அகில இந்தியாவும் தந்தை பெரியாருடைய வழியிலே – எப்படி கலைஞர் அவர்கள்
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை அன்றைக்கு உருவாக்கினார்களோ அதேபோல,
தமிழ்நாடு வழிகாட்டும் என்று நினைக்கிறார்கள் – அதற்கு முதலமைச்சரின் கரத்தை பலப்படுத்துவோம்!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூளுரை
சென்னை, ஜூன் 8 வருகின்ற தலைமுறை மாற்றப்பட வேண்டும்; ஜாதியற்ற தலைமுறை வரவேண்டும் – நாடு சமத்துவபுரமாக ஆகவேண்டும் – இந்த வெற்றியை நோக்கி – இந்த இலக்கை நோக்கி நாம் செல்லவேண்டும்; அகில இந்தியாவும் தந்தை பெரியாருடைய வழியிலே – எப்படி கலைஞர் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை அன்றைக்கு உருவாக்கினார்களோ அதே போல, இன்றைக்கும் தமிழ்நாட்டைத்தான் எதிர்பார்க் கிறார்கள் – இந்த மண்தான் வழிகாட்டும் என்று நினைக்கிறார்கள்; அதை செய்வதற்கு முதலமைச்சரின் கரத்தைப் பலப்படுத்துவோம் -அதையே மிகப்பெரிய சூளுரையாகக் கொள்வோம்! வருக, கலைஞர் கண்ட ஜாதியற்ற சுயமரியாதை உலகு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு
தொடக்க விழா – பொதுக்கூட்டம்
நேற்று (7.6.2023) மாலை சென்னை புளியந்தோப்பில் உள்ள பின்னி மில் மைதானத்தில் நடைபெற்ற முத் தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா – பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மாபெரும் கொள்கை எழுச்சித் திருவிழா!
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சி யோடும் நடைபெறக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு தொடக்க விழா என்ற இந்த மாபெரும் கொள்கை எழுச்சித் திருவிழா – அதற்குத் தலைமை தாங்கி, எனக்குமுன் உரையாற்றி அமர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சருமான அருமைச் சகோதரர் துரைமுருகன் அவர்களே,
அடுத்து நாம் அனைவரும், என்னையும் சேர்த்துச் சொல்லுகிறேன் – எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற மிக முக்கியமான உரையை – இங்கே இருக்கின்றவர்கள் மட்டுமல்ல – எங்கேயோ இருக்கின்றவர்களும்கூட – அங்கேயும் இருக்கின்றவர்களும் கூட என்ன பேசப் போகிறார்? என்ன திட்டத்தைச் சொல்லப் போகிறார்? என்பதை ஆவலோடு எதிர்பார்க்கக் கூடிய மிக முக்கியமான இந்தக் காலகட்டத்தில் அனைவருக்கும் – இங்கே கலந்துகொண்ட தோழர்களுக்கும் நன்றியை யும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குதர்க்கவாதிகளை ஓட ஓட விரட்டியடிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள்!
முன்னிலை ஏற்றவர்கள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வெள்ளம்போல் திரண்டிருக்கின்ற நண்பர்கள், சிங்கம் போல் திரண்டிருக்கின்ற கூட்டம் – இது செயல் கூட்டம் – இது வெறும் கூடிக் கலைகின்ற கூட்டமல்ல – நாளைக்கு ஒரு போராட்டம் என்று இந்த இயக்கம் – கலைஞரை நினைவூட்டி அறிவித்தால், நம்முடைய தலைவர் அறிவித்தால், நாளைக்கே திரண்டு எங்கெங்கே எல்லாம் இருந்து குதர்க்கம் பேசுகிறார்களோ, அந்தக் குதர்க்க வாதிகளை ஓட ஓட விரட்டியடிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய முறை அதுவல்ல; பொறுமையிலே அவர் கலைஞரைத் தாண்டி இருக்கிறார் – அதுதான் அவருடைய தனிச் சிறப்பு.
எங்களைப் பொறுத்தவரையில், கடைசியாக அவர் உரையாற்றவிருக்கின்றார்; அவருக்கு முன் நான் உரையாற்றப் போகிறேன் என்கிறபொழுது ஒன்றைச் சொன்னேன் – இரண்டு பேருமே நெருக்கடி காலத்தைச் சந்தித்தவர்கள்; இப்பொழுதும் நெருக்கடியை அவர் நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார். இப் பொழுது நேரத்தின் நெருக்கடியில் அதிக நேரத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை நண்பர்களே!
கலைஞரின் புகழை நாளெல்லாம் பேசலாம்;
வாழ்நாளெல்லாம் பேசலாம்!
கலைஞருடைய புகழை நாளெல்லாம் பேசலாம்; வாழ்நாளெல்லாம் பேசலாம். ‘‘தஞ்சை வாணன் கோவை” என்ற ஒரு நூலில், அற்புதமான ஒரு வரி –
வாணன் புகழுக்கு எல்லை
வாழ்த்துவோர் நாவெல்லை!
என்று.
கலைஞருடைய பல பரிமாணங்களைப்பற்றி சொல் லும்பொழுது ஏராளமானவற்றை சொல்வார். அதை சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
இன எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுகின்ற விழா!
ஆனால், இது கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு தொடக்க விழா என்று மட்டும் தாய்க்கழகம் பார்க்க வில்லை. அதைத் தாண்டி முக்கியமான இந்தக் கால கட்டத்தில், ஒரு பெரிய பரிமாணம் என்னவென்று சொன்னால் நண்பர்களே, இன எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுகின்ற ஓர் ஆண்டு விழா – எச்சரிக்கை நாள் இந்த நாள்!
ஆற்றல்மிகு அமைச்சர் சேகர்பாபு
ஏனென்றால்,
‘‘திராவிடம் – அது காலாவதியாகிவிட்டது!
திராவிடம் – எங்கே இருக்கிறது?” என்றெல்லாம் குதர்க்கம் பேசுகிறார்களே, அவர்கள் இந்தக் கூட் டத்தைப் பார்க்கவேண்டும். அவர்களின் உணர்ச்சியைப் பார்க்கவேண்டும்; இரண்டரை மணிநேரம் ஆகிவிட்டது என்று நம்முடைய வரவேற்புக் குழுத் தலைவர் ஆற்றல்மிகு சேகர்பாபு அவர்கள் நினைவூட்டினார்.
ஆம்! நாங்களும் அப்படித்தான் இருக்கிறோம். பேசு கிறவர்களைவிட, கேட்பவர்களுக்கு எவ்வளவு சங்கட மானது என்பது – கேட்பவர்களாக இருந்து அனுபவித் தால்தான் அது தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், கலைஞருடைய புகழைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்ல லாம்; இங்கே நண்பர்கள் சொன்னார்கள், தலைவர்கள் பெருமையோடு சொன்னார்கள்.
இந்நிகழ்ச்சியில், நம்முடைய தோழர்களுக்குக் கொள்கையை நினைவூட்டவேண்டும்.
‘‘எதிர்ப்பில்தான்’’ முழுக் கலைஞரை
சந்திக்க முடியும்!
கலைஞரைப் பொறுத்தவரையில், முழுக் கலைஞரை நாம் எப்பொழுதாவது சந்திக்க முடியும் என்று நினைத்தால் நண்பர்களே, ‘‘எதிர்ப்பில்தான்” முழுக் கலைஞரை சந்திக்க முடியும்; அதேபோல்தான் அவரால் உருவாக்கப்பட்ட எங்கள் முதலமைச்சரும் அப்படித் தான். நீங்கள் எதிர்க்க எதிர்க்க – அடிக்கடி அடிக்க எழுகின்ற பந்தைப்போல, மேலே அவர்கள் எழும்பு வார்கள்; எதிரிகளே, இன எதிரிகளே புரிந்து கொள்ளுங்கள்!
நான் பேசுவதைவிட இந்த நேரத்தில், நீங்கள் எல்லாம் கலைந்து போவதற்கு முன், தலைவருடைய பேச்சை நீங்கள் கேட்டு சிந்திப்பதற்கும், செயலாற்று வதற்கும் தயாராவதற்கு முன் – கொஞ்சம் கலைஞரை பேசவிட்டுக் கேட்கலாமா?
அதுதான் மிக முக்கியமானது; கலைஞருடைய பேச்சைக் கேட்போம்.
நம்முடைய பேச்சை கலைஞருடைய புகழுக்காக நாம் சொல்வதைவிட – கொஞ்சம் கலைஞருடைய பேச்சைக் கேட்போம்.
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்!’’
கேள்விக்கு அவர் எப்படி பதில் சொல்வார் என்பதற்கு உதாரணம்.
ஒரு வரியில் உங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்? என்று கேட்கிறார் செய்தியாளர்.
கலைஞர் சொன்னார், ‘‘மானமிகு சுயமரியாதைக் காரன்” என்றார்.
இதில் எல்லாம் அடங்கிப் போய்விட்டது. எனவே, இந்தக் கூட்டத்தை சில பேர் ஆழம் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.
வெறும் பதவிக்கான கூட்டமல்ல இது – கொள்கைக் கூட்டம்!
‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ வெறும் பதவிக்கான கூட்டமல்ல இது – கொள்கைக் கூட்டம். கொள்கைக்காக இருக்கக்கூடிய – அணிதிரண்டவர்கள்.
அதனால்தான் பெரியார் – அண்ணா – கலைஞர் – இன்றைக்கு நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் என்று அந்த வரிசை வந்துகொண்டிருக்கிறது.
2006 ஆம் ஆண்டு, கலைஞரைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார் செய்தியாளர்-
அரசியல் தலைவர் கலைஞர் – தமிழறிஞர் கலைஞர் இதில் எதை அதிகம் விரும்புகிறீர்கள்?
ஈரோட்டு குருகுலத்தில் பெற்ற பயிற்சியிலே தலையாய பயிற்சி என்னவென்றால், எந்தக் கேள்வி களுக்கு வேண்டுமானாலும், ‘‘பட்பட்”டென்று பதில் சொல்லும் ஆற்றல்தான்.
அய்யாவின் மாணவர் கலைஞர்!
கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர் – தமிழறிஞர் கலைஞர் இதில் எதை அதிகம் விரும்புகிறீர்கள்?
கலைஞர் பதில்: இந்த இரண்டையும்விட அய்யாவின் மாணவர் கலைஞர். அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகின்றவன் நான் என்றார்.
அதனுடைய தொடர்ச்சியின் மீட்சிதான் இன்றைய முதலமைச்சர் – நமக்கு அடுத்து வந்து இந்த செய லாக்கத்தை செய்யவிருக்கின்றவர்.
எனவே, இங்கே ஆழம் பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள்.
வெளிநாட்டிற்குச் சென்றால், உடனே தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் வந்துவிடுமா? என்று பொறுப்பற்ற முறை யில், பேசக்கூடாதவர்கள், பேசிக் கொண்டிருக் கின்றார்கள்.
வெளிநாட்டிற்குச் சென்று முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்று ஒரு முதலமைச்சர் நினைக்காமல், ‘‘அனுமான் சாலி” பாடியா? முதலீட்டை வரவழைக்க முடியும்?
நிறைய பேர் ‘‘அனுமான் சாலி” பாடிக் கொண்டி ருக்கிறார்கள்; பஜனை செய்யலாம் என்று நினைக் கிறார்கள்.
சாதனையைப் பாருங்கள் – இதோ அமைதிப் பூங்கா வாக இருக்கின்றது எங்களுடைய தமிழ்நாடு – ‘‘வாருங்கள், வாருங்கள்” என்று அழைக்கின்றார்.
கொள்கை உணர்வோடு இருக்கவேண்டும்!
எத்தனையோ சாதனைகளை செய்தாலும், இங்கே திருமா போன்ற மற்ற நண்பர்கள் சொன்னதைப்போல, ஜாதி ஒழிப்பு என்பதும், இந்தக் கொள்கை உணர்வோடு இருக்கவேண்டும்; அது இருந்தால், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அந்த எதிர்ப்பை எதிர்நீச்சல் போட்டு, நெருப்பாற்றில் நீந்தக்கூடிய ஆற்றலைப் பெறுவோம் என்பதை கலைஞர் அவர்கள் இயக்கத் தோழர்களுக்குச் சொன்னார்.
‘‘கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” என்ற மூன்றை சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியார் சொன்னார்.
அண்ணா, மேற்கண்ட மூன்றையும் அழகாகச் சொன்னார்; அந்த மூன்றைப்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விளக்கம் சொல்லலாம்.
கண்ணியம் என்பது ஒருவருக்குக் கண்ணியமாக இருப்பது; இன்னொருவருக்கு மாறுபட்டு இருக்கலாம்.
கட்டுப்பாடு என்பதற்கு இருபொருள் கிடையாது; ஒரே பொருள் என்பதைத்தான் கலைஞர் மீண்டும் மீண்டும் சொல்வார்.
கலைஞருடைய நூற்றாண்டு விழா தொடக்கத்தில் அதைத்தான் மிக முக்கியமாக எண்ணிப் பார்த்து, அந்த உணர்வைப் பெற்றிருக்கின்றோம்.
ஆகவேதான் நண்பர்களே, அந்த உணர்வோடு நான், இந்தப் பயன்களைப் பெறவேண்டும், சொல்ல வேண்டும் என்ற அடிப்படையிலே தெளிவாகச் சொன்னார்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலாவது சமத்துவபுரங்கள் இருக்கின்றனவா?
ஜாதி ஒழிப்பு – அதன் காரணமாகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலாவது சமத்துவபுரங்கள் இருக்கின்றனவா?
நாடே சமத்துவபுரமாக வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கும் சமத்துவபுரங்கள் வந்து கொண்டிருக் கின்றன.
பாலங்கள் கட்டுவதோ, பள்ளிக்கூடங்களைத் திறப் பதோ, சாலைகள் போடுவதோ மிக முக்கியமானது தான். ஓர் ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற முதலமைச்சர் அவற்றை செய்யும்பொழுது, அதற்குப் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது. ஆனால், சமூக ரீதியான விஷயத்தில் கை வைக்கும்பொழுது – சமத்துவபுரம் என்று சொல்லும் பொழுது பல பேருக்கு அது அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்லும்பொழுது ஆதிக்கவாதிகள் இன்னமும் நீதிமன்றத்தை, மற்ற இடங்களைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு தொல்லை கொடுக்க முடியுமோ அவ்வளவு தொல்லைகளை ஆட்சிக்குக் கொடுத்துக் கொண்டிருக் கின்றார்கள்.
ஆகவேதான், மக்களுக்கு அறிவுரை சொல்கிற பொழுது கலைஞர் சொன்னதை இங்கே நினைவூட்டுவது நம்முடைய கடமை.
கலைஞர் எதிர்பார்க்கும் லட்சிய வெற்றி!
2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – ஆங்கில ஏடான ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஏடு கலைஞரிடம் எடுத்த சிறப்புப் பேட்டியின்போது – கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்வி இது.
கேள்வி: உங்களை மகிழ்விப்பது எது?
கலைஞரின் பதில்: ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சுக் கேட்க வந்து குழுமியிருப்போர் அனைவரும் தமிழர்களாக இருக்கிறார்கள். ஆனால், கூட்டம் முடிந்து கலைந்து செல்லும்பொழுது தனித்தனி ஜாதிகளாக கலைந்து செல்லுகிறார்கள். அந்த நிலை மாறி, தமிழர்களாகவே கூட்டத்தில் அமர்ந்து – எழுந்து செல்லும்பொழுது தமிழர்களாகவே கலைந்து செல்லும் காலம் வந்தால், அதுதான் நான் எதிர்பார்க்கும் லட்சிய வெற்றி என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.
‘‘பெரியாரை சந்தித்ததுதான் என்னுடைய வாழ்நாளில் திருப்புமுனை!’’ என்றார்!
அய்யா, அண்ணா இவர்களால் மிகவும் பக்குவப்படுத் தப்பட்டார், செதுக்கப்பட்டவர். ‘‘பெரியாரை சந்தித்தது தான் என்னுடைய வாழ்நாளில் திருப்புமுனை” என்று எழுதினார்.
கலைஞர் சொன்ன அந்த லட்சிய வெற்றியை, அந்த வெற்றிக் கொடியை நாட்டுவதற்குத்தான், அவரால் உருவாக்கப்பட்ட நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இன்றைக்கு எதிர்நீச்சலில், கலைஞரையும் தாண்டி, பல எதிர்நீச்சல்களைச் சந்திக்க வேண்டிய கட்டம் இருக்கின்ற காரணத்தினால்தான், ஒரு உறுதியை சூளுரையாக இந்த நூற்றாண்டு தொடக்க விழாவில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆட்சியல்ல – இனத்தினுடைய மீட்சி!
வெறும் மாலை போடுவது – அவருக்குப் புகழ்மாலை சூட்டுவது என்பதைத் தாண்டி, இந்த ஆட்சியை இன்னும் பலமாக ஆக்குவோம். வருவது நமக்கு வெறும் ஆட்சியாக இருக்கக் கூடாது; ஏனென்றால், இது ஆட்சியல்ல – இது மீட்சி – இனத்தினுடைய மீட்சி!
எனவேதான், இந்த நூற்றாண்டு தொடருகின்ற காலகட்டத்தில்தான் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது – அதில் இன எதிரிகளின் கை ஓங்கி இருக் கிறது. அவர்களிடம் எத்தனையோ சரக்குகள் இருக்கிறது என்று விஷமப் பிரச்சாரத்தை செய்கிறார்கள்.
முதலமைச்சரின் கரத்தைப் பலப்படுத்துவோம் -அதையே மிகப்பெரிய சூளுரையாகக் கொள்வோம்!
இவற்றையெல்லாம் தாண்டி, அந்த வெற்றி வியூகத்தை அமைக்கக்கூடிய ஆற்றல், பயிற்சி, பக்குவம் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு இருக்கின்ற காரணத்தினால்தான், அகில இந்தியாவும் தந்தை பெரியாருடைய வழியிலே – எப்படி கலைஞர் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை அன்றைக்கு உருவாக்கினார்களோ அதேபோல, இன்றைக்கும் தமிழ்நாட்டைத்தான் எதிர்பார்க்கிறார்கள் – இந்த மண்தான் வழிகாட்டும் என்று நினைக்கிறார்கள்; அதை செய்வதற்கு முதலமைச்சரின் கரத்தைப் பலப்படுத்து வோம் -அதையே மிகப்பெரிய சூளுரையாகக் கொள்வோம்!
கலைஞருடைய உண்மையான தொண்டர்கள் நாம்!
கலைஞருக்கு அணிவிக்கின்ற மாலை வெறும் மாலை அல்ல; ‘‘40-ம் நமதே!” என்று ஒரு காலத்தில் சொன்னாரே, அது தேர்தலுக்கு – அதைத் தாண்டி வருகின்ற தலைமுறை மாற்றப்படவேண்டும்; ஜாதியற்ற தலைமுறை வரவேண்டும் – நாடு சமத்துவபுரமாக ஆக வேண்டும் – இந்த வெற்றியை நோக்கி – இந்த இலக்கை நோக்கி – ஜாதிக்கு எதிராக – மதவெறிக்கு எதிராக – பதவிகளை ஒரு வாய்ப்பாக மட்டுமே கொண்டு – பதவிக்காக என்று மட்டும் இருக்காமல் – வாய்ப்பு ஒருவருக்குத்தான் கிடைக்கும் என்ற அளவில், அவர் யாரைக் கையைக் காட்டுகிறாரோ, அவர்கள் அந்தப் பணியை செய்யவேண்டும் என்கிற சூளுரையை எடுத்தால்தான், நாம் கலைஞருடைய உண்மையான தொண்டர்கள்.
எனவே, தேர்தலிலே கூட உங்களுக்கு என்ன நினைவில் இருக்கவேண்டும் என்றால், ‘‘யார் வேட் பாளராக இருந்தாலும், கலைஞர்தான் வேட்பாளர்” என்று நினைத்து நாம் ஒற்றுமைப்பட வேண்டும். அத்துணை பேரும் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும்.
நாம் வன்முறையில்
நம்பிக்கை இல்லாதவர்கள்!
இந்த ஆட்சிக்கு சங்கடங்களை யாராவது உருவாக்க லாம் என்று நினைத்தால், இதோ நாங்கள் இருக்கிறோம்,
‘‘கிளம்பிற்றுக் காண் சிங்கக் கூட்டம்
கிழித்தெறிய தேடுகிறது பகைவர் கூட்டத்தை!”
என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தாலும், நாம் வன்முறையில் நம்பிக்கை இல்லாத மக்களாக இருக் கின்ற காரணத்தினால்தான்,
‘‘ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!”
என்று புரட்சிக்கவிஞர் எழுதினார். அது வன்முறை.
ஆனால், அந்த வன்முறைக்குப் போகவேண்டிய அவசியமில்லை.
வருக கலைஞர் கண்ட ஜாதியற்ற
சுயமரியாதை உலகு!
‘‘ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால்” என்று சொன்னார் – இப்பொழுது ஓட்டப்பர் – ஓட்டு உங்கள் கையில் இருக்கிறது.
‘‘எல்லோரும் ஒப்பப்பர் ஆகவேண்டுமானால், ஓட்டப்பரை கவனியுங்கள் – கவனம் செலுத்துங்கள். அதுதான் அவருக்கும் கவலை!
அதிலே உங்கள் கடமை ஆற்றுங்கள்!
வாழ்க கலைஞர்!
வருக அவர் கண்ட ஜாதியற்ற சுயமரியாதை உலகு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.