சென்னை, ஆக.14 2025-2026ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (13.08.2025) சென்னையில் தொடங்கிவைத்தார்.
திட்டத்தின் விரிவாக்கம்
முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, 2007ஆம் ஆண்டு முதன்முதலில் 15 மாவட்டங்களிலும், சென்னையின் 2 மண்டலங்களிலும் இந்தத் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்தத் திட்டம் சென்னையின் மீதமுள்ள 13 மண்டலங்களிலும், புதிதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் குறித்த தகவல்கள்:
இது ஒரு வகையான க்யூலெக்ஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் நோய். இந்த நோய் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கடுமையான உடல்நலக் குறைபாடுகள் மற்றும் இறப்பையும் ஏற்படுத்தக்கூடியது.
உயிர் பிழைப்பவர்களுக்கும் அதிக அளவில் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 1978ஆம் ஆண்டு முதல் பல்வேறு நோய்களுக்குத் தடுப்பூசி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, 12 வகையான நோய் பாதிப்புகளைத் தடுப்பதற்காக 11 வகையான தடுப்பூசிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.