கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் கைதான 950 தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு

சென்னை, ஆக.15 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத் திய தூய்மைப் பணியா ளர்கள் நேற்று முன்தினம் (13.8.2025) இரவு  கைது செய் யப்பட்டனர்.  இந் நிலையில், நேற்று (14.8.2025) அவர்கள் அனைவரும் விடு விக்கப்பட்டனர்.

போராட்டம்

சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக் கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2 மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் மேற் கொண்டனர்.

இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒரு போதும்அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறையினருக்கு உத்தர விட்டது.

அதையடுத்து, போராட் டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களைக் கலைந்து செல்லுமாறு காவல் துறை நேற்று முன்தினம் மாலை அறிவுறுத்தியது. மேலும், நீதிமன்ற உத்தர வைச் சுட்டிக்காட்டி கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கைது

ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். அதிலும் உடன்பாடு எட் டப்படவில்லை. இதையடுத்து, காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்கி னார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்தனர். அப்போது காவல்துறையினருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.   இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள் உட்பட சுமார் 950 பேரை கைது செய்து 30 மாநகர அரசு பேருந்துகள் மூலம் சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி, தாம்பரம் உட்பட 12 மண்டபம் மற்றும் சமூக நலக்கூடங்களுக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் 12 பேருந்துகளின் கண்ணாடி களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண் காவல்துறையினர்  ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பெரியமேடு காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விடுவிப்பு

கைது செய்து மண்டபங் களில்தங்க வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் உணவு வழங்கினர். நேற்று காலை அவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.ஆனால் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்தனர்.

இதையடுத்து மாலை 5 மணிக்கு மேல் மண்டபம் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட் டனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை உள்ளே மற்றும் வெளியே தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *