திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் நிருவாகத்தை குடில் நிருவாகத் திற்கு தொடர்பில்லாத திரு.இராமமூர்த்தி என்பவர் தலைமையிலான குழுவினர் முறைகேடான வகையில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தனது தலைமையில் குடில் நிர்வாகம் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார்.
இது தொடர்பாக குடில் நிருவா கத்தை தற்போதைய தலைவர் பிரம் மச்சாரி வீரச்சந்திரன் அவர்களே தொடர்ந்து நடத்திட வேண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இறுதிக்கட்ட விசாரணையில் உள்ள நிலையில் திரு.இராமமூர்த்தி தரப்பினர் குடிலுக்குள் அடியாட்களுடன் அத்துமீறி நுழைந்து தலைவர் திரு.வீரச்சந்திரன் அவர்களையும் மற்றும் பணியாளர்களையும் வெளியேற்ற நடைபெற்ற முயற்சி கடந்த சில நாள்களுக்கு முன்பு முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் இராமகிருஷ்ண குடிலின் எதிர்கால நலன் கருதியும் அங்கு பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் திருப்பராய்த்துறை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் சார்பாக “திருப்பராய்த்துறை இராம கிருஷ்ணகுடில் பாதுகாப்புக்குழு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பாக திருப்பராய்த்துறை கடைவிதியில் வருகின்ற 17.08.2025 ஞாயிற்றுக்கிழமையன்று குடில் முன்னாள் மாணவர்கள், கம்யூனிஸ்ட் இயக்கம், விடுதலை சிறுத்தைகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஒருநாள் அடையாள பட்டினிப் போராட்டம் நடைபெற இருப்பதாகப் பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது.