தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப தமிழ்நாடு அரசு அழைப்பு!
சென்னை, ஆக. 12 சென்னை மாநகராட்சியின் 5 6 ஆம் மண்ட லங்களில் தூய்மைப்பணி ஒப்பந்தத்தைத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்து, மாநகராட்சி அலுவலகம் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கு.பாரதி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கிற்கு பதில் மனு தயாராக உள்ளது. இருந்தாலும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்று கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாகவும், அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு வக்கீல் வினோத் என்பவர் ஆஜராகி, ‘‘மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த போராட்டத்தை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால் அந்த மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம் என்று அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். பணிப் பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொதுநலம் கருதி, பணிப் பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்குத் திரும்புமாறு தூய்மைப் பணி யாளர்களுக்கு சென்னை மாநாகராட்சியும் வலியுறுத்தியுள்ளது.