சென்னை, ஆக.14 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகள் தலைமைச் செயலகத்தில் நேற்று (13.08.2025) வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டு நிகழ்வை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
சமத்துவத்தை வலியுறுத்தி சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள், இன்றைய இளைஞர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. புலவர் செந்தலை ந. கவுதமன், பேராசிரியர் வீ. அரசு, முனைவர் மு. வளர்மதி, அ. மதிவாணன் ஆகியோரின் மேற்பார்வையில், பிறமொழிக் கலப்பின்றி இந்த மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன. கடந்த 13.01.2025 அன்று முதல் கட்டமாக 10 தொகுதிகள் வெளியிடப்பட்டன. அவை வெளியான இரண்டு மாதங்களுக்குள் 2,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இதன் மூலம் ரூ.14 லட்சம் அரசுக்கு வருவாயாகக் கிடைத்தது. இந்த விற்பனை, திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை இது எடுத்துக்காட்டுகிறது.
தற்போது வெளியிடப்பட்ட 17 தொகுப்புகளில் கீழ்க்கண்ட படைப்புகள் அடங்கும்: தீண்டாமை –- 2 தொகுதிகள். காங்கிரசும் காந்தியும் தீண்டப்படா தோருக்குச் செய்தது என்ன? – 4 தொகுதிகள் இந்து மதம், மார்க்சியம், மத மாற்றம் – 4 தொகுதிகள், புத்தர் அவரது தம்மம் – 3 தொகுதிகள் பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – 4 தொகுதிகள்.
இந்த வெளியீட்டு நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், மொழிபெயர்ப்புக்கு வழிகாட்டிய பேராசிரியர்கள் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மனநலக் காப்பகங்களில் உள்ளவர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, ஆக 14 முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், மனநலக் காப்பகங்களில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு மற்றும் 54 தன்னார்வ அமைப்புகளால் நடத்தப்படும் மனநலக் காப்பகங்களில் வசிக்கும் 5,944 பேருக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் காப்பகங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் இல்லாததால், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் அவர்களை காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.51 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 51 நோய்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மனநலக் காப்பகங்களில் உள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்?
பாலியல் வன்கொடுமை : கராத்தே பயிற்சியாளருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!
சென்னை, ஆக.14 கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கராத்தே பயிற்சியாளருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் கராத்தே, ஜூடோ உள்ளிட்ட தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்தவா் கெபிராஜ். பயிற்சியின்போது, தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவா், பயிற்சியாளா் கெபிராஜ் மீது புகார் அளித்தார்.
இது குறித்து மாணவி, கடந்த 2021ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை அண்ணாநகர் மகளிர் காவல்துறையினர், கெபிராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வந்தனர்.
கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை வன்கொடுமை செய்ததாக ஒரு மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து மேலும் சில மாணவிகள் புகார் அளித்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஅய்டிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, இந்த வழக்கில் கராத்தே பயிற்சியாளா் கெபிராஜ் குற்றவாளி என அண்மையில் நாள்களுக்கு முன்பு தீா்ப்பளித்தார்.
தற்போது குற்றவாளிக்கான தண்டனை விவரங்களை நீதிபதி வெளியிட்டுள்ளார். அதில், கெபிராஜூக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விவரங்கள் வெளியான போது, தான் எந்த மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததில்லை என மகளிர் நீதிமன்ற வளாகத்தில் கெபிராஜ் கதறி அழுதார்.