சென்னை, ஜூன் 9 சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
அதன்படி கடந்த மாதம் 1-ஆம் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக் கிறது. இதனிடையே கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகு வாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது கண்ட லேறு அணையில் இருந்து திறந்திருக்கும் தண்ணீரை தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகறிது.
இதற்கிடையே ஆந்திராவில் அவ்வப் போது கோடை மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளனர். இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகமாகியது. நேற்று (8.6.2023) காலை நிலவரப் படி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண் ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டி ருப்பதை கருத் தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம் பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினா டிக்கு 250 கன அடி வீதம் இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப் படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நீர்மட்டம் 27.71 அடியாக பதிவானது. 1.271 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.