தமிழ்நாடு அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது
சென்னை, ஆக.13- தமிழ்நாட்டில் கார், ஆட்டோ, பைக் டாக்சி கட்டணத்துக்கு புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்யவுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பயணிகள் மற்றும் வாடகை வாகனத்தினர் இடையே ஒருங்கிணைப்பாளர்களுக்கான எந்தவொரு முறையான கட்டமைப்பும் இல்லை.
குறிப்பாக, பைக் டாக்சிகள், தெளிவான கட்டண விதிகள், பாதுகாப்பு அம்சங்கள் அல்லது குறைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் என எதுவுமின்றி ஒரு சட்டபூர்வமற்ற நிலையில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கார், ஆட்டோ மற்றும் பைக் டாக்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கான முதல் கொள்கையை ஆகஸ்ட் மாத இறுதியில் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட உள்ளது. இது ஒன்றிய அரசின் மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் மூலம் ஒருங்கிணைப்பாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் ஆகியோரின் நலன்கள் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அடிப்படைக் கட்டணம்…
இந்த புதிய கொள்கையில் பைக் டாக்சிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட இருக்கின்றன. அதன்படி பயணத்தின் முதல் 3 கிலோ மீட்டருக்கு மாநில அரசே அடிப்படை கட்டணத்தையும் நிர்ணயிக்கும். அதைத்தொடர்ந்து அடிப்படைக் கட்டணத்தில் தேவைக்கு ஏற்ப 50 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை டைனமிக் விலையை நிர்ணயிக்க அனுமதிக்கப்படும்.
இதில் சொந்த வாகனங்களை பயன்படுத்தும்போது ஓட்டுநர்களுக்கு கட்டணத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத பங்கு கிடைக்கும். ஒருங்கிணைப்பாளருக்கு சொந்தமான வாகனங்களில் உள்ள ஓட்டுநர்கள் 60 சதவீதம் பெறுவார்கள். நியாயமற்ற முறையில் பயணங்களை ரத்து செய்தால் அபராதமும் விதிக்கப்படும். இதையொட்டி அனைத்து டிஜிட்டல் பயணத்தளங்களுக்கும் 6 ஆண்டு காலத்துக்கு ரூ.5 லட்சம் உரிமக் கட்டணம் நிர்ணயிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.
‘பக்தி’ ஒழுக்கத்தை வளர்க்கும் லட்சணம்
பிரசாதம் வழங்குவதற்கும்
நீதிமன்றம் செல்ல வேண்டுமோ?
காஞ்சிபுரம், ஆக.13- சென்னை உயர் நீத்மன்றத்தில், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவிலில் கடந்த ஜூலை 4ஆம் தேதி பிரசாத கடைக்கு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஏற்கெனவே சேர்க்கப்பட்ட நிபந்தனையான, வைணவ பிராமணர் என்ற நிபந்தனை காரணம் எதுவும் கூறாமல் நீக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், 13.8.2025 அன்று (அதாவது இன்று) நடைபெறும் ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (12.8.2025) விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், “ஒரு பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசாத விற்பனையை அனுமதிக்க முடியாது. வைணவ கோவில்களில் பிரசாத கடை நடத்தி 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, “வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவுதானே தவிர, அது தனிப்பட்ட ஒரு ஜாதி இல்லை. அதனால், பிரசாத கடை நடத்தும் விதிகளில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்ற உத்தரவிட்டார்