புதுடில்லி, ஆக.13- கடந்த 2003 முதல் 3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஓலைச்சுவடி பாரம்பரியத்தின் மூலம் இந்தியாவின் அறிவு மரபை மீட்பது என்ற தலைப்பில் முதல் பன்னாட்டு ஓலைச்சுவடிகள் பாரம்பரிய மாநாடு ஒன்றிய அரசு சார்பில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
கடந்த 2003 முதல் 3.5 லட் சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இது வரை 92 ஓலைச்சுவடி பாதுகாப்பு மய்யங்கள் நிறுவப் பட்டுள்ளன. கூடுதலாக 93 ஓலைச்சுவடி வள மையங்கள் உள்ளன. அவற்றில் 37 செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு கல்வியியல் கல்லூரிகளில்
முதுநிலைக் கல்வியியல் (எம்எட்) சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆக.25 கடைசி
சென்னை, ஆக.13- அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலைக் கல்வியியல் (எம்எட்) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 11.8.2025 அன்று தொடங்கியது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசுக் கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-2026) மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு 11.8.2025 முதல் 20.8.2025ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in தளத்தை பயன்படுத்தி ஆக. 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 26 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும். முதலாமாண்டு வகுப்பு செப். 1ஆம் தேதி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.