பூமியிலிருந்து 500 கோடி ஒளியாண்டுகள் தொலைவில், கடக ராசி மண்டலத்தில் உள்ளது OJ 287 கேலக்ஸி. இதன் நடுப்பகுதியில் மிகப் பெரிய கருத்துளைகள் இருப்பதை ரேடியோ தொலைநோக்கியான ரேடியோ ஆஸ்ட்ரான் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவின் ஹெபெய் மருத்துவப் பல்கலை, 60 வயதைக் கடந்த 2,354 பேரை வைத்து ஆய்வு மேற்கொண்டது. இதன் வாயிலாக அன்றாடம் 1.22 மில்லிகிராம் தாமிர சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொண்டால் நினைவாற்றல், நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகள் வராது என்று தெரியவந்துள்ளது.
சர்க்கரை சேர்க்காத ‘டயட் சோடா’ பருகும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு நீரிழிவு வகை 2 நோய் ஏற்படும் வாய்ப்பு 38 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலை. ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக ‘நான்-ஸ்டிக்’ பாத்திரங்களின் மேற்பரப்பில் பூசப்படும் ரசாயனங் கள் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கானவை. எனவே இவை இரண்டுக்கும் பாதிப்பில்லாத பூச்சை கனடாவைச் சேர்ந்த டொரன்டோ பல்கலை. ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
நுண்நெகிழிகள் என்றால் அவை ஏதோ கடலில் இருப்பவை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் துலுாஸ் பல்கலை. மேற்கொண்ட ஆய்வில், நாம் நமது வீடுகளில் அன்றாடம் 68,000 நுண்நெகிழித் துகள்களைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியவந்துள்ளது. இதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
3 டி பிரின்டிங் வீடு கட்டப் பொதுவாக கான்க்ரீட் தான் பயன்படும். ஜப்பானில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் மண், சுண்ணாம்பு, இயற்கை நார் பொருட்களைக் கொண்டு 3டி பிரின்ட் முறையில் வீடு கட்டி சாதனை செய்துள்ளது.
பூமியில் இருந்து 35 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு L98 – 59 என்று பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட 2.8 மடங்கு பெரியது. தனது நட்சத்திரத்திலிருந்து இது அமைந்துள்ள தொலைவு, உயிர்கள் வாழ்வதற்குச் சரியான வெப்பநிலையைத் தருவதாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாசாவின் சந்திரா எக்ஸ்ரே தொலைநோக்கி சமீபத்தில் 9 நட்சத்திர மண்டலங்களின் ஒளிப்படத்தை எடுத்துள்ளது. நாசா வெளியிட்ட இந்தப் ஒளிப்படங்கள் தற்போது பரவி வருகின்றன.
மனிதர்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வுக்கூடம் ஒன்றை 2045க்குள் நிறுவத் திட்டமிட்டுள்ளதாகத் தென் கொரியா கூறியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாகர் தீவின் சுந்தரவனக் காட்டில் ஒரு புதிய சிலந்தி இனத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு ‘பிராடுலா அகுமினாடா’ என்று பெயரிட்டுள்ளனர்.