தீண்டாமை, ஜாதி ஒழிந்து சமூகநீதி, சமத்துவம் நிலவும்போதுதானே ‘உண்மையான சுதந்திரம்’ விடியும்?

எந்த சுதந்திர நாட்டிலாவது ‘பிறவி பேதம்’, ஜாதி உண்டா?
தீண்டத்தக்கவன், தீண்டத் தகாதவன், சு(இ)டுகாட்டிலும்கூட பேதம் உள்ள நிலையில், உண்மையான சுதந்திரம் எங்கே?
தீண்டாமை, ஜாதி ஒழிந்து சமூகநீதி, சமத்துவம் நிலவும்போதுதானே ‘உண்மையான சுதந்திரம்’ விடியும்?

பிறப்பின் அடிப்படையில் பேதம் நிலவும் ஒரு நாட்டில், உண்மையான சுதந்திரம் என்று கூறி, எப்படிக் கொண்டாடுவது? சமூகநீதி, சமத்துவம் என்ற நிலை உருவாகும்போதுதான் உண்மையான சுதந்திரம் – கொண்டாட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

எந்த நாட்டிலாவது
பிறப்பின் அடிப்படையில்
பஞ்சமன், சூத்திரன் உண்டா?

இன்று (ஆகஸ்ட் 15 ) ‘சுதந்திர நாள்’, 79 ஆவது  ‘விடுதலை நாள்’ என்று கொண்டாடப்படுகிறது – அரசுகளால் – ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால்; ஆனால், உண்மையில் குடிமக்கள் அனைவரும் – மற்ற பல நாடுகளிலும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாடும் மன நிலையில் இருக்கிறார்களா? என்பது முதற்கேள்வி.

உலகில் ‘சுதந்திரம்’ பெற்ற எந்த நாட்டிலாவது மனிதர்களை இழிவுபடுத்தி, ‘‘பஞ்சமன்’’, ‘‘சூத்திரன்’’, ‘‘தொடக்கூடியவர்கள் – தொடக்கூடாதவர்கள்’’ (Untouchables), ‘‘நெருங்கக் கூடியவர்கள் – நெருங்கக் கூடாதவர்கள்’’ (Unapproachables) ‘‘மேல்ஜாதி என்ப வர்கள், கண்ணால் பார்க்கக்கூடாத ஜாதியினர்’’ (Unseeables) என்ற மக்களை பிறவி அடிப்படையில் (அவர்களது அறிவு, ஆற்றல், உழைப்பு காரணமாக அளவீடு செய்து பார்க்காமல்) மதவெறி, வருணம், ஜாதி, குலம், செய்தொழில் – இவற்றின் அடிப்படையிலே பிரித்து, வேற்றுமைப்படுத்திப் பார்க்கும் நிலை உண்டா? வேதனையும், வெட்கமும் படவேண்டிய நிலையில் வேறு எந்த அடிமை நாடுகள்கூட இன்று பூமிப் பந்தில் உள்ளதா – இந்தப் ‘புண்ணிய, புனித, பாரத’ ஞானபூமி என்று தம்பட்டம் அடிக்கும் நம் நாட்டைத் தவிர!

சுடுகாட்டிலும், இடுகாட்டிலும்கூட
பேதம் என்ற அவலம்!

செத்த பிறகு புதைக்கும் இடுகாட்டிலும், எரிக்கும் சுடுகாட்டிலும்கூட – சாவில்கூட மயானத்தில்கூட ‘‘மனிதத்தைத்’’ தொலைத்துவிட்டு, ஜாதி ஆண வம், பெருமைப் பேசி, வெறிபிடித்து அலையும் கொடு மையைக் காணுவது 79 ஆவது சுதந்திர ஆண்டிலும் தொடரலாமா?

தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம், சுதந்திரம் எல்லாம் வெறும் ‘ஏட்டுச் சுரைக்காயாக’ அரசியல் சட்ட உறுதி மொழிகளாயினும், வெறும் சடங்காச்சாரமாக புழக்கத்தில் உலா வருகிறது!

நெஞ்சில் கை வைத்து – மனச்சான்று பேசுப வர்களால்கூட உண்மைகளை, யதார்த்தத்தை ஏன் ஒப்புக்கொள்ள முடியவில்லை?

சமத்துவம் அடைய, சரி நிகர் நிலை பெற, சமூகநீதிக்கு மட்டும்  ஜாதிக் குறிப்பு  நோய்த் தடுப்பு மருந்தில் மிகச் சிறு விஷம் (Poison) சேர்ப்பதுபோல், தேவைப்படும் நிலையைக்கூட புரிந்துகொள்ளாமல், அதையே உணவாக்கி, ஜாதி வெறியை தங்களது தனி வாழ்வு – விளம்பர வெளிச்சம், தகுதி இல்லாத நிலையிலும், தலைமைப் பிம்பம் இவற்றைக் கட்டி, ஆரிய நரிகள் நாட்டாண்மைக்குக் ‘‘கூலிப்படையாக’’, தங்களையும், தங்கள் கொள்கையான சமூகநீதியையும்கூட, அதன் எதிரிகளிடையே விற்றுப் பிழைக்கும் வெட்கக் கேடான நிலைதானே இன்றும் உள்ளது!

எல்லாவற்றிலும் பேதா பேதம் –
இந்த நிலையில் சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிகிறதா?

‘‘உள்ளொன்று வைத்துப் புறமொன்றுப் பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’’ என்றார் வள்ளலார்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்றும், ‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’’, ‘‘மெய்ப்பொருள் காண்க’’ என்றெல்லாம் அறிவுரை கூறினார் திரு வள்ளுவர்,

ஜாதி, பெண்ணடிமையை, மூடநம்பிக்கைகளை ஒழித்த பகுத்தறிவு வாழ்க்கை வாழச் சொன்ன புத்தியில், ‘புத்தரான’ சித்தார்த்தன் – இவர்கள் எல்லாம் இன்று இருந்தால், நம் சமூக, பிறவி இழிவு அவமானம்பற்றி நேரில் கண்டால், இதைச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் பொங்கும் ‘விடுதலை நாள்’ என்று கொண்டாடுவார்களா? அல்லது துன்பமும், துயரமும் அடைவார்களா?

பொது நிலையில், விருப்பு வெறுப்பு அற்ற நிலையில், மனிதநேயம் – மானிட உரிமைகள் கண்ணோட்டத்தில் இன்று நம்மால் மகிழ்ச்சியில், ‘‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே’’ என்று பாடும் நிலை உள்ளதா?

அரசியல் சட்டம்மீது எடுக்கப்பட்ட பிரமாண உறுதிமொழிகள், உண்மையில் செயல்படும் செம்மை நிலை உண்டா?

தந்தை பெரியாரின் தொலைநோக்குதானே வெற்றி பெற்றுள்ளது.

‘‘முதியவர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்னே கசந்து, பின்னே இனிக்கும்’’ என்பது எவ்வளவு அனுபவ உண்மை பார்த்தீர்களா?

உண்மைச் சுதந்திரம் எப்போது?

இந்த மதவெறி, ஜாதி வெறிக்கு நாமே விடை காணவேண்டும்.

ஆணவக் கொலைகளும், ஆணவ ஜனநாயகப் படுகொலைகளும், ஆதிக்க ஜனநாயக அவலங்களும், அடாவடித்தன அரசியல் நாடகங்களும்தான் ‘‘தோரணங்களாகத்’’ தொங்கவிடப்பட்டு நடத்தும் விசித்திர விழா நிலைதான் மிச்சம்!

என்று இந்த ஜாதி– தீண்டாமை ஒழிகிறதோ, அன்று தான் உண்மைச் சுதந்திரம் விடியும் நிலை என்பதே சமூகநீதி, சமத்துவப் போராளிகளின் வேட்கையும், விழைவும்!

அந்த இலக்கு நோக்கியே நமது தீராப் பயணம்!

கி.வீரமணி

  தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை  

15.8.2025  

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *