காஸா, ஆக. 14- காஸா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை இஸ்ரேல் அனுமதிக்க மறுத்து வருவதால், எகிப்துடனான எல்லைப் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.
இதனால், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை காஸாவிற்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரணப் பொருட்களின் விநியோகத்தைக் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில், “சட்டவிரோதமான மருந்துகள்” இருப்பதாகக் காரணம் கூறி, சில நிவாரணப் பொருட்கள் காஸாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சூழலில், முன்னாள் உலகத் தலைவர்கள் அடங்கிய “மூத்தோர் குழு” (Elders) எகிப்து எல்லையில் இஸ்ரேலின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேலின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.