எதைச் சொன்னாலாவது ஏடுகளில் தனது பெயர் பளிச்சென்று பட வேண்டும்.
பொய் – கண்மூடி, கண் திறக்கும் முன்பே காத தூரம் சிறக்கடித்துப் பறந்து ஓடும். ஆனால் மெய் மெல்ல மெல்லதான் நடைபோடும் என்ற துணிச்சலில் அள்ளி விடும் அரசியல் அநாகரிகமானது.
ஆனால், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அதற்கு இடம் இல்லை. அடுத்த நொடியிலேயே பொய்யர்களின் வாயில் பிளாஸ்திரிதான்!
ஆதார் அட்டை இல்லாததால் அரசுப் பள்ளியில் மாணவனை சேர்க்க மறுப்பா?
விலாசம் இல்லாது இருக்கும் அண்ணாமலை தன் இருப்பைக் காட்டியுள்ளார்.
‘‘பல்லு ஒரே கருப்பாயிருக்கு மாப்பிள்ளை, இந்தாங்க ஒரு ரூபாய், கரும்பு வாங்கித் தின்னுட்டு வாங்க!’’ என்றாராம் மாமியார்.
மாப்பிள்ளை என்ன செய்தான்? எள்ளுப் புண் ணாக்கை வாங்கித் தின்னுட்டு இளித்து வந்தானாம்!
அண்ணாமலையின் கதையும் இதுதான்.
தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு செய்தியைப் பதிவிட்டார்.
‘‘பிரதமர் மோடி நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தார். ஆனால் இங்கு அதே சமூகத்தைச் சேர்ந்த மாணவனை பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு இல்லாத காரணத் துக்காக அரசுப் பள்ளியில் சேர்க்க மறுக்கிறது. இதுதான் சமீபத்தில் வெளியிடப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியா?’’ என்று பதிவிட்டிருந்தார்.
‘ஆகா எப்படிப்பட்ட போடு! அண்ணாமலையா கொக்கா?’ என்று செய்தியைப் படித்தவர்கள் விரலை மூக்கின் மீது வைத்திருப்பார்கள்.
அந்த விரலை எடுப்பதற்குள் தமிழ்நாடு அரசு ‘பொட்டில் அடித்ததுபோல கொடுத்தது பார் ஓர் அடி!’
மேலும் அந்த மாணவன் தனது பெற்றோருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவையும் பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் நடந்தது என்ன? தமிழ்நாடு அரசின் அதிகாரப் பூர்வமான சமூக ஊடகப் பிரிவு நச்சென்று நடந்தவற்றை வெளியிட்டு நாப்பறைக் கொட்டியவர்களை நடுத் தெருவில் நிற்க வைத்து, மக்கள் ஏளனம் செய்யும் ஒரு வேலையை ஒழுங்காகச் செய்து விட்டது (பாராட்டுகள்!)
‘வீடியோவில் இடம் பெற்ற மாணவன் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள திருவள்ளுவர் அரசு உதவிப் பெறும் பள்ளியில் 2023இல் இருந்து பயின்று வருகிறார். பள்ளியில் சேர்க்க மறுத்ததாகக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது. 11.8.2025 அன்று அவரது பெற்றோர் ஆதார் அட்டை எடுப்பதாகக் கூறி, மாணவனைப் பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றனர். ஆதார் அட்டை எடுப்பதில் உண்டான கால தாமதத்தால் தாசில்தார் அலுவலகத்தில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.’
ஆனால் மாணவனைப் பள்ளியில் சேர்க்கவில்லை என்று பா.ஜ.க. தனக்கே உரித்தான பொய்ப் பிரச்சாரத்தை இறக்கைக் கட்டிப் பறக்க விட்டது.
தற்போது அந்த மாணவனுக்குக் கோட்டாட் சியரால் பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு பள்ளியிலும் சேர்ந்தார் என்பதுதான் உண்மை!
அப்பப்பா! அதற்குள் ஆடிய குத்தாட்டம் என்ன?
‘‘கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள்’’ என்றால், இதுகளின் பொய்க்கு ஆயுள்காலம் ஒரு நாள்கூட இல்லை.
இதுவும் ஒரு வகையில் நல்லதுதான்! பா.ஜ.க.வினர் வாய்த் திறந்தால் பொல பொல என்று பொய்ப் புழுக்கள்தான் கொட்டும் என்பது அம்பலமாகி விட்டது அல்லவா!
சாப்பிடாத சாமிக்கு ஆறு காலப் படையல் போட்டதாகக் கூறி வயிற்றை நிரப்பும் கூட்டத்துக்கு ‘ஜால்ரா’ போடும் கூட்டம் அல்லவா! இந்தப் பொய் வெறும் கடுகுதான்!
‘‘இமயமலையை வேரோடு பிடுங்கி இப்பொழுது தான் சாப்பிட்டு வந்தேன்’’ என்கிற அளவுக்குக்கூட இந்தக் கோணிப் புளுகுக் கோயபல்சுகள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
டெயில் பீஸ்: பீகாரில் ஒரு வாக்குச் சாவடியில் 37 இறந்த வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு!
– தார்க்குச்சி