தைபே, ஆக. 14- தைவானின் தென்கிழக்கு நகரமான தைட்டுங்கில் இன்று ‘பூடூல்’ புயல் கரையைக் கடந்தது. இதனால், பலத்த காற்று மற்றும் மழையுடன் மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமானச் சேவைகள் பாதிப்பு
புயல் காரணமாக நூற்றுக் கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தைபேவிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படவிருந்த சில விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்வதாக ஸ்கூட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங் – தைவான் இடையே 15 விமானச் சேவைகள் ரத்து அல்லது தாமதமாகின.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
புயலைச் சமாளிக்க அதிகாரிகள் தீவிர முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர். கடலோரப் பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் புயல், சீனாவின் ஃபூஜியன் மாநிலத்தை நோக்கி நகரும் முன், தைவானின் மக்கள் நிறைந்த மேற்கு கரையோரப் பகுதியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங்கில் முன்னெச்சரிக்கை: ஹாங்காங்கிலும் சூறாவளியைச் சமாளிக்கத் தயாராகி வருகின்றனர்.
தற்போது குறைந்த அளவிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் எச்சரிக்கை நிலை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட தொடர் புயல்களின் தாக்கத்திலிருந்து ஹுவாலியென் போன்ற நகரங்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்த புதிய சூறாவளி மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.