஊடகக் குழுவினர்  அங்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த இடத்தில் வீடே இல்லை. ஒரே ஒரு மாட்டுத்தொழுவம் மட்டுமே – அதுவும் குளிர்காலத்தில் மட்டுமே மாடுகள் உள்ளே சென்று பாதுகாப்பாக இருக்கும் ஆண்டின் இதர மாதங்களில் கோதுமை வைக்கோல் மற்றும் பசுத்தீவனம் வைக்கும் இடம் என்று தெரியவந்தது.

கட்டுரை, ஞாயிறு மலர்

பீகாரில் எஸ்அய்ஆர் (SIR) திட்டத்தின் கீழ் போலி வாக்குகள் சேர்க்கப்படுவதாக ‘தி வயர்’ ஆய்வு கூறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பாஜக போலி உள்ளீடுகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டினார். கேரளாவின் திரிசூரில் 50,000  போலி வாக்குகள் இருப்பதாக சுதந்திர ஊடக அமைப்பின் ஆய்வு தெரிவித்தது. ‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற பன்னாட்டு ஊடகங்களும், வாக்காளர் பட்டியல் மோசடிகளை ஆய்வு செய்து உண்மைகளை எழுதி வருகின்றன. ஊடகவியலாளர்களின் ஆய்வுகள், தேர்தல் ஆணையத்தின் ரகசியத்தன்மை மற்றும் மோசடி ஆகியவை ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்துவதாகக் கூறுகின்றன.

தேர்தல் மோசடிகள் தொடர்பாக சமீபத்தில் வெளியான ஆங்கில நூல் ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் டில்லி தேர்தலில் உயிருள்ளவர்களை மரணித்தவர்கள் என்றும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகள் ஒவ்வொரு தேர்தலிலும் மாநிலம் மாநிலமாக மாறுவது குறித்தும்  நூலில் சான்றுகளோடு குறிப்பிடப்பட்டுள்ளது

மத்தியப் பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்: மத்தியப் பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு, 2018 முதல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. மேனாள் முதலமைச்சர் கமல் நாத், 2018இல், ஒரே நபர் பல தொகுதிகளில் அல்லது வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டிருப்பது மற்றும் ஒரே ஒளிப்படத்துடன் பல உள்ளீடுகள் இருப்பது போன்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டினார் மத்தியப் பிரதேசத்தில் போலி வாக்காளர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள், இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளின் நேர்மையை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு முக்கிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. ராகுல் காந்தி, 2025 ஆகஸ்ட் மாதம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்கள் திடீரென அகற்றப்பட்டதாகவும், இது தேர்தல் முறைகேடுகளை மறைப்பதற்காக செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். அவர் ஒரு தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆதாரங்களுடன் கூறினார்

கட்டுரை, ஞாயிறு மலர்

ஊடக ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள்

ஊடகவியலாளர்களின் ஆய்வுகள், மத்தியப் பிரதேசத்தில் போலி வாக்காளர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளன:

டைனிக் பாஸ்கர் ஆய்வு: மத்தியப் பிரதேசத்தில் 1,696 முகவரிகளில் ஒரு வீட்டில் 600 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ‘தைனிக் பாஸ்கர் ஹிந்தி நாளிதழ்’ செய்தி வெளியிட்டது. குறிப்பாக, குவாலியர் மாவட்டம் இதில் முதலிடத்தில் உள்ளது. 16,426 பேர் இத்தகைய போலி வாக்காளர்கள் ஆவர். இந்தூர் மற்றும் போபால் மாவட்டங்களிலும் அதிகம் உள்ளது. நரேலா சட்டமன்றத் தொகுதியில் ஒரே வீட்டில் இந்து மற்றும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு ஜாதியினரின் பெயர்களுடன்  வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, இது வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளை உறுதிப்படுத்துகிறது.

கட்டுரை, ஞாயிறு மலர்

ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்: ஒரு வீட்டில் 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது மற்றும் 1,696 முகவரிகள் போலியாக இருப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய முகவரிகளில் பல இடங்கள் உண்மையில் இல்லை அல்லது செல்லாதவை என்று கண்டறியப்பட்டது. சாகர் மாவட்டத்தில் “மத்தியப் பிரதேசத்தில் ஒரு வீட்டில் 50 வாக்காளர்கள், பல மதங்களைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

மத்தியப் பிரதேசத்தில் போலி வாக்காளர்கள் இருப்பது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி முறைகேடுகளால் உருவானது என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஒரு தொகுதியில் 1.5 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், இது தேர்தல் முடிவுகளை சீர்குலைத்ததாகவும் அவர் கூறினார்.

மகாராட்டிரத்தில் போலி வாக்காளர்கள்

நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போலி வாக்காளர்கள்: மகாராட்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில், 2024 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கும், 2024 நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையே ஆறு மாத காலத்தில் 29,219 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக “நியூஸ் லாண்டரி” ஊடகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இது மொத்த வாக்காளர்களில் 8.25% ஆகும், இது தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி (4%க்கு மேல் வாக்காளர் சேர்க்கை இருந்தால் மறு ஆய்வு செய்ய வேண்டும்) மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது. ஆனால், எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.    இதே தொகுதியில், 2,301 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர், மேலும் 50 வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ததில் 4,000 வாக்காளர்களுக்கு முகவரி இல்லை எனக் கண்டறியப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள்

தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி, 70% வாக்குச்சாவடிகளில் 4%க்கு மேல் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். சில வாக்குச்சாவடிகளில் 20% முதல் 40% வரை புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மகாராட்டிராவில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அய்ந்து மாதங்களில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.    வாக்காளர் பட்டியலில் முகவரி இல்லாத பெயர்கள், செல்லாத முகவரிகள், மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்

ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக இணைந்து “மிகப்பெரிய மோசடி” செய்ததாக குற்றம் சாட்டினார். மகாராட்டிராவில் அய்ந்து மாதங்களில் 8% வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்.    வாக்குச்சாவடிகளில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சரத் பவாரின் குற்றச்சாட்டு

மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் 288 இடங்களில் 160 இடங்களை வெல்ல உதவுவதாக உறுதியளித்து இரண்டு பேர் தன்னை அணுகியதாக சரத் பவார் கூறினார். இவர்கள் தேர்தலை முறைகேடாக பாதிக்க வழிகள் இருப்பதாகக் கூறியதாகவும், ஆனால் அவர்களை நிராகரித்ததாகவும் தெரிவித்தார். மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் ஆணைய இணையதளங்களில் இருந்து வாக்காளர் பட்டியல் பக்கங்கள் அகற்றப்பட்டதாகவும், இது முறைகேடு ஆதாரங்களை மறைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

கட்டுரை, ஞாயிறு மலர்

தேர்தலுக்குத் தேர்தல் மாநிலம்
மாறும் பிக்குபாய் தல்சானியா

பிக்குபாய் தால்சானியா பீகார் மாநில பாஜக பொறுப்பாளராக 2023 ஆம் ஆண்டு நியமிக்கப் பட்டார். இவர் குஜாராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்தவர். இவர் 2024 ஆம் ஆண்டு குஜராத் சென்று நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். இவருக்கு பாட்னாவிலும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. இதை தேஜஸ்வி யாதவ் கண்டுபிடித்து ஊடகப் பேட்டியில் கூறினார். அதாவது பாஜகவினர் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அங்கு அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது எவ்வளவு பெரிய மோசடி!

பாஜக தலைமை நாடுமுழுவது லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துத்துவ அமைப்பை ச்சேர்ந்தவர்களை தேர்தல் பணிக்காக அனுப்பி உள்ளது. இவர்கள் எந்த எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அங்கு வாக்காளர் அடையாள அட்டை பெற்று விடுகிறார்கள் என்பது பீகார் பாஜக பொறுப்பாளர்கள் விவகாரத்தில் உண்மையாகி உள்ளது.

இதையேதான் உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கூறினார். பாஜகவிற்காக தேர்தல் பணியாற்ற வந்த வெளிமாநிலத்தவர்களுக்கு மகாராட்டிராவிலேயே வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதாவது அவர்களும் அவரைச் சேர்ந்தவர்களும் பஜகவிற்கு வாக்களிக்கும் வகையில் இதைச் செய்துள்ளனர்.

பீகார் துணை முதலமைச்சர் விஜய்குமார் சின்ஹா, முசாபர்பூர் பாஜக மேயர் நிர்மலா தேவி போன்றோருக்கும் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மின்னணு வாக்காளர் பட்டியலைத் தந்தால் சில வினாடிகளில் கோடிக்கணக்கான போலி வாக்காளர்கள் பாஜகவினரால் உருவாக்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுவிடும் ஆகையால் தான் தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலைத் தராமல் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு வருகிறது.

“வாக்குப் பதிவு கருவி காட்டும் வாக்கு எண்ணிக்கை செல்லாது, நான் சொல்வதுதான் செல்லும்” பானிபட்டில் உள்ள புவானா லக்கோஹு பஞ்சாயத்துத் தேர்தல் 2022இல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் அனைவரின் முன்னிலையிலும் எண்ணப்பட்டன. பொதுவாக தேர்தலில் வெற்றி என்பது எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிக வாக்குகளைப் பெற்றவர் வெல்வார், அவருக்கு குறைவாக ஒரு வாக்கைப் பெற்றிருந்தாலும் இரண்டாமிடம் வந்தவர் தோல்வி அடைவார். இதுதான் நியதி ஆனால் பாஜக தேர்தல் ஆணைய கூட்டணிக்கு இந்த விதி பொருந்தாது. ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்த பாஜகவைச் சேர்ந்தவரை வென்றார் என்று அறிவித்து சான்றிதழும் கொடுத்துவிட்டது  தேர்தல் ஆணையம். கண்ணுக்கு முன்பாகவே இந்த மோசடி நடந்ததை பார்த்து நீதிமன்றம் சென்றார் தோற்றவர்.  அவர் கைகளில் இருந்த கைபேசிக் காட்சிப் பதிவு உள்ளிட்டவைகள் சாட்சியாக நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன.  பானிபட் மாவட்ட நீதிமன்றம் அரியானா பஞ்சாப் உயர்நீதிமன்றம் போன்றவை வழக்கை தள்ளுபடி செய்ய தோற்றவர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றம்   “இயந்திரத்தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறியது . உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. வெற்றி பெற்றவரின் திருட்டு பிடிபட்டது.

நீதிபதி சூர்யகாந்த், பானிபட் துணை ஆணையருக்கும், தேர்தல் அதிகாரிக்கும், இரண்டு நாட்களுக்குள் மனுதாரர் மோஹித் குமாரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த மோசடியைச் செய்த தேர்தல் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை என்றால் ஒன்றுமில்லை.

ராகுல் காந்தி 16 நாட்களுக்கு வாக்குத் திருட்டு விவகாரத்தை முன்வைத்து ஆகஸ்ட் 17 முதல் 23  வரை சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.  இந்த யாத்திரையின் நோக்கம், வாக்குத் திருட்டு பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது. எஸ்.அய்.ஆர் பற்றி மக்களுடன் பேசுவது. 16 நாட்களில் 50 தொகுதிகளில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. இதற்காக ராகுல் காந்தி தொடர்ந்து பீகாரில் தங்கி இருப்பார். இதற்கு முன், ஜனவரி 2024இல் ராகுல் காந்தி பீகாரில் அய்ந்து நாட்கள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மேற்கொண்டார். “வாக்குத் திருட்டு என்பது ஒரு தேர்தல் பிரச்சினை மட்டுமல்ல,” என்று அவர் கூறினார்.

இஸ்லாமியர்களா – உடனே நீக்கிவிடுங்கள்?

பீகார் மாநிலத்தில் இசுலாமிய வாக்காளர்களில், சுமார் 50 லட்சம் இசுலாமிய வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக  பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடுத்துக்காட்டாக  லகிம்சராய் பகுதியில் உள்ள முகமது குல்சார் என்பவரின் குடும்பத்தினரின் பெயர்கள் நீக்கபப்ட்டுள்ளதாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இவர் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை வாக்களித்துள்ளார். அதற்கான சான்றையும் வைத்துள்ளார் இந்தக் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்களின் நெருக்குதலால் தேர்தல் ஆணையம் கைப்பாவையாக செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இது பீகாரில் மட்டும் நடக்கவில்லை. 2024ஆம், ஆண்டு உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் வாக்குப்பதிவு செய்யச்சென்ற பெருவாரியான இஸ்லாமிய வக்காளர்களை காவல்துறை விரட்டியுள்ளது.

எடுத்துக்காட்டாக உத்தரப் பிரதேசம் சம்பல் தொகுதி

நாடாளுமன்ற தேர்தலின் போது அங்கு வாக்களிக்கச் சென்ற பெருவாரியான இசுலாமியர்கள் விரட்டப்பட்டனர். இது தொடர்பாக பிபிசி கள ஆய்வு நடத்தியது அதன் தமிழாக்கம் கீழே:

சம்பல் நகரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள அஸ்மவுலி காவல் நிலையப் பகுதியின் ஷாபாஸ்பூர் கிராமத்தில் மருந்தகம் வைத்திருக்கும் ஷாதாப் கூறுகையில், “என் மருந்தகத்தில் வலிக்கு தடவும் களிம்புகள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் தீர்ந்துவிட்டன. வாக்களித்தவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர். இதனால் ஏராளமான மக்கள் காயமடைந்தனர், அவர்கள் எங்கள் கடையில் இருந்த பெரும்பாலான வலி நிவாரணி மருந்துகளையும் வாங்கிச் சென்றனர்” என்றார்.

ஷாபாஸ்பூர் கிராமத்துக்கு அருகிலுள்ள ஓவாரி கிராமத் திலும் இதே நிலைதான். ஓவாரி, முசுலிம்கள் அதிகம் வாழும் கிராமம். இங்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடன், மக்கள் வாக்குச் சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, தங்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியதாக ஏராளமான முசுலிம் வாக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓவாரி கிராமத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளியில் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது, அதில் மக்கள் கூட்டம் வாக்குச்சாவடியை விட்டு வெளியே ஓடுவது பதிவாகியுள்ளது. அவர்களின் பின்னால் காவல்துறையினர் ஓடுவதும் பதிவாகியுள்ளது. இதுபோன்ற பல காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

மூன்றாம் கட்ட வாக்குப் பதிவின்போது, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் முசுலிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்து பல வாக்காளர்களை காவல்துறை தாக்கியதாக தகவல்கள் வந்தன. அங்குள்ள வாக்காளர்கள் தங்களை காவல்துறை வாக்குச் சாவடியில் இருந்து விரட்டியதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஜியாவுர் ரஹ்மான் பார்க், முசுலிம் வாக்காளர்கள் மீது நிர்வாகம் தேவையில்லாமல் கடுமையாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டினார்.  நாங்கள் அப்பகுதிக்குள் எங்கு சென்றாலும், பலரது உடல்களில் காயங்கள் காணப்பட்டன. ஓவாரி கிராமத்தில் இருந்து வெளியான ஒரு காணொலியில் காயமடைந்த முதியவர் ஒருவர் சாலையில் கிடக்கிறார், அவருக்குப் பின்னால் காவல் துறையினர் நிற்கின்றனர்.

அவரது பெயர் ரயீஸ் அகமது, ஏறக்குறைய 80 வயது இருக்கும். ரயீஸ் வாக்களிப்பதற்காகத் தனது வீட்டைவிட்டு வெளியே சென்றார், ஆனால் அங்கு காவல்துறையினரால் தாக்கப்பட்டதால், அவர் படுகாயம் அடைந்தார். இதனால் தன்னால் வீடு திரும்ப முடியாமல் சாலையில் கிடந்ததாக அவர் வருத்தத்துடன் கூறுகிறார். அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் வீடு வந்து சேர்ந்திருக்கிறார். ரயீஸ் அகமது உடன் அவரது மகன் முகமது ஆலமும் வாக்களிக்க வந்தார். காவல் துறையினர் அவரையும் அடித்து உதைத்தனர் என்பது அவரது குற்றச்சாட்டு.

இந்த தொகுதியில் பெருவாரியான வாக்காளர்கள் இசுலாமியர்களே. சம்பல் பகுதியில் இசுலாமியர்கள் பெருவாரியாக உள்ள அனைத்து பகுதிகளிலும் தேர்தலில் வாக்களிக்க விடாமல் காவல்துறை கெடுபிடி செய்தது அதையும் மீறி வாக்களிக்க வந்தவர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.

இதே போல் மகாராட்டிராவின் அகமத் நகர், மத்தியப் பிரதேசத்தின் புஜாவல் மற்றும் அரியானாவின் நுஹ தொகுதிகளில் காவல் துறையினர் இசுலாமியர்களை வாக்குப் பதிவளிக்க விடாமல் செய்தனர் ஒரிசா மற்றும் சத்தீஷ்கரில் பழங்குடியின மக்களை வாக்களிக்கவிடாமல் செய்தனர். இந்த இரண்டு மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் அமர்ந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *