2026 சட்டமன்றத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வெற்றி உறுதி! அரசியல் ‘மொக்கை’களுக்கு உணர்த்திடுவது உறுதி!!

4 Min Read

* வகுப்புவாரி பிரநிதித்துவ ஆணை (1928) 8 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நமது மாண்புமிகு முதலமைச்சரால் செயல்பாட்டுக்கு வந்த நாள் இந்நாள் (2021) 8 இந்தப் பந்தயக் குதிரை ஆட்சியை எந்தப் பொம்மைக் குதிரைகளாலும் வெல்லவே முடியாது!

வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்தப்பட்ட இந்நாளின் முக்கியத்துவத்தைக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (14.8.2025) திராவிடர் இயக்கத்தின் மிக முக்கியமான வரலாற்றுப் பெருமைக்குரிய நாள்! பெருமிதத்துடன் நினைவு கூரப்படவேண்டிய, குதூகலித்துக் கொண்டாடப்படவேண்டிய நாளுமாகும்!

வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை
பிறப்பிக்கப்பட்ட நாள்!

1928 ஆம் ஆண்டு நீதிக்கட்சி, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆகிய கொள்கை இயக்கங்களின் தொடர் முயற்சியால், சமூகநீதி ஆணையான ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை’, அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களது சீரிய முயற்சியாலும், நீதிக்கட்சி ஆதரவுடன் அன்றைய சுயேச்சை முதலமைச்சரான டாக்டர் எஸ்.சுப்பராயன் அவர்களது ஒத்துழைப்போடும் ஆணையாக்கப்பட்டது (G.O.No. 1129) ஆரியத்தின் கண்களை உறுத்தியது.

ஆசிரியர் அறிக்கை

அதனால் கல்வி, உத்தியோக வாய்ப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற முறையில் கிடைக்கத் தொடங்கியது. 100–க்கு 100 ஏகபோகத்தை ஆண்டு அனுபவித்த ஆரியம், தக்க சமயத்திற்காகக் காத்திருந்து, ‘‘சுதந்திரம்’’ பெற்றதன் பிறகு, 1950 இல் இந்திய அரசியல் அமைப்புச்  சட்டம் அமுலுக்கு வந்ததும், ‘வகுப்புவாரி உரிமை செல்லாது’ என்று உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தீர்ப்புப் பெற்று, வகுப்புரிமை ஆணையை ரத்து செய்தது!

அதை எதிர்த்து சிங்கமெனச் சிலிர்த்து எழுந்து, போராட்டக் களம் அமைத்துப் போராடத் தொடங்கி, தந்தை பெரியார் நடத்திய மாபெரும் மகத்தான கிளர்ச்சியின் வெற்றியாகவே,டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டு, சமூகநீதி பாதுகாக்கப்பட்டது! வெற்றிக் கனி பறித்த தமிழ்நாட்டிற்கு (அன்றைய சென்னை மாநிலம்) வகுப்புவாரி – சமூகநீதி ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்தது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வாய்ப்பை அந்தச் சட்டத் திருத்தத்தின்மூலம் ஏற்படுத்தியதுதான், அதன் பின்னர் நாம் போராடிப் பெற்ற சமூகநீதி வெற்றிகள் அனைத்திற்கும் அடித்தளமாகும்!

1950–1951 இல் திராவிட மாணவர் கழகத்தில் ஒரு தொண்டனாகக் குரல் கொடுத்துப் பங்காற்றியவன் என்கிறபோது – 75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு களை அரிமா நோக்குடன் பார்த்து திராவிடர் இயக்கம் இன்று பார்த்துப் பூரிப்பு அடைதல் இயல்புதானே!

அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை வரலாற்று நாள்!

அதுபோலவே, மற்றொரு வரலாற்று வெற்றியை ருசித்த நாளும் இன்றுதான்! ஜாதி, தீண்டாமை என்ற ஆரியத்தின் ஆயுதங்களை ஒழிக்க, கோயில் கருவறைக்குள் பாதுகாப்புடன் இருந்த அந்த நச்சரவ ஜாதிப் பாம்பினை அடித்து ஒழித்தது, ஆதிதிராவிடர் உள்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டமாகும். பிறவி, பாரம்பரிய முறை அன்றைய முதலமைச்சர் கலைஞரால் 1970–1971 இல் ஒழிக்கப்பட்டு, அர்ச்சகப் படிப்பின் ‘தகுதி’ அடிப்படையில், அர்ச்சகராகும் முறை பல சட்டப் போராட்டங்களாலும், திராவிடர் கழகத்தின் அறப்போராட்டங்களாலும், உச்சநீதிமன்றம்வரை சென்று, இறுதியில் தமிழ்நாடு தி.மு.க. – கலைஞர் அரசின் முனைப்பில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்குரிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பின்னர் 2011 இல், ‘‘அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் செல்லும்’’ என்று உச்சநீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது. அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி, அதனைக் கண்டுகொள்ளாமல், ஆரியத்தின் புன்னகைக்கு அடிமையான நிலை!

ஆசிரியர் அறிக்கை

பிறகு, 2021 இல் ஆட்சிக்கு வந்த இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அந்தச் சட்டத்தினை அமுல்படுத்தி, பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்து அமைதிப் புரட்சியை, சமூகப் புரட்சியை நடத்தியதை மறக்க முடியாத – என்றும் பாராட்டத் தகுந்த நாள் இன்று (ஆகஸ்ட் 14).

சாதித்துக் காட்டினார் இன்றைய முதலமைச்சர்!

அதன்மூலம், ‘‘தந்தை பெரியாருக்கு இறுதியில் அரசு மரியாதைதான் என்னால் தர முடிந்தததே தவிர, அவரது நெஞ்சில் தைத்த முள்ளாகிய – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை நிறைவேற்றிவிட முடியவில்லையே’’ என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் ஆதங்கத்தை நீக்கி, பிறவி ஜாதி, தீண்டாமையின் முதுகெலும்பை முறித்துக் காட்டிய, வாழ்நாள் போராட்டங்களில் நின்று போராடிய தாய்க்கழகத்தின் உளப்பூரிப்புடன், மகிழ்ச்சிக் கண்ணீர் ஊற்றுடன், நேரே பெரியார் திடலுக்கு வந்து நம்மையெல்லாம் மகிழ்வித்தார் – நிரந்தரப் பாராட்டையும் பெற்ற நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர்.

இவ்வாண்டும் எஞ்சிய நியமனங்களை, அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் அதிவேகப் பணிகளில் முன்னுரிமை தரும் சாதனையாகச் செய்து, வரலாற்றில் நிரந்தர சமூகப் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரிய பொற்கால சமூகப் புரட்சி ஆட்சி இது!

ஒரு துளி ரத்தம் சிந்தாமல் சாதனை செய்த சரித்திரப் புகழ்பெற்ற  ‘திராவிட மாடல்’ ஆட்சி!

ஆசிரியர் அறிக்கை

ஆரியத்திடம், ஆர்.எஸ்.எஸ்., அதானிகளிடம் சரணடைந்த அடிமை விபீடணர்கள், ‘‘தி.மு.க. ஆட்சியை அடுத்து ஆள வரவிடாமல் தடுப்போம்’’ என்று கூறுவது, இந்த ‘ஆரிய மாயை’ காரணமாக அல்லாமல், வேறு என்ன?

ஜாதி வெறியும், மதவெறியும் சதிராடி, வெற்றி பெற, தமிழ்நாட்டைத் தேர்தல் மூலம் கைப்பற்றிட எண்ணுவது வீண் கனவாக ஆகும் காட்சியை 2026 உலகுக்குக் காட்டும்!

பந்தயக் குதிரையை,
மண் குதிரை வெல்ல முடியாது!

மண் குதிரை – பொய்க்கால் குதிரை – ஜட்கா குதிரை என்ற பல குதிரைகள் கூட்டணி சேர்ந்தாலும், பந்தயக் குதிரையைப்போல துடிப்புடன் இருக்கும்  தி.மு.க. கூட்டணியை எதிர்த்து, வெற்றி பெறவே முடியாது என்பது, ‘‘கல்லுப் போன்ற உண்மையாகும்’’ (தந்தை பெரியார் எழுத்துப்படி) என்பதை அடுத்து வரும் தேர்தல் இந்த அரசியல் ‘மொக்கைகளுக்கு’ உணர்த்திடுவது உறுதி! உறுதி!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
14.8.2025  

 

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *