நேற்றைய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரையில் (இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில்) குறிப்பிட்டிருந்தபடி, டாக்டர்கள் ஆய்வு, அறிவுரை, பரிந்துரைகளுக்குப் பிறகு, மருந்துகளை எடுத்துக் கொள்ளும் கட்டத்தில், ‘‘உங்கள் உடம்பு என்ன சொல்கிறது? அதாவது அந்த சிகிச்சை முறையை உடம்பு ஏற்றுக் கொள்ளுகிறதா? அல்லது ஏற்க மறுக்கிறதா, அதன் பக்க விளைவுகளாக ‘புதிய பிரச்சினை’கள் ஏற்படுகின்றனவா?’’ என்பது மருத்துவப் பயனாளியான உங்களுக்குத்தானே தெரியும்? எனவே தான் டாக்டர் சொன்ன மருந்துகளை உட்கொண்ட பிறகு, உடம்பு என்ன செய்கிறது என்ற பொருளை உணர்த்தவே (Listen to your body) என்று டாக்டர்களேகூட நமக்கு அறிவுரையாக வழங்குகின்ற நிலை இருக்கிறது.
இன்னும் சிலர் (நண்பர்கள், பழகுபவர்கள் – அல்லது உறவுக்காரர்கள்) ‘‘நான் உட்கொண்டது அந்த மருந்தை அல்ல, வேறொரு சிகிச்சை முறையைச் செய்து கொண்டேன்; ‘கப்’ என்று நின்று விட்டது; நீங்கள் அதனை முயன்று பார்க்கலாமே’’ என்று கூறும்போது, உங்களுக்குக்கூட ஒரு வகை சபலம் ஏற்படலாம். தயவு செய்து அந்தத் தவறைச் செய்து விடாதீர்கள். காரணம்; ஒவ்வொருவரின் உடம்பும் ஒவ்வொரு தனி அமைப்பு ‘ஒருவருக்கு ஏற்பது மற்றொருவருக்கு ஏற்கும்’ என்று சொல்ல முடியாது. எனவேதான் ‘குறுக்கு வழி’ மருத்துவச் சபலங்களுக்கு நாம் ஆளாகி விடக் கூடாது.
‘Listen to your Body’ – ‘உடம்பு சொல்வதைக் கேளுங்கள்’ என்பதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை என்பதால் மருத்துவ ஆலோசனை – பக்க விளைவுகளைப்பற்றி ஆராயாமல் புதுப் பரிசோதனைக்கு (பேராசை) ஆட்பட்டு விடாதீர்கள். நமது உடம்பே ஓர் அருமையான எச்சரிக்கை மணி; உறுப்புகளே பாதுகாப்பு கவசம்தான், வருமுன்னர் அது நம்மை எச்சரிக்கிறது; நாம் தான் அதனை அலட்சியப்படுத்தி நடந்து கொண்டு ‘‘சிறுமுள்ளை, மரமான பின் வெட்டி எறிய முயலும்’’ பளுவான வேலையில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
இதனடிப்படையில், நாளும் எத்தனை அடிகள் (Steps) நடப்பது என்பது, அவரவர் உடல் ஏற்பதையும், அவர்களுக்குள்ள உடல் கூற்றினையும், உபாதைகள், வலிகள், நோய் மிரட்டல் – இவற்றைப் பொறுத்தது! 10,000 அடிகள் (Steps) கதை எப்படி ஜப்பானிய மார்க்கெட்டிங் விளம்பர இயக்கத்திலிருந்து முளைத்தது என்பதை, டாக்டர்கள் சுட்டிக்காட்டியதை நேற்று (13.8.2025) விளக்கினோம்.
அவரவர் நிலைமையை உத்தேசித்து வாய்ப்புக்கு ஏற்ப என நிர்ணயித்துக் கொள்வதே விரும்பத்தக்கது.
இதன் முக்கியத் தத்துவம், நமது உடல் ஒரே இடத்தில் பல மணி நேரம் படுத்தோ அல்லது உட்கார்ந்தே தொலைக்காட்சி மற்றும் பலவற்றில் மூழ்கிக் கிடப்பதோ கூடாதென்பது! இதய நோய் முதல் மறதி நோய் வரை வரக் கூடும் என்பதை எச்சரிக்கத்தானே கூறப்படுகிறது!
அதைக் கடைப்பிடிப்பது அவரவர் பணி, அன்றாட வாழ்வுக்கு ஏற்பவே அமைதல் பெரிதும் ஏற்கத்தக்கது அல்லவா?
முதியவர்கள் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் தொடர்ந்து அமர்ந்திருப்பதைச் சற்று மாற்றி, வீட்டில்கூட, எழுந்து, ஒரு சுற்று சுற்றி, தண்ணீர் குடிப்பது அல்லது கவனத்தைச் சில விஷயங்களில் செலவிடுதல், குடும்ப உறுப்பினர்களிடம் பேசித் திரும்புதல் (சிறு உரையாடல்) அல்லது நின்று கொண்டோ, நடந்தோ இயற்கைக் காட்சிகளை ரசித்தல் – இவற்றைச் செய்து மீண்டும் தம் பணியைத் தொடரலாமே!
அலுவலகங்களில்கூட பணி செய்வோர் தேநீர் இடைவேளையில் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து சில அடிகள் நடந்து பிறகு அங்கே வைத்திருக்கும் தேநீரை அருந்தித் திரும்பலாம்; உங்கள் மாடியிலிருந்து கீழே இறங்கி நடந்து பிறகு 10,15,20 மணித் துளிக்குப்பின் சென்று தங்கள் இருக்கையில் பணியைத் தொடரலாம்.
இப்படி சின்னச் சின்ன விஷயங்களில்கூட நமது உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாமே!
பொதுக் கூட்ட மேடைகளில் எங்களைப் போன்ற முதன்மைப் பேச்சாளர்களுக்கு 3 அல்லது 4 மணி நேரம் ‘அன்பு – பாராட்டுத் தண்டனை’ தருவதிலிருந்து, எழுந்து ஒப்பனை அறை (Rest Room or Toilet) செல்ல விரும்பினாலும் – சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக்கூட அடிக்கடி சிறுநீர் கழித்தல் உணர்வு ஏற்படுவதைக்கூட அடக்கிக் கொண்டு இருக்கும் வேதனையும், சோதனையும்கூட ‘வழமை’யாகி விட்டது. இருந்தும் நடந்து சொல்லும் வாய்ப்பும் சற்று கிடைக்கிறது.
(நாளையும் தொடரும்)