மதவெறியின் உச்சம்!

மதமாற்றங்களுக்கான தண்டனையை கண்மூடித்தனமாக அதிகரிக்கும் வகையில், மதமாற்றத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய, உத்தராகண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திருத்தங்களின்படி, வாரண்ட் இல்லாமல் கைதுசெய்யலாம் மற்றும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுமாம்.

வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது தவறான தகவல்கள் மூலம் மதமாற்றம் செய்வது நிரூபிக்கப்பட்டால், அதற்கான அதிகபட்ச சிறைத் தண்டனை 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் சாட்சியங்களை எப்படி எல்லாம் இவர்கள் ஜோடிப்பார்கள் என்பதை நாம் அறியாதவர்கள் அல்லர்!

இந்த சட்டத்திருத்தங்களின்படி, குற்றம் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படுகிறது.

சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

மதத்தலைவர்கள், மதமாற்ற நிகழ்வு மற்றும் மதம் மாறுபவர்களின் முழு ஒப்புதலோடு உள்ளூர் பிரமுகரின் கடிதம் மற்றும் மதம் மாறுவதற்கான காரணத்தை மதம் மாறும் நபர்களிடமிருந்து  பெற்று  ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்க வேண்டும். தவறினால், அவர்களுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

புகார் அளிக்கும் உரிமையைப் பொறுத்து பாதிக்கப்பட்டவர் மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது உடன் பணியாற்றுபவர்கள், மற்றும் நலம் விரும்பிகளும் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் பட்சத்தில் ‘வாரண்ட்’ இன்றி கைதுசெய்யலாம்.

சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரை சட்டவிரோதமாக மதமாற்றம் செய்தால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுமாம். சர்வாதிகார நாடுகளில் கூட இதுபோன்ற வாரண்ட் இல்லாமல் கைதுசெய்யும் நடைமுறை இல்லை. ஆனால் யாரோ நலம் விரும்பி என்ற பெயரில் யார் மீதும் புகார் செய்தால், அடுத்த நிமிடமே காவல்துறை எந்த ஒரு ‘வாரண்ட்டும்’ இன்றி கைது செய்து மாதக்கணக்கில் சிறைவைக்கும் இந்தச் சட்டத்திருத்தம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஒருவர் எந்த மதத்தைத் தேர்ந்தெடுப்பது, மதமற்று இருப்பது என்பது எல்லாம் தனி மனிதர் உரிமை!

இந்துத்துவா ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமைந்தாலும் அமைந்தது – அன்று முதல் சிறுபான்மையினர் என்றால் சீற்றம் கொள்வது, சிறைப்படுத்துவது என்பதைத் தங்களின்  வெறிப் பிடித்த கொள்கையாகக் கொண்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை வெளிப்படையாகக் கூறுவோர் அதிகாரத்திற்கு வந்தால், இப்படித்தான் நடக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே!

ஒரே ஒரு நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கூட இல்லாத ஓர் ஆளும் கட்சி இருக்கிறது என்றால், அக்கட்சியின் வன்மத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவிற்கும் இந்தியாவின் மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் 15 விழுக்காட்டினர்; இவ்வளவுப் பெருந் தொகையுள்ள மக்களை வேறு மதத்தவர் என்ற ஒரே காரணத்தால் சட்டத்தின் பிடியை நெருக்கி அச்சுறுத்துவது நாகரிகமான அரசுக்கு அழகாக இருக்க முடியுமா?

இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்கள் வேற்று நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் அல்லர்; இந்து மதத்தில் ஆழப் பதிந்துள்ள ஜாதிக் கொடுமையால் மதமாற்றம் பெற்றவர்கள், இதனை இந்துத்துவாவாதிகள் போற்றும் விவேகானந்தரே கூறுகிறார். பத்து லட்சம் பட்டியலின மக்களுடன் அண்ணல் அம்பேத்கர்  பவுத்தம்  தழுவியது ஏன் என்பதும் நினைவிருக்கட்டும்! மதம் மாறினால் ‘வாரண்ட்’ இல்லாமலேயே கைது செய்யலாம் என்பது மதவெறி அராஜகமே!!

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *