ஒவ்வொருவரும் சுமார் 10,000 அடிகள் (Steps) நடப்பது நல்ல இலக்கு என்று பொதுவாக சொல்லப் பட்டாலும் அது எல்லோருக்கும் ஏற்புடையது அல்ல.
BBC Newsஇல் ஜோஷ் எல்ஜின் என்பவர், சில ஆய்வு முடிவுகளை மேற்கோள்காட்டி, இது தொடர்பான பல அரிய தகவல்களையும் விவாதக் கருத்துரைகளையும் நன்கு தருகின்றார். அதைத்தான் நம் வாசக நேயர்களுக்குப் பயன்பட வேண்டுமென இங்கே நான் தொகுத்து தருகிறேன்.
பிரபல மருத்துவ ஆய்வு ஏடான ‘Lancet Public Health’ (லேன்செட் பப்ளிக் ெஹல்த்) என்ற இதழில் ‘பல உடற்கோளாறுகள், நோய்கள் – உதாரணமாக புற்றுநோய் (Cancer), மறதிநோய் (Dementia), இதய நோய்கள் (Heart diseases) உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 7,000 அடிகள் (Steps) நடைப்பயிற்சி செய்தால் போதுமானது’ என்று நடைமுறைக்கு ஒத்த வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘‘நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் (Steps) நடை என்பது ஒரு பெரிய ஆய்வு செய்து அதன் மூலம் கண்டறிந்த ஓர் உண்மை என்று கூற முடியாது’’ என்று ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக் கழக ஆய்வாளர் – பேராசிரியர் டாக்டர் மெலடி டிங் (Dr. Melody Ding) கூறுகிறார்.
அது ஓரு பொதுவான உத்தேச அறிவுரைதான்! 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்ற கணக்கு எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் 1960இல் ஜப்பானில் ஒரு வியாபார உத்தியாக (Marketing Campaign) அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறும் இவர், மேலும் கூடுதல் தகவல்களையும் தருகிறார். டோக்கியோவில் 1964இல் உலக ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றன. Pedometerஇல் ஒரு புதிய பிராண்ட் விற்பனைக்கு அறிமுகமாயிற்று. அதன் பெயர் ‘Manpo – kei’. ‘மேன்போ – கெய்’ என்றால் ஜப்பானின் மொழியில் ‘10 ஆயிரம் அடிகள்’ என்று பொருள். அதிலிருந்துதான் இந்த கணக்கு பொதுவாக மாறியது.
முன்பு ‘தி லேன்செட்’ (The Lancet) உலக முழுவதும் உள்ள சுமார் 1,60,000 பெரியவர்களைக் (Adults) கொண்டு ஓர் ஆய்வை நடத்தியது. அதில் ஒரு நாளைக்கு 2000 அடிகள் மட்டுமே நடப்ப வர்களோடு 7,000 அடிகள் நடப்பவர்களையும் ஒப்பிட்டு, 7,000 அடிகள் நடப்பது நமது நோயற்ற வாழ்வுக்கு உதவிடும் என்று கூறி ஒரு பட்டியலேயே தந்தது.
இதனால் –
- இதய சம்பந்தமான நோய்கள் 25 சதவிகிதம் குறையக் கூடும்.
- புற்றுநோய் 6 சதவிகிதம் குறையலாம்.
- மறதி நோய் (Dementia) 38 சதவிகிதமும்,
- மனஅழுத்தம் (Depression) 22 சதவிகிதமும் குறையும்.
2000 அடிகள் என்பது மிகவும் குறைவு. அவர்கள் அளவீட்டின்படி; 7,000 அடிகள் நடக்க இயலாவிட்டால் பரவாயில்லை; 4000 அடிகளாவது நடக்க வேண்டும். இதய வலிமைக்கும், நலத்திற்கும் உகந்தது என்று ஆலோசனைகள் கூறினார்கள்.
ஜான் ஸ்டிரைடு (Jon Stride) என்பவர் நாள் ஒன்றுக்கு, 16,000 அடிகள் நடப்பதாக பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்த பாத அடி கணக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பது வேண்டுமா?
அவரவர் சக்தி, மன வலிமை அளவறிந்து ஈடுபடுவதே நல்லது என்றார். இதை நாம் எதிலும் எப்போதும் மறக்கவே கூடாது!
2022 இல் தன்னுடைய 64ஆவது வயதில் இதய நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மீண்டு வந்தவரான இவர், அதே வயதில் இதய நோய்க்கு ஆளாகி மீண்டார். தன்னுடைய மாமனரை முன் உதாரணமாகக் கொண்டு, ஒவ்வொரு நாளும் இங்கிலாந்து டோர்செட் (Dorset) பகுதியில் ஒரு சிறிய நகரத்தில் காலையில் நிறைய நடப்பவர்களில் இவரும் ஒருவர். தனது அன்றாட நடைப் பயிற்சி சகாக்களிடையே, கையில் நாயைப் பிடித்தவாறு நடக்காத ஒரே ஒருவர் இவர்தானாம்! சொல்லி சிரிக்கிறார்.
இப்படிப்பலப்பல கருத்துகள் சொல்லப்பட் டாலும் நமது உடல் என்ன சொல்லுகிறது என்பதே முக்கியம்.
Listen to your body; then Listen to your Doctor என்பது ஒரு முக்கிய நடைமுறை அறிவுரை அல்லவா?
உங்கள் உடம்பு என்ன சொல்கிறது என்பதை முதலில் கேளுங்கள். அடுத்து டாக்டர் சொல்வதைக் கேளுங்கள். பகுத்தறிவுப்படி முடிவு எடுங்கள்.
(தொடரும்)