உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் அலுவல் மொழி மற்றும் வழக்காடும் மொழி அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஆங்கிலமே.
ஆனால் இந்திய அரசியல் சட்டம் அந்தந்த மாநில ஆளுநர் பரிந்துரைத்ததால் குடியரசுத் தலைவர் மாநில மொழியினை கூடுதல் அலுவல் மொழியாக பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கிறது.
தற்போது இந்தியாவில் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்துடன் அந்த மாநில மொழியான இந்தியும் கூடுதல் அலுவல் மொழியாக இருக்கிறது.
அதேபோல தமிழ்நாட்டில் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அலுவல் மொழியாக மாநில மொழியான தமிழை கொண்டு வர தமிழ்நாடு அரசு 2006இல் அன்றைய முதலமைச்சராக இருந்த டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுடன் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த தீர்மானம் குறித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னால் உச்சநீதிமன்ற கருத்தை கேட்க மத்திய சட்ட அமைச்சகம் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
அதேபோல சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து ஒப்புதல் அளித்து அதனை உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பி வைத்தது.
தமிழ்நாடு அரசு அனுப்பிய சட்டமன்ற தீர்மானமும் உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் நிறைவேற்றிய தீர்மானமும் உச்சநீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு தமிழை கூடுதல் அலுவல் மொழியாக பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டதாக அறிகிறோம்.
அந்த கட்டமைப்புகள் என்பது
நீதிபதிகள் தமிழில் தீர்ப்பு எழுதுவதற்கு சிறப்பு பயிற்சி வழங்குவது,
வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதற்கு தொடர்பயிற்சி முகாமை நடத்துவது
சட்ட புத்தகங்கள் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்ப்பது.
நீதிமன்ற தீர்ப்புரைகளை தமிழில் மொழி பெயர்ப்பது,
சட்ட இதழ்களை தமிழில் கொண்டு வருவது மற்றும் தனியார் சட்ட தமிழ் இதழ்களை ஊக்குவிப்பது.
கம்ப்யூட்டரில் தமிழில் இயக்க மென்பொருளை தயாரிப்பது,
கம்ப்யூட்டரில் தமிழில் பயன்படுத்த பயிற்சியளிப்பது.
சுருக்கெழுத்தாளர்களை தமிழில் கம்ப்யூட்டரை பயன்படுத்த பயிற்சி அளிப்பது
தமிழை ஒரு பாடமாக அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பாடமொழியாக கொண்டு வருவது,
தமிழ்நாட்டில் அனைத்து நூலகங்களிலும் சட்ட நூல்கள், இதழ்கள் வாங்குவது,
நீதிபதிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் தமிழில் சட்ட இதழ்களையும் வாங்கித் தருவது.
மொழி பெயர்ப்பாளர் பயிற்சி வகுப்பினை தொடங்குவது
நீதிமன்ற நூலகங்களுக்கு சட்ட தமிழ் நூல்களை சட்ட இதழ்கள் வாங்கி விநியோகிப்பது.
இவையனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களையும் ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்து அதற்கான பலன் முழுவதும் கிட்டும்பட்சத்தில் தமிழை கூடுதல் அலுவல் மொழியாகக் கொண்டு வரலாம் என்று கூறப்பட்டதாக அறிகிறோம்.
2013இல் அப்போதைய சட்ட அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் அவர்கள் சட்டக்கதிர் விழாவில் கலந்துகொண்டபோது குறைந்தபட்சம் நீதிமன்ற தீர்ப்பான இறுதித் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும் தீர்ப்பினை (Operative Portion) மட்டுமாவது தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடலாம். இதற்கான பணியினை மத்திய, மாநில அரசு செய்யும் என்று அறிவித்தார். ஆனால் இன்று வரையில் இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
குடியரசுத் தலைவராக இருந்த திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒரு வழக்குரைஞர் என்பதாலும் ஆங்கிலத்தில் வழக்குகள் நடத்துவதால் வழக்காளிகள் எப்படி சங்கடப்படுகிறார்கள் என்பதை அறிந்த காரணத்தினால் நீதிமன்ற தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மாநில மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என சென்னையில் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது அறிவித்தார். குடியரசு தலைவரே சொன்னதால் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அவ்வப்போதே சில தீர்ப்புகளை மாநில மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகின்றது.
இது குறித்து குடியரசு தலைவர், பாரத பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில முதல் அமைச்சர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என அனைவரும் உரிய கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்மொழியினை கூடுதல் அலுவல் மொழியாக கொண்டு வர தமிழ்நாடு அரசு அனைத்தும் செய்யும் எனவும் உரிய பரிந்துரையை உச்சநீதிமன்றம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் இன்று வரையில் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் அலுவல் மொழியாக தமிழ் வரவில்லை. ஆனால் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் அந்த மாநில மொழி ஹிந்தி என்பதினால் மத்திய அரசு அலுவல் மொழி ஹிந்தி என்பதினால் மத்திய சட்டங்களும், மாநில சட்டங்களும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்புகளும் ஆங்கிலத்தில் வெளிவரும்பொழுதே ஹிந்தியிலும் வந்து விடுகின்றன. ஆகவே அவர்கள் எளிதில் உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக ஹிந்தியினையும் நடைமுறைப்படுத்த முடிகிறது.
தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு பணிகளை செயல்படுத் தினால் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக வருவது எளிதாகி விடும். இதனை தமிழ்நாடு அரசும் சென்னை உயர்நீதிமன்றமும் விரைந்து செயற்படுத்த வேண்டும். இதனையே இன்றைய தமிழ்நாடு மக்களும் வழக்கறிஞர்களும் வழக்காளிகளும் பெரிதும் எதிர்நோக்கியுள்ளார்.
நன்றி: ‘சட்டக் கதிர்’ ஆகஸ்டு 2025