நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோசலிசத்திற்கோ விரோதியல்ல. மற்றவர்களை விட, கம்யூனிசத்திலும், சோசலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால், கம்யூனிசமும் சோசலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும் சோசலிசத்திற்கும் நேர் எதிரியாக, அதாவது அபேத வாதத்திற்கு எதிராகப் பேதம் வளர்க்கும் பெரும் ஆட்களாய் இருக்கிற பார்ப்பனர்கள், பார்ப்பனத் தன்மைகள் ஒழிகின்ற வரையிலே இந்நாட்டில் கம்யூனிசமோ சோசலிசமோ ஏற்படமுடியாது. அதற்குப் பதிலாக பிராமினிசம்தான் வலுவாக ஏற்படும் என்ற கருத்துடையவன்.
எனக்கு ஏற்பட்ட கம்யூனிச உணர்ச்சி பார்ப்பானை வெறுக்கவும், காந்தியை வெறுக்கவும், கடவுள், மத சாத்திர, காங்கிரசை வெறுக்கவும் ஏற்பட்ட உணர்ச்சிதான் என்னைக் கம்யூனிசத்தில் கொண்டு போய் விட்டது. இன்னும் நான் கடவுள் ஒழிப்பில், மத ஒழிப்பில் அன்றிலிருந்து ஒரு சிறு மாற்றங்கூட அடையவில்லை; நாளுக்கு நாள் பலப்படுகிறது.
நான் சாதாரணமானவன்; பொறுப்பில்லாதவன்; என் மனத்திற்குப்பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன்; இதுதான் உறுதி; இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றும் சொல்லவில்லை. அறிவைக் கொண்டு சிந்தியுங்கள்; ஏற்கக் கூடிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளி விடுங்கள்.