மனிதர்களை விடப் பல நுாறு மடங்கு எடை கொண்ட ஒரு விலங்கு வெறும் இரண்டே மாதங்களில் தனது உடல் எடையில் 36 சதவீதம் குறைத்துள்ளது. அதுவும் முழுக்க முழுக்க ஆரோக்கியமான வழிகள்.
இது, 90 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் இரண்டே மாதங்களில் 30 கிலோ எடையைக் குறைப்பதற்குச் சமமானது. இது குறித்து ஆய்வுசெய்வது மனிதர்களுக்கு உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஹம்ப்பேக் வேல்ஸ் என்பவை ஒரு வகை திமிங்கலங்கள். இவை ஒவ்வொரு ஆண்டும் மேற்கு அட்லான்டிக் பகுதிகளிலிருந்து 8,000 கி.மீ., கடந்து தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டின் கடற்கரைகளுக்கு இனப்பெருக்கம் செய்வதற்காகச் செல்கின்றன.
இப்படி வலசை செல்லும் 103 திமிங்கலங்களை ட்ரோன்கள் கொண்டு ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலை. ஆய்வாளர்கள் கண்காணித்தனர்.
இவ்வளவு நீண்ட துாரத்தை மிக வேகமாக நீந்திக் கடக்க வேண்டும் என்பதால் இவற்றால் நடுவில் உணவு உண்ணக் கூட சரியாக நேரம் செலவிட முடியாது.
எனவே இவை தங்கள் உடலில் சேமித்து வைத்துள்ள கொழுப்பிலிருந்து ஆற்றலை எடுத்துக் கொள்கின்றன. பயணம் செய்யும் இரண்டு மாதங்களில் இவை 11,000 கிலோ கொழுப்பை ஆற்றலாக மாற்றிக் கொள்கின்றன.
அதாவது, இவற்றின் சராசரி எடை 30,000 கி.கி. பயண முடிவில் 19,200 கி.கி., எடையை அடைந்துவிடும். அதாவது வெறும் இரண்டு மாதங்களில் 10.8 டன் எடையைக் குறைத்து விடும். வேறு எந்த உயிரினமும் இவ்வளவு வேகமாக எடைகுறைப்பு செய்வதில்லை.