தமிழ்நாட்டில் பாம்பு விஷமுறிவு மருந்து தயாரிப்பு ஆலை மூன்று நிறுவனங்கள் ஆர்வம்

சென்னை, ஆக.15 தமிழ்நாட்டில் பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து (Anti-venom) தயாரிக்கும் ஆலையை அமைக்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான ‘டிட்கோ’ (TIDCO) உடன் இணைந்து செயல்பட மூன்று தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க, பாம்புக்கடி விஷமுறிவு மருந்து அவசியமாகும். தற்போது, இந்த மருந்தை தயாரிக்கும் ஆலைகள் மகாராட்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.

பாம்பு விஷம் சேகரிப்பு

தமிழ்நாட்டில் உள்ள இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்கத்தினர், பாம்புகளில் இருந்து விஷத்தைச் சேகரித்து, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டிலேயே பாம்பு விஷமுறிவு மருந்து தயாரிப்பு ஆலையை அமைத்து, மருந்து தட்டுப்பாட்டைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் டிட்கோ முடிவு செய்துள்ளது. இதற்காக, கடந்த மாதம் டிட்கோ விடுத்த அழைப்பை ஏற்று, மூன்று நிறுவனங்கள் முன்வந்துள் ளன. இந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் ஆலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவேற்கத்தக்கது!

வெறுப்புப் பேச்சுக்கு  எதிராக புதிய சட்டம்

 கருநாடக அரசு அறிவிப்பு

பெங்களூரு, ஆக.15 கருநாடக மாநிலத்தில் வெறுப்புப் பேச்சுக்கு எதிராகப் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

கருநாடக சட்ட மேலவையில் நேற்று (14.8.2025)நடந்த கேள்வி நேரத்தில், பாஜக உறுப்பினர் கிஷோர் குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பரமேஸ்வர், “கடலோர கருநாடகப் பகுதியில் அண்மைக் காலமாக மதச் சண்டைகள் அதிகரித்து வருகின்றன. மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் முயற்சிகள் நடைபெறுவதால், கொலைச் சம்பவங்களும், வன்முறை வெறியாட்டங்களும் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்களைத் தடுக்கவும், மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் மதவாதத் தடுப்புச் செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் பதிவிடப்படும் மதவெறியைத் தூண்டும் கருத்துகள்தான் இந்த வன்முறைக்கு முக்கியக் காரணம். எனவே, வெறுப்புப் பேச்சில் ஈடுபடுவதைத் தடுக்கவும், மத நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாக்கவும் விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்தார்.

 

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *